Latest News :

’பூமராங்’ கமர்ஷியலாகவும், கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும் - இயக்குநர் கண்ணன்
Sunday August-05 2018

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் ‘பூமராங்’. அதரவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடிக்க, இந்துஜா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். 

 

ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. பாடல்கள் குறுந்தகடை தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன் ஆகியோர் வெளியிட, சுஹாசினி மணிரத்னம், சமுத்திரக்கனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு, “கண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர். நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் நான் ஒரு படம் தயாரிப்பேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகரஜன் பேசுகையில், “நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளி வீட்டுக்கு போகும் போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்ன போது, அவர் தான் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் ‘பாணா காத்தாடி’. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இயக்குநர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இயக்குநராக வேலை பார்த்தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன் பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்களின் இயக்குநர்.” என்றார்.

 

தயாரிப்பாள தனஞ்செயன் பேசுகையில், “கடந்த ஆண்டு ’இவன் தந்திரன்’ படத்தை நானும், கண்ணனும் சேர்ந்து தயாரித்திருந்தோம். பெரிய வெற்றி பெற வேண்டிய படம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தின் வெற்றி கை நழுவி போனது. ஒரு சில மாதங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அதர்வா கொடுத்த வாய்ப்பு தான் இந்த ’பூமராங்’. இயக்குநருக்கு நடிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது. சரியான காலகட்டத்தில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.” என்றார்.

 

சுஹாசினி மணிரத்னம் பேசும் போது, “’மூன்றாம் பிறை’ படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது. திட்டமிட்டபடி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குநராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் ’விஸ்வரூபம் 2’ படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி.” என்றார். 

 

Boomerang Audio Launch

 

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசும் போது, “கண்ணன் என் நண்பன், உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசும் போது, “கண்ணன் சார் ’இவன் தந்திரன்’ படத்தின் போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கணும். ஒரு இயக்குநருக்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. எனக்கு வனமகன் படத்தில் ஜெயம் ரவி கொடுத்த ஆதரவை போல, இங்கு அதர்வா மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “நானும் ஒரு தமிழ் பையன் தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் இசையமைக்க முடியாத சூழல். ஆனாலும் கண்ணன் சார் தான் நான் வெயிட் பண்றேன், நீ தான் இசையமைக்கணும் என சொல்லி என் மீது நம்பிக்கை வைத்தார். நான் இசையமைப்பாளர் ஆக மிக முக்கியமான காரணம் ஏ.ஆர்.ரகுமான் தான். ரோஜா பாடல்களை நான் குழந்தையாக இருக்கும்போது கேட்டேன், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.” என்றார்.

 

அதர்வா முரளி பேசும் போது, “நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹாசினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை.” என்றார்.

 

இயக்குநர் கண்ணன் பேசும் போது, “2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

Related News

3189

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery