Latest News :

தனி நபர் விருப்பம் சார்ந்து தான் ஊடகங்கள் இயங்குகின்றன - வைரமுத்து பேச்சு
Tuesday June-12 2018

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட கவிஞர் வைரமுத்து, “ஊடகங்கள் அதன் முதலாளி எனும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன” என்று கூறினார்.

 

நிகழ்ச்சியில் மேலும் பேசிய அவர், “எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும்  எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. 

 

இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம். ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள்  இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப் பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரியவற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம். எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. 

 

இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும். போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டா? தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா?, சூரியனுக்கு வயதுண்டா?, காற்றுக்கு வயதுண்டா? கடலுக்கு வயதுண்டா?, மலைகளுக்கு வயதுண்டா? போராட வயதுண்டா? நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா?

 

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? 

 

எரியும் நெருப்பில்  இளையது மூத்தது உண்டா? என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக்  ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை, போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ்சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார்.தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார். எல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என்று நம்புவது மூட நம்பிக்கை. வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்? எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார்? இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும். 

 

அரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும். அப்போதுதான் அது உளவுத் துறை. இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா ஊடகங்களும் ஊடக  முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன. அதையும்  தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்து இப்படத்தை வெற்றி பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .

 

அரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது. ஒடுக்கு முறையை விட்டு விட்டு போராட்டங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும். அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக்  ராமசாமி  போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.

Related News

2784

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...