கமல்ஹாசன் நடித்த ‘பட்டாம்பூச்சி’, ‘தாம்பத்யம் ஒரு சங்கீதம்’, ‘இவர்கள் வருங்கால தூண்கள்’ உள்ளிட்ட 18 படங்களை தயாரித்த ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன், தனது 19 வது தயாரிப்பாக ‘மரகதக்காடு’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மங்களேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜெய்பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கேயார், கதிரேசன், சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்றன. தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே, இப்போது வரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்பு கொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன், உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி.” என்று தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.
இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்த போது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும் போது தான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்த போது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வு செய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.
எங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.
மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்.” என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் கேயார், கதிரேசன், கவிஞர் வெண்ணிலா உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...