Latest News :

குடும்ப திகில் படமாக உருவாகும் ‘கண்மணி பாப்பா’!
Sunday May-20 2018

வனஷாக்‌ஷி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்மணி பாப்பா’. நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் - மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பு தான் ’கண்மணி பாப்பா’ திரைப்படம்.

 

கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு, எதிர்பார்த்ததைப் போல் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் கையிருப்பும் கரைந்து போவதால், எதிர்மறை எண்ணம் தலைதூக்கத் துவண்டு போகிறார். அவரது மனைவி தான் அவருக்கு ஆறுதலாக இருந்து நம்பிக்கை தந்து வருகிறார். ஒருகட்டத்தில் அவருக்கு வர வேண்டிய தொகை முழுதும் கிடைத்து விட, தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்க நினைக்கிறார். அதற்காக அழகான ஒரு வீட்டையும் தேர்வு செய்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நொடியிலிருந்து அவரது குழந்தையைச் சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என புரியாமல் குழம்பிப் போகிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைக்கும் தெரியாமல் இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். நாயகன் அந்த முயற்சியில் இருக்கும் போதே, அவரது குழந்தை ஒரு மர்ம நபரால் கடத்தப்படுகிறாள்.

 

எதற்காக அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன?, அந்த வீட்டிற்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு?, குழந்தையைக் கடத்திய மர்ம நபர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? இவற்றை எல்லாம் அந்த நாயகன் எவ்வாறு கண்டு பிடிக்கிறார்? என்பதை முழுக்க முழுக்க ஒரு குழந்தையைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் திகிலான திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீமணி.

 

இப்படத்தில் ’தொட்டால் தொடரும்’, ’சட்டம் ஒரு இருட்டறை’, ‘6 அத்தியாயங்கள்’ போன்ற படங்களில் நடித்த தமன் குமார் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ  நடித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி, கண்மணி பாப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில்  நடித்திருக்கிறார்கள்.

 

எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, கிருஷ்ணமூர்த்தி படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஸ்ரீசாய்தேவ் இசையமைப்பில், பாடல்களை எம்.சி.சாரதா, சிவசங்கர் எழுதியிருக்கிறார்கள். நடன இயக்குநராக மது, பாம்பே பாஸ்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஸ்டண்ட் இயக்குநராக எஸ்.ஆர்.முருகன் பணிபுரிந்துள்ளார்.

Related News

2653

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...