அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மணி, அப்படத்தை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததோடு, வடிவேலுவின் காம்பினேஷனில் பல காமெடிக் காட்சிகளில் தனது காமெடி திறமையை மூலம் காமெடி நடிகர் ‘சிட்டிசன்’ மணியாக பிரபலமானவர், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
தனது முதல் படத்திற்கு ‘பெருநாளி’ என்று தலைப்பு வைத்துவிட்டு, கடந்த மாதம் தனது குழுவோடு நாகர்கோவிலுக்கு படப்பிடிப்புக்கு சென்ற இயக்குநர் சிட்டிசன் மணி, தனது சினிமா அனுபவத்தினாலும், சரியான திட்டமிடலாலும், குறுகிய நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து, முதல் படத்திலேயே தயாரிப்பாளரின் இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.
சுமார் 30 வருடங்களாக சினிமாத் துறையில் பல்வேறு பணிகளை செய்து சிறந்த அனுபவம் பெற்றிருக்கும் சிட்டிசன் மணி, இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்தவர், தற்போதும் நடிப்பதை தொடர்வதோடு, ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிரேன் மனோகர் நடிக்க, இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடிக்கிறார்கள்.
குடும்ப செண்டிமெண்டுடன், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து சொல்லும் கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில், மாமா - மருமகள் செண்டிமெண்டை இதுவரை சொல்லப்படாத வகையில் சொல்லியிருக்கிறார்களாம்.
தனது அக்கா இறந்த பிறகு அவரது மூன்று மகள்களை கஷ்ட்டப்பட்டு வளர்க்கும் தாய்மாமன், அவர்களுக்காக வாழ்வதோடு, அவர்களுக்கு வரும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது தான் படத்தின்கதை. தனது மருமகள்களுக்காக காதல், கல்யாணம் ஆகியவற்றை உதரித்தள்ளும் தாய்மாமனின் பாசப் போராட்டத்தை செண்டிமெண்டாகவும், ஜனரஞ்சகமாகவும் இயக்குநர் சிட்டிசன் மணி சொல்லியிருக்கிறார்.
குறும்படங்களையே நெடுநாட்களாக எடுக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், தனது சினிமா அனுபவத்தினாலும், சரியான திட்டமிடலாலும் முழு படத்தையும் 20 நாட்களில் முடித்துவிட்டு தற்போது படத்தின் பின்னணி வேலைகளில் பிஸியாக இருக்கும் இயக்குநர் சிட்டிசன் மணியிடம் பேசியது இதோ,
ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி தான் என் சொந்த ஊர். சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரல, பிழைப்பதற்காக தான் சென்னைக்கு வந்தேன். வந்த இடத்தில் பல வேலைகள் செய்திருக்கிறேன். டீ கடையில் சாதாரண வேலைக்கு செய்த நான், அதே டீ கடையில் டீ மாஸ்டராகவும் வேலை செய்திருக்கிறேன். இப்படி பல வேலைகளை செய்த எனக்கு, சினிமா கம்பெனியில் ஆபீஸ் பாய் வேலை கிடைத்தது. அங்கு கிடைத்த நட்பின் மூலம் சினிமாவின் பல துறைகளில் பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. பிறகு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், நடிகராகிவிட்டேன்.
நடித்துக் கொண்டிருந்தாலும், புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட பல வேலைகளை நான் சினிமாவில் செய்திருக்கிறேன். ஏன், சில நேரங்களில் நான் நடிக்கும் பல படங்களில் உதவி இயக்குநராக கூட பணியாற்றியிருக்கிறேன். இப்படி முழுவதுமாக சினிமாவிலேயே ஈடுபாடு காட்டி வந்த எனக்கு, தற்போது இயக்குநர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்படி நடிப்பில் வெற்றி பெற்றனோ அதுபோல இயக்குநராகவும் வெற்றி பெறுவேன்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, அதை குடும்பத்தோடு மக்கள் பார்க்க வேண்டும், என்று நான் நினைப்பேன். அதனால், குடும்பத்தோடு பார்க்க கூடிய ஒரு படமாகவும், அதே சமயம், குடும்ப உறவுகளைப் பற்றி பேசும் ஒரு படமாகவும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
நான் ஒரு காமெடி நடிகராக இருப்பதால், என் படத்தில் பல காமெடி நடிகர்களை நடிக்க வைத்ததோடு, இதுவரை சரியான வாய்ப்பு கிடைக்காமல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த காமெடி நடிகர்களுக்கு என் படத்தில் முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறேன். அந்த வகையில், கிரேன் மனோகர் இப்படத்தில் பெரிதும் பாராட்டுப் பெறும் அளவுக்கு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். மற்ற படங்களில் அவரை ரொம்ப சாதாரணமாக பயன்படுத்துவார்கள், நான் அவரது கதாபாத்திரத்தை படம் முழுவதும் வருவது போல அமைத்திருக்கிறேன். அவர் ஒரு ஆலமரம் போல படத்தில் முக்கிய பங்கு வகிப்பார். இதுவரை பார்க்காத நடிப்பை அவரிடம் இந்த படத்தில் பார்க்கலாம்.
அதேபோல், ‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்திருக்கும் கார்த்திக்கும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஏன், படத்தின் ஹீரோ என்று கூட அவரை சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இப்படி திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாகவும் ‘பெருநாளி’ இருக்கும்.
படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் மதுனிக்கா, எதிர்காலத்தில் பெரிய நடிகையாக வருவார். விஸ்காம் பட்டப்படிப்பு படித்திருக்கும் அந்த பெண், பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். சின்ன பட்ஜெட் படம் என்பதாலும், தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் கூடுதல் செலவு ஆகிவிட கூடாது, என்பதாலும் சில இக்கட்டான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படப்பிடிப்பு விரைவாக முடிய, மதுக்னிகா பெரும் உதவியாக இருந்தார்.
ஒரு பாடல் காட்சிக்காக லொக்கேஷன் பார்க்க நானும், கேமரா மேனும் சென்றோம். மலைப்பகுதி என்பதால், படக்குழுவினரை கீழே உட்கார வைத்துவிட்டு, நாங்கள் மட்டும் லொக்கேஷன் தேர்வுக்கு சென்றோம். சுமார் 6 கிலோ மீட்டர் தூரை வரை சென்றுவிட்டு, பிறகு கீழே வந்து படக்குழுவினரை அழைத்துக் கொண்டு சென்றோம், மலை என்பதால் சிலரால் தொடர்ந்து எங்களுடன் பயணிக்க முடியவில்லை. இருப்பினும், அந்த அழகிய லொக்கேஷனில் படம்பிடித்தே ஆக வேண்டும் என்ற உறுதியோடு நான் பயணிக்க, என்னுடன் தைரியமக மதுனிகா பயணித்தார். காலையில் தொடங்கிய அந்த பாடல் காட்சியை மாலையில் முடித்துவிட்ட பிறகும், டான்ஸ் மாஸ்டர் இன்னும் கொஞ்ச ஷாட்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால், நாளையும் சில மணி நேரம், பாடல் காட்சியை படமாக்கலாம் என்றால். ஆனால், மறுநாள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதற்கு நான் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால், அந்த வேலை பாதித்துவிடும் என்ற எண்ணத்தில், அன்றைய தினமே டான்ஸ் மாஸ்டர் கேட்டது போல கூடுதல் காட்சியை எடுக்க முடிவு செய்து மதுனிகாவிடம் கேட்ட போது, எதையும் யோசிக்காமல் உடனே ஓகே சொன்னவர், அன்றைய தினத்திலேயே அந்த பாடல் காட்சியை முடித்துக் கொடுத்தார். அந்த பாடல் காட்சியும், அதை படமாக்கிய விதமும் பெரிதும் பேசப்படும்.
படத்தில் 6 பாடல்கள் இருக்கின்றன. இந்த 6 ஆறு பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்தாலும், அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்களாக இருக்கும். தஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட் ஆகும். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட பாடல் ஒன்றும் படத்தில் இடம்பெறுகிறது. இதை கானா உலகநாதன் பாடியிருக்கிறார். ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பவர் சினா நடனம் அமைத்திருக்கிறார். தீப்பொறி நித்யா சண்டைப்பயிற்சியை கவனிக்க, பன்னீர் எடிட்டிங் செய்கிறார்.
இப்படத்தின் படத்தின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட இயக்குநர் சிட்டிசன் மணியிடம், தொடர்ந்து நடிப்பீர்களா? என்பதற்கு நிச்சயமாக நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு அதற்கு நேரமில்லை, என்று சொல்லி சிரிப்பவர், இயக்குநராக அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டாராம்.
தற்போது ‘பெருநாளி’ படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருப்பவர், விரைவில் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்திவிட்டு, உடனடியாக தான் இயக்கும் அடுத்தப் படத்தின் பணியில் இறங்க போகிறாராம். அதுமட்டும் அல்ல, இத்துடன் மூன்றாவதாக இயக்கும் படத்திற்கும் தயாரிப்பாளர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படி இத்தனை வாய்ப்புகள், என்று கேட்டதற்கு, முதல் படத்தை 20 நாட்களில் முடித்ததால் எனது தயாரிப்பாளர் என்னை பாராட்டியதோடு நிற்காமல் அதை பலரிடம் கூறி வருகிறார். அதை கேட்கும் பலர், என்னை இயக்குநராக வைத்து படம் தயாரிக்க விரும்பி என்னை அனுகிறார்கள். சினிமாவில் இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது, அதை நல்லபடியாக பயன்படுத்தி நான் ஜெயிப்பதோடு, தயாரிப்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும், என்பது தான் எனது தற்போதை எண்ணம், என்று சிரித்தபடியே கூறிவிட்டு, எடிட்டிங் வேலை இருக்கு, விரைவில் ஆடியோ ரிலீஸில் பார்க்கலாம், என்று அவசர அவசரமாக கிளம்பினார் இயக்குநர் சிட்டிசன் மணி.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...