‘குட்டி புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஐந்தாவது படம் ‘தேவராட்டம்’. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், சூரி, வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இயக்குநர் முத்தையா படங்கள் மண் சார்ந்த படங்களாக இருந்தாலும், அது தேவர் சமூகத்தின் பெருமைகளைப் பற்றி பேசும் படமாக இருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஏற்கனவே ‘கொம்பன்’ படத்திலும் அப்படி ஒரு பிரச்சினை எழுந்தது. இப்படத்தின் தலைப்பே ‘தேவராட்டம்’ என்பதால் படத்தில் நிச்சயம் ஜாதியை பற்றி தான் பேசியிருப்பார்கள், என்று கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே, இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் முத்தையா பேசும் போது, ‘தேவராட்டம்’ என்பது தென்மாவட்டங்களில் இருக்கும் ஒரு கலை. எப்படி ஒயிலாட்டம், கெரகாட்டம் இருக்கிறதோ அதுபோல தேவராட்டமும் ஒரு கலை. இது வெற்றிக்கான ஆட்டம். படத்தில் ஹீரோவின் பெயர் வெற்றி என்பதாலும், அவரைப் பற்றிய கதை என்பதால் இப்படி தலைப்பு வைத்திருக்கிறோமே தவிர வேறு எதுவும் கிடையாது, என்று தலைப்பு விளக்கம் கொடுத்தவர், இது ஜாதிப் படம் அல்ல. ஜாதியை பற்றி எனக்கு படம் எடுக்கவும் தெரியாது. அதற்குள் நான் செல்லவும் விரும்பவில்லை.
மண் சார்ந்த, குடும்ப உறவுகளை சொல்லக்கூடிய படம் எடுக்க வேண்டும், அது தான் எனக்கு தெரியும். அதை தான் நான் படமாக எடுக்கிறேன். அதில், வியாபாரத்திற்காக ஆக்ஷனை கொஞ்சம் தூக்கலாக வைக்கிறேன் அவ்வளவு தான். மற்றபடி ஜாதியை பற்றி நான் படம் எடுக்க மாட்டேன், தேவராட்டம் ஜாதி படமும் அல்ல. நான் வேறு விதத்தில் படம் எடுக்க முயற்சித்தாலும், தயாரிப்பாளர்கள் என்னை இதுபோன்ற படங்கள் எடுக்கவே தூண்டுகிறார்கள். பணம் போடும் அவர்களின் விருப்பத்திற்காகவும் இப்படி படங்களை எடுக்கிறேன். அதேபோல், எதிர்காலத்தில் சிட்டி சப்ஜக்ட்டில் நான் படம் எடுத்தாலும், அதிலும் குடும்ப உறவுகளைப் பற்றி தான் சொல்வேன். இன்று அது தான் முக்கியம். குடும்ப உறவுகள் சரியாக இருந்தால் பொள்ளாச்சி சம்பவம் போன்றது நடந்திருக்காது. குடும்ப உறவில் தான் ஒழுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும்.
தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்." என்றார். மேலும் படத்தில் கடும் உழைப்பை கொடுத்த ஹீரோ உள்பட அனைவருக்கும் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ பேசுகையில், “இது ஜாதி படம் அல்ல என்று முத்தையா திரும்ப திரும்ப சொல்வதினாலேயே, படத்தில் ஏதோ இருப்பது போல தெரிகிறது. இவர் அவரது வாழ்வியல், பா.இரஞ்சித் எப்படி அட்ட கத்தி படத்தில் சென்னையை சுற்றியுள்ள கிராமங்களைப் பற்றி சொன்னதும், அவரது வாழ்வியல் தான். அதுபோல தான் முத்தையாவும் அவரது வாழ்வியலை சொல்கிறார். இதுபோன்ற படங்களை எடுக்காமல் வேறு விதத்தில் படங்கள் எடுக்கப் போகிறேன், என்கிறார். ஆனால், நாங்க விட மாட்டோம். அவர் தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும். ஏன் என்றால், இதுபோன்ற குடும்ப உறவுகளைப் பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் படம் எடுப்பவர்கள் தற்போது குறைவு. அதனால், முத்தையா தொடர்ந்து இதுபோன்ற படங்களை எடுப்பார்.” என்றார்.
கெளதம் கார்த்திக் பேசுகையில், “இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்.” என்றார்.
மஞ்சுமா மோகன் பேசுகையில், “தேவராட்டம் எனக்கு முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் மீண்டும் நான் உங்களை தேடி வருவேன் என்றார். சொன்னது போலவே இந்தப்படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி.” என்றார்.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...