Latest News :

’டங்கல்’ போல ‘கனா’ மிகப்பெரிய வெற்றி பெறும்! - சத்யராஜ் நம்பிக்கை
Saturday December-15 2018

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான சிவகார்த்திகேயன் புரோடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்  ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவரது அப்பா வேடத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

 

அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படம் அமீர்கானின் ‘டங்கல்’ போல உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று சத்யராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

 

இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கனா’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சத்யராஜ், “படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தை கொண்டு சேர்ப்பார்கள். அதை புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக் கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார். சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இந்த ‘கனா’ இருக்கும். இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறும்போது சினிமா துறைக்கும் சமூகத்திற்கும் நல்லது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், எனது சிந்தனை எல்லாம் இந்த படம் டங்கல் படத்தை போல சீனாவில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பது தான். விளையாட்டு என்பது உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பொதுவான விஷயம் என்பதால், இந்த படம் உலக அளவில் பேசப்படக்கூடிய படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “நான் கடுமையா உழைச்சிருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க. கடுமையா உழைக்கணும்னு ஆசை மட்டும் தான் எனக்கு இருக்கு, ஆனால், அதை சாத்தியப்படுத்த அருண்ராஜா முதல் இந்த குழுவின் நிறைய நண்பர்கள் தான் என்னை உந்தி உழைக்க வைத்தார்கள். என்னுடைய அப்பா இருந்தால் சத்யராஜ் சார் மாதிரி தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன், என் அப்பா ஸ்தானத்தில் தான் அவரை வைத்து பார்க்கிறேன். தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நடிகராக வருவார் தர்ஷன். தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும். எடிட்டர் ரூபன் படத்தை பார்த்து ரொம்ப நல்லாருக்குனு சொல்லிட்டார். அங்கேயே வெற்றி உறுதியாகி விட்டது. தயாரிப்பாளர் கலையரசு சார் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இன்னமும் கடுமையாக உழைத்து வருகிறார்.” என்றார்.

 

படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இளவரசு பேசுகையில், “இந்த படத்தின் மீது எனக்கு ரொம்பவே காதல், இந்த படம் ரிலீஸுக்கு ரொம்ப நாளாகவே காத்திருக்கிறேன். ஒரு மகள் எந்த விஷயத்தை ஆசைப்பட்டாலும், அதை தந்தை எப்பாடு பட்டாவது செய்து கொடுப்பார். இந்த படம் எல்லோருக்கும் அந்த உணர்வை கொடுக்கும். ஐஸ்வர்யா ராய் போல ஐஸ்வர்யா ராஜேஷ் புகழ் பெற வேண்டும், அந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார்.” என்றார்.

 

படத்தின் இணை தயாரிப்பாளர் கலையரசு பேசும் போது, “கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தால், ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி வேலை பார்த்திருக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசும் போது, “சின்ன பட்ஜெட்டில் நிறைய கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நாள் சிவா என்னிடம் கதை இருக்கா, நல்ல பெரிய கதையா இருந்தா சொல்லு என்றார். 3 கதைகள் தயார் செய்தேன், அதில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு பிடித்து போய் தயாரிக்க முடிவு செய்தார். எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்பதை கூட சிவகார்த்திகேயன் என்னிடம் சொல்லவில்லை. நினைச்சத எடுங்க, நான் பார்த்துக்குறேன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார். என்னை இயக்கியது எல்லாமே என் நண்பர்கள் தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலையில் இல்லை. கௌசல்யா முருகேசன் என்ற பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் இந்த கதையை நகர்த்தி செல்லும். ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு அபரிமிதமானது. கிரிக்கெட் மேட்சை இதுவரை சினிமாக்களில் காட்டாத வகையில் நாம் திரையில் கொண்டு வர வேண்டும் என நானும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் முடிவு செய்தோம். சத்யராஜ் சார் என்னை நிறைய தாங்கினார். எனக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுத்தார். வாயாடி பெத்த புள்ள பாடல் 70 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது என்றால் அதற்கு ஜிகேபி எழுதிய, எளிமையான பாடல் வரிகளும் தான் முக்கிய காரணம்.” என்றார்.

 

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையோடு வெளியாகும் ‘கனா’ வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

3897

அப்புகுட்டி நடிக்கும் ’பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ விரைவில் வெளியாகிறது
Friday January-17 2025

பிளான் 3 ஸ்டுடியோஸ் (Plan3 Studios) சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”...

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
Friday January-17 2025

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி...

ஐந்து நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் பாடல்!
Friday January-17 2025

இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது...

Recent Gallery