அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், “கருப்பி...” என்ற பாடலால், இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணன், ‘பரியேறும் பெருமாள்’ உலக சினிமாவுக்கு நிகரான ஒரு படம் என்றதோடு, இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவை முன்னோக்கி அழைத்துச் செல்லும் வல்லமை பெற்ற இயக்குநராக வருவார், என்று பாராட்டியது, இப்படத்தின் மீதான ஈர்ப்பை அதிகைப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்ட இதில், இயக்குநர் ராம் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராம், “எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.
மாரி செல்வராஜ், ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார். திருநெல்வேலி என்ற ஊரையும் எனக்கு அறிமுகப்படுத்தியவன் மாரி செல்வராஜ். என் பாட்டன் அப்பன் வாழ்ந்த அந்த திருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ். தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விட, மாரி செல்வராஜின் இயக்குநர் ராம் என்று அடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன். கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கான அந்தஸ்து நிச்சயம் கிடைக்கும். ’பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் அழகியல். கதிரை பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும் பெருமாள் பணமும் குவிக்கும், மரியாதையையும் பெறும்” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது, “இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்த பயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தை தந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான ஒரு படம் செய்யலாம் என்ற நோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் ‘பரியேறும் பெருமாள்’. ஆனால், போகப் போக அதன் வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும், சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும், உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமே சிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.
முதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காகத் தான் சந்தோஷ் சாரிடம் பேசினோம். அது மட்டுமல்லாமல், திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும், கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம். முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம், ஆனால் அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.
கேமராமேன் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கதிர், கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியது. இப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம் விவாதங்களை உண்டாக்கும். நான் ராம் சாருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது இந்தப் படம் தான். இன்று இங்கு என் குடும்பத்தார்கள் யாரும் இல்லை, ஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்.” என்று நெகிழ்வாக பேசினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, “இந்த படத்தில் என்னை தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன். பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள் பெரிய அளவில் வருவார்கள். இது, மாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்தது. இந்த படம் எனக்கு வாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம். பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடு இருக்கிறது. அதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்கு பிடித்தது. உலக சினிமா, பொதுமக்கள் பிடித்தது, நமக்கு பிடித்தது என்று மூன்று விதமாக இருந்தது. அதை அவர் சொன்ன விதம் எனக்கு பிடித்தது.
அவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றி படமாக்கி இருக்கிறார். அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கி இருக்கிறார். எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும். கருப்பி பாடல் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள். மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படி கொண்டு போவார் என்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதை நீங்கள் உணர்வீர்கள். பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும். என்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்று பேசினார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...