இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஏழு ஆறு நாட்களாக திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இப்படம் ஓடுவதும், தினம் தினம் இப்படம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதையும், கோலிவுட் சினிமாவே ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்திலும், ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படக்குழு இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். நாயகி ஆனந்தியை தவிர, படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், “இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயம் காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இதுபோன்ற படங்களை தயாரிக்கும். என்றார்.
இயக்குநர் ராம் பேசுகையில், “இந்தப்படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு... படி... எழுது... இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி.” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு சோளக்கொல்லையில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்பட கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார், ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்.
இந்த படம் வெளியானவுடன், யார் யார் போன் செய்து, எப்படி எதிர்க்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், அப்படிப்பட்ட எந்த போனும் எனக்கு வரவில்லை. யாரை பார்த்து நான் பயந்தேனோ அவர்களே ‘பரியேறும் பெருமாள்’ படத்தை ரசித்திருக்கிறார்கள், நான் சொன்னதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், இதை விட எனக்கு வேறு என்ன சந்தோஷம், வேறு என்ன வெற்றி கிடைக்கப் போகிறது.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...