வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர், பா.விஜய், இயக்குநர்கள் கே.பாக்ராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி, மேகாலீ, யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் கு ஞானசம்பந்தம் பேசுகையில், “இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம்பெண்..என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்து விடுகிறார்கள். இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா.விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா.விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.
தமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான். ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர். நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார். ‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார். இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா.விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.” என்றார்.
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், “எனக்கும் பா.விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது. பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.
இந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன். இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார். இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் பேசுகையில், “நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா.விஜயைப் பிடிக்கும். இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா.விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றிவிடுவார். ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.
நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா.விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன். இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள். அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “என்னுடைய உதவியாளராக பா.விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது. அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசை பயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார். இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா.விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.
இந்த படத்திற்காக பா.விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை. அதே போல் பா.விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பா.விஜய் பேசுகையில், “இரண்டு வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த ஆருத்ரா. 1996 ஆம் ஆண்டில் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் அவர்களின் ஆசியுடன் ஞானப்பழம் என்ற படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானேன். 22 ஆண்டுகளுக்கு பிறகும், கடந்த வாரம் வெளியான மோகினி என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ’மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற படத்திற்கும் பாடல் எழுதியிருக்கிறேன். கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரம்மாண்டமான பாடலாசிரியர்கள் வாழும் இந்த திரையுலகில் 22 ஆண்டு பயணமென்பது எளிதானதல்ல. இதற்கு காரணமான என்னுடைய குருவிற்கும், ஆதரவளித்து அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தேதியில் படம் தயாரிப்பதை விட, அந்த படத்தை நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடைய வைப்பது சவாலான காரியமாகும். அந்த விசயத்தில் எமக்கு பேருதவி புரிந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தமிழ் திரையுலகில் பழைய படத்தில் யார் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரீமேக் செய்துவிடலாம். ஆனால் என்னுடைய குருநாதர் கே.பாக்யராஜ் நடித்த எந்த படத்தையும் தற்போது எந்த ஹீரோவை வைத்தும் ரீமேக் செய்ய முடியாது. சில்மிஷம், குறும்புத்தனம், ஹீரோயிஸம் இல்லாத ஹீரோயிஸம், புத்திசாலித்தனம் என பல நுணுக்கமான விசயங்களை தன்னுடைய திரைக்கதையில் வைத்திருப்பார். அவரை இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன்.
எஸ்.ஏ.சி என்னுடைய திரையுலக ஆசான் மற்றும் நண்பர். அவரை இந்த கேரக்டரில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறேன்.
இன்றைய சூழலில் ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சந்திக்கும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. பணம் இங்கு ஒரு பிரச்சினையல்ல. அதனை யாரிடமாவது கடன் வாங்கிவிடலாம். ஆனால் ஒரு படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் அதிகம். இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
இந்த படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் இரண்டு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அவர் படம் முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். அவரது நடை, உடை, தோற்றம் அனைத்தும் மேலைநாட்டவர் போல் அமைந்திருக்கும். இது ரசிகர்களை ஈர்க்கும். ஞானசம்பந்தம் வருகை புரிந்திருக்கிறார் என்றால் கமல் வந்திருக்கிறார் என்று பொருள்.
இந்த படத்தின் கதையைப் பற்றி ஒரிரு வரிகளில் சொல்லவேண்டும் என்றால், ‘கருவறைக்குள் இருக்கும் பெண்குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லாத வெறியர்கள் இருக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசு, சட்டம், காவல் துறை எதுவும் துணைக்கு வராது. இம்மூன்றுமாக பெற்றோர்களாகிய நாம் மாறினால் தான் நம்முடைய பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.’ என்ற விசயத்தை தான் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறேன்.
இன்றைய சமூகத்தில் இளஞ்சிறுமிகள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை என்பது உலகளவில் இந்தியா பற்றிய ஒரு தவறான பார்வையை பதிவு செய்திருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு தான் இந்த கதையை எழுதினோம். நிர்பயா, ஆசிஃபா, ஹாசினி, அயனாவரம் சிறுமி என இந்த களையப்பட வேண்டிய குற்றங்கள் தொடரும் இந்த சமயத்தில் இந்த படம் வெளியாவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். இது போன்ற சம்பவத்தின் பின்னணியில் பெற்றோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்தேன். ஏனெனில் நகரம் சார்ந்த பகுதிகளில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிப்பதை விட கையில் இருக்கும் செல்போனில் வாட்ஸ் அப்வை பார்வையிடுவதற்காக தலைகுனிந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள்.
இந்த படத்தினை தணிக்கை செய்வதற்காக தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்தனர். பார்த்து முடிந்தவுடன் பொதுவாக பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் இயக்குநரை அழைத்து என்ன சான்றிதழ் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் வெளியே காத்திருக்கிறோம். அரை மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு பிறகும் அழைப்பு வரவில்லை. பிறகு அழைப்பு வந்தது. சென்றோம். ஆனால் அவர்கள் எதையும் பேசவில்லை. அவர்களிடம் யூ, யூ ஏ, ஏ என எந்த சான்றிதழ் தரபோகிறீர்கள் என்று கேட்டேன். எதுவும் பதிலளிக்காமல் ரீவைசிங் கமிட்டிக்கு பரிந்துரைத்தார்கள். பிறகு அவர்கள் பார்த்து, ஒரு சில காட்சிகளில் உள்ள வன்முறையை மட்டும் குறைத்துக் கொண்டு யூ ஏ என்ற சான்றிதழ் அளித்தார்கள். ஆனால் மிகச்சிறந்த பதிவு என்று வாழ்த்தினார்கள். இதுவே படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில், ஆர்...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...