’ரெட்டச்சுழி’ படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த இயக்குநர் தாமிரா, சுமார் 8 வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குநர் தாமிரா.
இது குறித்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் தாமிரா, “எனது சிகரம் சினிமாஸ் நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொண்டு ஒரு பைசா கூட வட்டிக்கு வாங்காமல் இந்தப்படத்தை எடுத்து முடித்தோம். இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு விற்றோம். ஆனால் அவர் முதல் கட்ட அட்வான்ஸ் தொகையாக 41 லட்சம் மட்டும் கொடுத்ததோடு சரி.. அதன் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவும் இல்லை. படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை. இதையெல்லாம் உணர்ந்து நாங்கள் சுதாரிப்பதற்குள் நிலைமை கைமீறி விட்டது.
பெடரேஷனில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், நம்மை ஏமாற்ற மாட்டார் என நம்பித்தான் அவரிடம் படத்தை கொடுத்தோம்.. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதற்குமுன் அவர் மற்ற விநியோகஸ்தர்களிடம் வைத்திருந்த கடன் பாக்கி எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு, அவற்றை எல்லாம் நாங்கள் செலுத்தினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என பெடரேஷன் திட்டவட்டமாக கூறிவிட்டது. இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அவருடைய நிறுவனத்தின் பெயரில் எங்கள் படம் வெளியாகிறது என்பதால் தான். காலம் கடந்துவிட்டதால் படத்தை ரிலீஸ் செய்வதற்காக வேறு வழியின்றி மாரிமுத்துவின் முந்தியா பாக்கிகளை நாங்கள் செட்டில் செய்து படத்தை ரிலீஸுக்கு நாகரத்தி கொண்டு வந்தோம்.
இதன் காரணமாக வட்டிக்கு கடன் வாங்குவதன் அவலத்தை, வட்டிக்கு கடன் வாங்காமல் படம் எடுத்து சொல்ல நினைத்த நான், இன்று வட்டிக்கு வட்டி கட்டும் சூழலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த மாரிமுத்துவும், அவரைப்போல மூன்றாம் தரமான நபர்களை ஆதரிக்கும் பெடரேஷனும் தான் காரணம். இவர்களால் சம்பந்தமே இல்லாமல் இன்று 56 லட்ச ரூபாய் கடனுக்கு நான் பொறுப்பேற்க வேண்டியதாகிவிட்டது.
யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும், வரயுடைய நிறுவனத்தின் பெயரில் படத்தை வெளியிடும் ஒரே காரனாத்திற்காக நாங்கள் ஏன் அவரது கடன்களை பொறுப்பேற்று அடைக்க வேண்டும்..? இது அப்பட்டமான மோசடி இல்லையா..? இதற்கு பெடரேஷன் துணை நிற்பது அதிர்ச்சி என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு வழிவகை செய்யாமல் இருப்பது தான் இந்த மோசடி நபர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. பெடரேஷனில் இந்த வெளியீட்டாளருக்கு இவ்வளவு ஏற்கனவே கடன் பாக்கி இருக்கிறது, அவரிடம் படத்தை கொடுத்தால் அந்த கடன் சுமையை நீங்கள் தான் ஏற்கவேண்டும் என வெளிப்படையாக அறிவித்திருந்தால் நாங்கள் மாரிமுத்து போன்ற மோசடி நபரிடம் சிக்கி, இந்த படுகுழியில் விழுந்திருக்க மாட்டோம்.
தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டால் நீங்கள் ஏன் அவரிடம் போய் சிக்கினீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். சிக்கியவர்களை காப்பாற்றத்தானே சங்கம் இருக்கிறது. எங்களை மோசடி செய்த மாரிமுத்து மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டர்கள். நாளை இதே மாரிமுத்து தைரியமாக இன்னொரு படம் பண்ணுவார். அவரைப்பற்றிய விபரம் தெரியாமல் எங்களைப்போன்ற யாரவது ஒருவர் இனிமேலும் அவரிடம் சிக்கிவிட கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்த உண்மைகளை இப்போது வெளியிடுகிறேன்.
சரி.. இவ்வளவு பிரச்சனைகளையும் படத்தின் வெற்றியால் கடந்துவிடலாம் என நினைத்தால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்தில் மிகப்பெரிய படங்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென களத்தில் குதித்து அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றிக்கொண்டன. அதனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தியேட்டர்களிலும் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. படத்தை வாங்கிய மாரிமுத்துவின் அலட்சிய போக்கினால் சரியாக போஸ்டர்கள் ஒட்டி படத் விளம்பரம் செய்யக்கூட முடியவில்லை.
தியேட்டரில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஒருநாள் பேப்பர் விளம்பரத்தையே கூட, மாரிமுத்து கடன் பாக்கி தரவேண்டும் என கூறி நிறுத்தினார்கள் என்றால் இந்தக்கொடுமையை என்வென்று சொல்வது..?
நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ள இந்த அருமையான தருணத்தில் நல்ல படம் என ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ’ஆண் தேவதை’ படமும் நல்ல வெற்றியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்.. ஆனால் பெடரேஷனின் அலட்சியம், அதிகாரப்போக்கு, தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்கள் மீது காட்டும் பாராமுகம் இவை எல்லாமாக சேர்ந்து எங்கள் படத்தை சின்னாபின்னப்படுத்தி விட்டன. நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் உண்மை.
இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நிறைய நட்பு இருந்தது. இன்று நான் ஒருவன் மட்டும் இங்கு தனியாக நிற்கிறேன்.. இத்தனை நாட்கள் நான் சேமித்து வைத்த அறமும் நேர்மையும் இந்தப்படத்தில் தான் இருக்கிறது. இந்தப்படம் தோற்றால் எனது நேர்மை தோற்றுவிடும்.. நான் தப்பிப்பதற்கு இன்னும் கூட வாய்ப்பிருக்கிறது.. இந்தப்படத்தை வரும் அக்-26ஆம் தேதி மறு ரிலீஸ் செய்வதற்கு நல்ல திரையரங்குகளை கொடுங்கள். மக்களின் ரசனை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுதான் நாங்கள் பெடரேஷனிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்.” என உருக்கமாக முடித்தார் தாமிரா.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...