’விக்ரம் வேதா’ வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி சுமார் 7 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தாலும், அவரது அடுத்த ரிலீஸ் ‘கருப்பன்’. ‘ரேனிகுண்டா’ பட புகழ் பன்னீர்செல்வம் இயக்கியுள்ள இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்திருக்கிறார். பசுபதி, பாபி சிம்ஹா, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய பங்கு வகிப்பதுடன், முறுக்கு மீசையுடன் விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
இன்று நடைபெற்ற ‘கருப்பன்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, “ரேனிகுண்டா படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு நான் மிரமித்து போனேன். அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அப்படத்தை இயக்கிய பன்னீர்செல்வத்துடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி. ரொம்ப நேர்மையாக சினிமாவை பன்னீர் கையாள்கிறார். குறிப்பாக ரேனிகுண்டா படத்தில் விலை மாது கதாபாத்திரம் ஒன்று இருந்தாலும், எந்த இடத்திலும் கவர்ச்சி என்பதை துளி கூட காட்டியிருக்க மாட்டார், அந்த அளவுக்கு அவரது படம் நேர்மையாக இருக்கும். கருப்பனிலும் முதல் இரவு காட்சி ஒன்று இருக்கிறது. அந்த காட்சியை அனைவரும் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் பார்க்கும் விதத்தில் ரொம்ப இயல்பாக எடுத்திருக்கிறார். நான் சினிமாவுக்கு வந்து சுமார் 7 வருடங்கள் ஆகிவிட்டது, நான் பிறரை குறை சொல்ல வேண்டும் என்றால் 50 பேரை சொல்ல வேண்டி இருக்கும். ஆனால், பன்னீர் இதுவரை யாரை பற்றியும் குறை சொன்னதும் இல்லை, தவறாக பேசியதும் இல்லை. அந்த அளவுக்கு நல்ல மனிதராக இருக்கிறார்.
இந்த படத்தின் வில்லன் வேடத்தில் ஹீரோ யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து, ஒரு ஹீரோவிடம் கேட்டோம் அவர் சம்மதிக்கவில்லை. பிறகு பாபி சிம்ஹாவிடம் கேட்ட போது அவர் உடனே நட்புக்காக ஒப்புக்கொண்டார். கதை கூட கேட்கவில்லை. அவரது வேடம் ரொம்ப சிறப்பாக வந்துள்ளது. வசனம் குறைவாக இருந்தாலும் அவர் எக்ஸ்பிரசன்ஸ் மூலமாகவே அசத்தியிருக்கிறார்.
’சங்குத்தேவன்’ படம் கைவிடப்பட்டது எனக்கு மிகப்பெரிய் வருத்தத்தையும், காயத்தையும் ஏற்படுத்தி விட்டது. அந்த படத்திற்காக நான் வைத்திருந்த மீசை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அதே மீசை கெட்டப்போடு நான் ‘கருப்பன்’ படத்தில் நடித்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, சங்குத்தேவன் படத்திற்காக செட் போட்ட லொக்கேஷனில் தான் கருப்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கினோம். இது எதர்ச்சியாக நடந்த சம்பவம். சங்குத்தேவன் படம் டிராப்பானதற்கான காரணத்தை சொன்னால் நான் சிலரை திட்ட வேண்டும், குறை சொல்ல வேண்டும். ஆனால், அந்த படத்தினால் ஏற்பட்ட காயத்தை ‘கருப்பன்’ ஆற்றிவிட்டது.
ஒரு படத்தை கமர்ஷியலாக அடுத்தக் கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்த தயாரிப்பாளர்களில் ஏ.எம்.ரத்னம் சார் ஒருவர். இந்த படத்தை ரொம்ப சிறப்பாக தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இருந்தாலும், நான் நிஜமாக மாடு பிடிக்கவில்லை. உண்மையான மாடுபிடி வீரர்களை வைத்து காட்சிகளை படமாக்கிய பிறகு அதை மேட்ஜ் செய்திருக்கிறோம். ஆனால், படம் பார்க்கும் போது நான் நிஜமாகவே மாடு பிடிப்பது போல இருக்கும். அதற்கு காரணம் ஸ்டண்ட் இயக்குநர் ராஜசேகர் தான்.
நான் பணிபுரியும் படங்களில் என் ஐடியாவை தினிப்பதில்லை. இயக்குநர்கள் சொல்லிக்கொடுப்பதை அப்படியே செய்யும் நடிகராகவும் இருக்க எனக்கு விருப்பமில்லை. அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கும் போது எனக்கு தோன்றும் எண்ணங்களை இயக்குநர்களிடம் கூறுவேன். ஆனால், அது என்னவாக இருந்தாலும், எனது எண்ணமும், எனக்கு தோன்றும் சிறு சிறு யோசனைகளும், இயக்குநர் உருவாக்கிய கதைக்குள் தான் சுற்றுமே தவிர அதை தாண்டி வேறு எங்கும் போகாது.” என்றவரிடம், விமர்சனங்களை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? என்றதற்கு, விமர்சனம் என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. அதை ஏற்றுக் கொள்வதும், தவிர்ப்பதும் தான் நாம் செய்ய முடியும். ஊர் வாயை யாராலும் மூட முடியாது.” என்று கூறினார்.
இயக்குநர் பன்னீர் செல்வம் பேசும் போது, “நான் இந்த படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் சீனி ராமசாமி சார் தான் என்னை விஜய் சேதுபதியிடம் அறிமுகப்படுத்தி வைத்து கதை சொல்ல வைத்தார். பிறகு இந்த கதையை ஏ.எம்.ரத்னம் சாரிடம் சொல்ல வைத்த ஸ்ரீதர் என்பவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இப்படி பலரின் முயற்சியால் தான் எனக்கு இந்த படம் கிடைத்தது.
நீண்ட நாட்களாக பஸுக்காக காத்திருந்த எனக்கு, ஏசி பஸ் ஒன்று, யாருமே இல்லாமல் வந்தது போல இந்த படம் கிடைத்தது. இதில் நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போல தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த கடை ரொம்ப சாதாரணமான கதை தான், ஆனால் ரொம்ப லைவாக படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்த்த அனைவரும் என்னிடம் கேட்டது, இந்த கதையை எப்படி எழுதுனீங்க, இப்படி லைவா இருக்கே, என்று சொன்னாங்க. அதற்கு முக்கிய காரணம் விஜய் சேதுபதி. நான் எழுதியதற்கு மேலாக இப்படம் வர விஜய் சேதிபதி உழைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியில் அவர் காட்டிய ஈடுபாடு என்ன மிரள செய்தது. திடீர்னு இரவு போன் பண்ணி, சார் ஒரு கனவு வந்தது அதை நம்ம படத்துல காட்சியா வச்சா எப்படி இருக்கும் என்று கேட்பார். நடிகர்கள் தான் இயக்குநர்களிடம் கற்றுக் கொண்டதாக சொல்வார்கள். இந்த படத்தின் மூலம் நான் தான் விஜய் சேதுபதியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த படத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகள் இருந்தாலும், ஜல்லிக்கட்டை பற்றி எதையும் படத்தில் பேசவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் நடப்பதற்கு முன்பாகவே இந்த கதையை எழுதிவிட்டதோடு, படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டோம்.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...