நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.
'எங்கேயும் எபோதும்' புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தற்போது இசையமைத்துள்ள 'தீதும் நன்றும்' படம் குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
"பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்டே வந்து, இது சின்ன பட்ஜெட் படம்.. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை.. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார்.. எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது. கதையும் எனக்கு பிடித்திருந்தது.. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன்..
இயக்குனர் ராசு ரஞ்சித்தின் பாடல்கள் குறித்த ஆர்வம் எனனை ஆச்சரியப்படுத்தியது.. பாடல்கள் கமர்ஷியலாகவும் அதே சமயம் க்ளாஸாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு இசையமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்கிற விஷயம் தெரிந்தவராகவும் இருக்கிறார்.
ரெகுலர் சினிமா ஆட்களுக்கும் இந்த டீமுக்கும் நிறையவே வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. ரொம்பவே வேகமாக, அதேசமயம் புரிந்துகொள்ள கூடிய விதமாக காட்சிகள், கோணங்களை அமைத்திருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற வெறி ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. . நான் எப்போதுமே எல்லோருடனும் எளிதில் இணைந்துகொள்வேன் என்பதால்இந்த குழுவினருடன் எனக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. ரொம்ப லோக்கலா வேலை பார்த்திருக்கோம்.. அதேசமயம் படத்தின் மெரிட் குறையாமலும் பார்த்துக்கொண்டுள்ளோம்.
ரீரெக்கார்டிங் முடித்துவிட்டு படத்தை பார்த்தால், படம் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் புதுமுகங்கள் போலவே தெரியவில்லை. பொதுவாக சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக போய்விட்டால் ஆபத்து. ஒரு சில பெரிய இயக்குனர்கள் தான் இதை சரிவர கையாளுவார்கள்.. இந்தப்படத்தில் இயக்குனர் ராசு ரஞ்சித் அப்படி ஒரு கைதேர்ந்த இயக்குனர் போல சென்டிமென்ட் காட்சிகளை அமைத்திருந்த விதம் அவரைப்பற்றிய ஆச்சர்யத்தை இன்னும் அதிகமாக்கியது. இது அவரது முதல் படம் மாதிரியே தெரியவில்லை.
இந்தப்படம் கமர்ஷியலா ஹிட்டாகிறதுக்கு உண்டான பல அம்சங்கள் இதுக்குள்ள இருக்கு.. ஏ,பி,சின்னு மூணு தரப்பு ஆடியன்ஸுக்கும் இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தில் 'பட்டு ரோசா'ன்னு ஒரு பாடல் மெலடியுடன் கூடிய குத்துப்பாட்டாக உருவாகியுள்ளது. அழகான வரிகளை கொடுத்துள்ளார் பாடலாசிரியர் முத்தமிழ்.. மற்ற பாடல்களும் கதைக்கு தேவையான இடத்தில் தான் அமைந்திருக்கிறது.
பாடல்கள் தேவையா என சிலர் கேட்கிறார்கள்.. பாடல்கள் தான் ஒரு படத்தோட முகவரியே.. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாக அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கி, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை எளிதாக்குகிறது.. படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு ரிலாக்ஸ் தருவதும் அதுதான்.. சில பாடல்கள் கதையை மீறி படத்திற்குள் திணிக்கப்படும்போது, ரசிகர்களுக்கு போரடிப்பது தவிர்க்க முடியாதுதான். எதிர்காலத்தில் பாடல்களை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டுவிட்டு, படத்தில் அவற்றை கட் பண்ணிவிடுகின்ற நிலை கூட வரலாமோ என்னவோ..?" என ஒரு புதிருடன் பேட்டியை முடிக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...