Latest News :

'கனா’ படத்தில் லாபம் வந்தால் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்துவேன் - சிவகார்த்திகேயன்
Thursday August-23 2018

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமாகிறார்.

 

அப்பா - மகள் செண்டிமெண்ட்டோடு கிரிக்கெட் மற்றும் விவசாயம் என இரண்டைப் பற்றியும் பேசும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாண்டிராஜ், ராஜேஷ், இசையமைப்பாளர் அனிருத், டி.இமான், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். இவர்களுடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டதோடு, பெண்கள் கிரிக்கெட் மையமாக வைத்து படம் எடுக்க முன்வந்த சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

 

Kanaa Audio Launch

 

நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “அருண்ராஜா பாடல் எழுதி ஒவ்வொரு பாடலும் பெரிய ஹிட் ஆகும்போது, நான் அருண்ராஜாவை இப்படியே செட்டில் ஆகிடாத என்று திட்டுவேன். அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்பது தான் என் கனவும். நம்ம ஊர் பசங்க விளையாடும் தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதை எழுத சொன்னேன், அவன் இண்டர்நேஷனல், அதுவும் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஒரு கதையை எழுதி வந்தான். நம்ம ஊர்ல நடிக்க ஹீரோயின எங்கடா தேடுறது என்று நான் சொன்னேன். நானே இந்த படத்தை தயாரிக்க போகிறேன் என்று சொன்னேன். இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் என்ற பெருமையோடு வெளியாகும் படம், வெளிநாட்டில் யாராவது பார்த்தால் சிரிச்சிட கூடாது என்ற பயம் இருந்தது.

 

மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன் படங்களில் நடித்து வந்தாலும் கதாநாயகி ஐஸ்வர்யா, நான் முயற்சி பண்றேன், ஒரு வாய்ப்பு கொடுங்கனு சொன்னார். நிறைய அடி, காயங்கள் பட்டு நடித்திருக்கிறார். விவசாயத்தை பற்றி பேசும் ஒரு கதாபாத்திரம், எங்கள் முதல் தேர்வே சத்யராஜ் சார் தான். அவர் ஒப்புக் கொண்டு உள்ளே வந்த பின்பு படம் இன்னும் பெரிதாகியது. என் நண்பன் அருண்ராஜா, படத்தின் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மீதான நம்பிக்கையால் இந்த படத்துக்கு என்ன தேவையோ அந்த செலவை செய்தோம். இந்த படத்தில் லாபம் வந்தால் ஒரு நல்ல விஷயத்துக்கோ அல்லது இன்னொரு படத்துக்கோ தான் செலவு செய்வேன். படம் தயாரிக்க போறேன்னு சொன்னவுடன் முதலில் அனிருத்திடம் சொன்னேன், அவர் நிச்சயம் ஹிட் ஆகும் என்றார். 

 

ஆராதனாவை பாட வைத்த இசையமைப்பாளர் திபுவுக்கு நன்றி. சம்பாதிக்கிற பணத்துக்கு சொத்து வாங்கி சேர்க்காம, அருண்ராஜா அண்ணன் படத்தை தயாரிக்கலாம்னு சொன்ன மனைவி ஆர்த்திக்கு நன்றி. இது நண்பர்களுக்கு நான் செய்யும் உதவி அல்ல, கடமை. கனா படத்தை தொடர்ந்து சரவணன் மீனாட்சி புகழ் ரியோ ஹீரோவாக நடிக்க, ப்ளாக் ஷீப் குழுவினர் பங்கு பெறும் ஒரு படத்தை தயாரிக்கிறேன்.” என்றார்.

 

நடிகர் சத்யராஜ் பேசும் போது, “இந்த படத்தின் மூலம் இயக்குநர், நாயகி என பல நல்ல விஷயங்களை சிவகார்த்திகேயன் வழங்கியிருக்கிறார். என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்ன கேட்டாலும் தெரியும் சார் என்று பொய்யாக சொல்லி விடுவேன். ஆனால் நாயகி ஐஸ்வர்யா தனக்கு கிரிக்கெட் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டு, அதன்பிறகு அதை கற்றுக் கொண்டு கடினமாக உழைத்திருக்கிறார். 

 

அதிதீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் கம்புச்சண்டை, கத்திச்சண்டை மட்டுமே கற்றுக் கொண்டேன், அது மட்டுமே நான் சொன்ன உண்மை. என் பெயரில் தான் சத்தியம் இருந்தது, வாய்ப்பு கேட்கும் காலகட்டத்தில் நாவில் சத்தியம் இல்லை. மார்க்கெட்டில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் கதாநாயகன் இந்த மாதிரி ஒரு படம் தயாரித்து ஊக்குவிப்பது நல்ல விஷயம். கமல் சார் இதே மாதிரி என்னை வைத்து ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்ற படத்தை தயாரித்தார். விவசாயத்தையும், விளையாட்டையும் வைத்து கதை சொல்லியதற்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும் போது, “பெற்றோருக்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு முக்கியமான உறவு நண்பர்கள் தான். நல்ல விஷயங்களை சொல்ல துடிக்கும் என்னை மாதிரி பல இளைஞர்களுக்கும் வாய்ப்பளித்து சிவா மேடையேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. டெல்டா மாவட்டத்தை சேர்ந்த எனக்கு கிரிக்கெட், விவசாயம் இரண்டுமே மிகவும் நெருக்கமானது. எனக்கும் கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது. அது நடக்கவில்லை. சினிமாவில் முயற்சி செய்தேன். ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அடம் பிடிக்கணும் என்று படத்தில் வரும் வசனம் எனக்கும் பொருந்தும். 

 

இந்த படத்துக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இதுவரை படம் வந்ததில்லை. இந்த படத்தில் அப்பா மகள் உறவு என்றவுடனே சத்யராஜ் சாரிடம் நடிக்க கேட்டேன், அவரின் அனுபவம் படத்துக்கு கைகொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா கிரிக்கெட் ஆட தெரியாது, வேணும்னா கத்துக்கிறேன் என சொன்னவுடன் சின்ன பயம் வந்தது, நிச்சயமாக அது அவர் நடிப்பை பற்றிய பயம் இல்லை. அவரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்.” என்றார்.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இந்த படத்தில் முதலில் ஒரு கிரிக்கெட் வீராங்கணையை தான் நடிக்க வைக்கும் முயற்சியில் இருந்தார்கள். ஒரு நாள் சிவா எனக்கு கிரிக்கெட் தெரியுமா? என யதேச்சையாக கேட்டார். அங்கிருந்து ஆரம்பித்தது இந்த பயணம், என் மீது நம்பிக்கை வைத்த அருண்ராஜா, சிவாவுக்கு நன்றி.” என்றார்.

 

விழாவில் இசையமைப்பாளர்கள் டி.இமான், அனிருத், கனா இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, இயக்குநர்ர்கள் பாண்டிராஜ், மித்ரன், விக்னேஷ் சிவன், பாக்யராஜ் கண்ணன், ரவிக்குமார், ராஜேஷ், பொன்ராம், துரை செந்தில்குமார், விஜய், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், எடிட்டர் ரூபன், பாடகர் சித் ஸ்ரீராம், நடிகர் இளவரசு, டான்சர் சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

Related News

3299

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery