தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார்.
அவர் உரை விவரம் வருமாறு:
தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் தோன்றித் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து – சொல் – பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்றுவரை அழியாமல் தமிழை ஆண்டுகொண்டிருக்கின்றன. 68 ஆண்டுகொண்ட இந்திய அரசமைப்புகூட 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கணிக்கப்படுகிற தொல்காப்பியம் திருத்தம் தேவையில்லாத திறம் கொண்டிருக்கிறது. வடமொழியும் வடநாட்டார் பண்பாடும் தமிழர்மீது வல்லாதிக்கம் செலுத்தத் தலைப்பட்ட காலத்தில் தமிழின் மொழி மரபையும் தமிழர்களின் பண்பாட்டு மரபையும் நீர்த்துப்போகாமல் காத்துவைத்த பெருமை தொல்காப்பியத்துக்குண்டு.
தொல்காப்பியம் ஓர் அறிவுக் களஞ்சியம். உயிர் – உயிர்மெய் – சார்பெழுத்துக்கள் சேர்த்து தமிழின் மொத்த எழுத்துக்கள் 33தான், தமிழ்நாட்டுக்கு எல்லை தெற்கே குமரிமுனை; வடக்கே வேங்கடமலை, வடசொற்களில் வடவெழுத்துக்களைக் களைந்து தமிழுக்குள் புழங்கலாம், நாடுகாக்க மாண்ட வீரனுக்கு நாட்டப்பட்ட நடுகல் மரபிலிருந்துதான் தமிழர்களின் தெய்வவழிபாடு பிறந்தது. இப்படி ஆயிரம் செய்திகள் தொல்காப்பியத்தில் செறிந்து கிடக்கின்றன.
இன்றைய காவிரிப் பிரச்சனைக்கும் தொல்காப்பியத்துக்கும்கூடத் தொடர்பிருக்கிறது. இந்த மண்ணுக்கென்று காலங்காலமாக உரிமைப்பட்ட காவிரி ஆறு இன்று மறுக்கப்படுகிறது. 1924இல் 575 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட்டது. 1984இல் 361 டி.எம்.சி யாகவும், 1991இல் 205 டி.எம்.சி யாகவும், 2007இல் 192 டி.எம்.சி யாகவும் குறைக்கப்பட்டது. 2018 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 177.25 டி.எம்.சியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் பாலைவனம் என்று தனிநிலம் கிடையாது. முல்லையும் குறிஞ்சியும் நீர்வளம் இழக்கும்போது பாலை நிலமாய்த் திரிகின்றன. இப்போது காவிரி மறுக்கப்பட்டால் தஞ்சை மண்டலமாகிய மருதநிலமும் தன்னிலை திரிந்து பாலைவனமாகிவிடும். இதைத்தான் ‘மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்’ என்கிறார் தொல்காப்பியர். இந்திய இறையாண்மை இதை ஏற்றுக்கொள்கிறதா? தண்ணீர்தான் கேட்டோம்; எங்கள் நிலத்தைப் பாலைவனமாக்கி எங்கள் வாயில் பாலை ஊற்றுவதா?
பட்டினப்பாலையும் சிலப்பதிகாரமும் தமிழ்நாட்டுக்கு எழுதிவைத்த உயில்தான் காவிரி. அது மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம். எங்கள் இலக்கியங்கள் எல்லாம் புலமையின் பொழுதுபோக்குகள் அல்ல. அறுந்துபோகாத வரலாற்றுச் சங்கிலிகள்; உடைக்க முடியாத உரிமைச் சாசனங்கள்.
பண்டிதர் கூடங்களிலும் மடங்களின் மாடங்களிலும் மட்டுமே அறியப்பட்ட தொல்காப்பியத்தைக் கடைசித் தமிழனின் கைபேசிக்குள் வாசிக்கத்தர வேண்டும் என்பதே என் விஞ்ஞான விருப்பம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...