நயந்தாராவின் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், அவரது நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தப் படம் ‘இமைக்கா நொடிகள்’.
கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படத்தில் நயந்தாரா கதையின் நாயகியாக நடிக்க, அதர்வா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, நயந்தாராவின் கணவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் வில்லனாக நடித்திருக்கிறார்.
‘டிமாண்டி காலனி’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டன் சிவா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார், “இரண்டு வருட கடின உழைப்பு, பலவிதமான அவமானங்களை சந்தித்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனுராக் கஷ்யாப்பின் வேடம் புதிதாக இருக்கும். அதேபோல் அதர்வா - ராஷி கண்ணா ஆகியோரது காதலும், அவர்களது கதாபாத்திரமும் புதிதாக இருக்கும். பல படங்களில் பல விதமான வேடங்களில் நடிக்கும் நயந்தாராவின் தோற்றம் மற்றும் கதாபாத்திரம் இந்த படத்தில் முற்றிலும் புதிதாக இருக்கும்.
படத்திற்காக நிறைய செலவு செய்திருக்கிறோம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே, குறிப்பிட்ட பட்ஜெட்டை தாண்டி பெரிய அளவில் இப்படத்தை தயாரித்தோம். ஹாலிவுட் தரத்தில் உருவான ஒரு தமிழ்ப் படம் தான் இந்த படம். ஒளிப்பதிவு, ஆக்ஷன், இசை என அனைத்தும் இக சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக 5 நாட்களுக்கு முன்பாகவே இந்த படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
அதர்வா பேசும் போது, “இமைக்கா நொடிகள் ரோலர் கோஸ்டர் ரைடை விட மிகவும் கஷ்டமான ஒரு ரைட். என்ன ஆனாலும் இந்த படத்தை சமரசத்தோடு எடுக்க வேண்டாம் என நானும் அஜயும் முடிவெடுத்தோம். நிறைய அலைச்சலுக்கு பிறகு தயாரிப்பாளர் ஜெயகுமார் படத்துக்குள் வந்தார். அவர் தான் கதையை நம்பி செலவு செய்தார். நயன்தாரா, ஆர்டி ராஜசேகர், அனுராக் காஷ்யாப் என என் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அத்தனை பேருடனும் ஒரே படத்தில் வேலை செய்தது பெரிய சர்ப்ரைஸ். இந்த படத்தின் ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது.” என்றார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசும் போது, “டிமாண்டி காலனி படத்தின் போதே நான் பயந்தேன், அதை வெற்றிப் படமாக்கி விட்டீர்கள். இனிமேல் அந்த மாதிரி பயமே கூடாது என நினைத்தேன், அதற்காக உழைத்திருக்கிறேன். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுமே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், நான் தான் கத்துக்குட்டி. அவர்களுடன் வேலை பார்த்தது ஒரு ஜாலியான, நல்ல அனுபவம். என் குரு முருகதாஸ் சார் சொன்னது பாதி வெற்றி திரைக்கதையிலும், நடிகர்கள் தேர்வில் 25% வெற்றியும் இருக்கும். மீதி 25% தான் படப்பிடிப்பில் செய்ய வேண்டியவை. அதனால் தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் உட்கார்ந்து சண்டை போட்டு திரைக்கதையை எழுதினோம். 2013ல் அதர்வாவிடம் இந்த கதையை சொன்னேன், அவரும் ஓகே சொன்னார். ஆனால் முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது தொடங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இப்போது தான் படமாக வந்திருக்கிறது. அதர்வா என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன். ஆதி ரொம்பவே பாஸிடிவான மனிதர், நமக்கு தன்னம்பிக்கையை விதைத்து விடுவார். தயாரிப்பாளர் செய்த எல்லா விஷயங்களுமே படத்தின் மெறுகேற்றலுக்காக உதவியது, ஆகஸ்ட் 30ஆம் தேதி படம் ரிலீஸ் அக இருக்கிறது.” என்றார்.
ஹிப் ஹாப் ஆதி பேசும் போது, “இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தின் பின்னணி இசை தான் மிகப்பெரிய தூணாக இருக்க போகிறது. இசை வெளியீட்டுக்கு பிறகு இரண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பின் போதே அவ்வப்போது ஸ்டுடியோவுக்கு வந்து பின்னணி இசையை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்ஷன் மற்றும் ஒளிப்பதிவு. அவர்கள் பட்ட கஷ்டம் தான் என்னையும் நல்ல இசையை கொடுக்க ஊக்குவிக்கிறது. எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நயன்தாரா கம்பீரமாக இருக்கிறார். படத்தின் சக்திக்கும் மீறி அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
ஆக்ஷன் இயக்குநர் ஸ்டன் சிவா பேசும் போது, “இமைக்கா நொடிகள் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை பற்றி சொல்லும்போதே இயக்குநர் அஜய் புதுமையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக கடினமாக உழைத்தோம். படத்தில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றுக்காக ஹாங்காங்கில் இருந்து டீம் ஒன்றை வரவழைத்தோம். எந்த தயக்கமும் இல்லாமல் செலவு செய்தார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லோருடைய ஒத்துழைப்பால் படத்தில் சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியான பிறகு நன்றாக பேசப்படும்.” என்றார்.
இந்த நிகழ்வில் ஆர்.டி.ராஜசேகர், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஷி கண்ணா, ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி, இணை தயாரிப்பாளர் அருண், விஜய், சைதன்யா ஆகியோரும் பேசினார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...