Latest News :

”நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த யோகி பாபு
Saturday May-04 2019

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘தர்மபிரபு’. மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

 

இதில் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா, இயக்குநர்கள் சசி, மூர்த்தி, நடிகை ரேகா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யோகி பாபு, தான் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக உலா வரும் தகவலை மறுத்ததோடு, சம்பள விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

 

இது குறித்து பேசிய அவர், “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘கூர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

 

முதலில் மேக் அப் போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா தான் கூறினார், இந்த கெட் அப் போட்டாலே திமிர் தானாக வந்துவிடும். அதேபோல் தான் நானும் உணர்ந்தேன். சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம்.

 

நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள்.” என்றார்.

 

Dharma Prabhu

 

இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகரன் பேசுகையில், “இப்படத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. எமலோகத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாடலை எம்.எஸ்.வி.-யின் மகன் தான் பாடினார். யோகிபாபுவின் நகைச்சுவை எனக்கு பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் முத்துகுமரன் பேசுகையில், “நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்த கதையைப் பற்றி பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுத்திருக்கிறோம். ராதாரவி யோகிபாபுவிற்கு தந்தையாக நடித்திருப்பார். அவரைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்கள்.

 

தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார். கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு முருகன் சிறப்பாக செய்துக் கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். இசைக்கு ‘கன்னிராசி’ படத்திற்கே ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரை அழைக்க முடியவில்லை. இந்த படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், “நான் பார்த்ததிலிருந்தே பி.ரங்கநாதன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். சினிமாவை அதிகம் நேசிக்கக் கூடியவர். ரஜினியைப் பற்றி இப்படத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜஸ்டின் திறமையானவர். அவரை என் படங்களில் இசையமைக்க அழைப்பேன்.” என்றார்.

 

இயக்குநர் மூர்த்தி பேசுகையில், “‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி‘ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அப்படம் மாபெரும் வெற்றியடையும் என்று நினைத்தேன். அதேபோல் இப்படமும் வெற்றியடையும் என்ற தோன்றுகிறது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் திரையரங்க டிக்கெட் விலை அதிகரித்திருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. அதை பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.” என்றார்.

 

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, “இயக்குநர் மூர்த்தி கேட்ட கேள்வி சரியானது தான். டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். ஆனால், யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். இந்நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பது தான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்.

 

‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகி பாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம். இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரிசெய்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசுகையில், “இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.


Related News

4749

16 மொழிகளில் உருவாகும் விமலின் ‘பெல்லடோனா!
Sunday November-17 2024

யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

Recent Gallery