நடிகர் சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த தமது 100வது படத்தின்போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார். கடந்த 39 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுகான, ’சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) மட்டும் பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதில் சில மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் குறிப்பாக கராத்தேவில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், தங்க பதக்கம் பெற்ற வேலூர் மாணவி சுவாதி அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அது மட்டும் அல்லாமல் அரசு பள்ளியில் படித்து, முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் கார்த்தி என்ற மாணவர் அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வரும் அறிவரசன் அவர்களின் வழிகாட்டுதல்களில் கிசோர் என்ற மாணவர் (Electronic and Robotics) ஈரப்பதத்தை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளர். அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கௌதம் என்ற மாணவர் (Sliding Platform) என்ற கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியானது ரயில் விபத்துகளை முன் கூட்டியே கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன மாணவர் சின்னகண்ணு என்ற மாணவர் மலை பகுதியில் போக்குவரத்துக்கு வசதி இன்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து தேசிய அளவில் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் பெற்றுள்ளார். அது போன்று சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர். பிரபு அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார் ”1979 ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை ’ தொடர்ந்து, ப்ளஸ்டு தேர்வில் சிறந்த உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கபடுத்தி வருகிறது. 31 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.
விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார். அகரம் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா பேசுகையில், “கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.
அகரம் இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்கள் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சின்ன எண்ணத்தால், இப்போது தமிழக மக்களின் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள்.
நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது. பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது.
அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அது தான் பெரிய நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா - அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.” என்றார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...