Latest News :

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா
Monday July-17 2017

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38 வது வருட விழா நேற்று (ஜூலை 16) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். 

 

நடிகர் சிவக்குமார் பேசுகையில், “​சென்ற ஆண்டு சிவக்குமார் 75 என்ற நிகழ்ச்சி கொண்டாடும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஓவியக் கலையில் சேவை செய்த ஒருவரைத் தேர்வு செய்து மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த அடிப்படையிலே முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு மரியாதை செய்யப்படுகிறவர் அம்புலிமாமா பத்திரிகையிலே 55 ஆண்டுகள் வரைந்த ஷங்கர் ஐயா. அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளாக வரைந்து வருகிறார். தற்போதும் வரைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார். 

 

அகரம் என்ற அற்புதமான அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற என் குழந்தைகள், தா.செ.ஞானவேல், ஜெயஸ்ரீ, ஆர்வலர்கள் மற்றும் இவர்களுக்கு எல்லாம் வழிக்காட்டியாக இருக்கின்ற கல்யாண் ஐயா உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு சந்திப்பிலுமே என்னைப் பற்றியே பேசுவதாக உங்களுக்கு சந்தேகம் வரலாம். நீங்கள் 100 மடங்கு பெரிதாக வரலாம் என்று தான் ஒவ்வொரு முறையும் என்னை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு முன்னேடியாக இருந்த சரித்திரம் படைத்த கலைஞர்கள் எல்லாம் 70 வயதில் காலமாகிவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உலகப்புகழ் பெற்றவர்கள். 

 

மகாபாரதம் படித்து பேச ஆரம்பித்த போது, எனக்கு 74 வயது முடிந்துவிட்டது. அந்த வயதில் அப்பா - அம்மா பெயரே சிலருக்கு மறந்து போகும். அவ்வாறு பேசுவதற்கு முன்பு சுமார் நான்கரை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அந்நிகழ்வை நடத்தினேன். அதற்கு முன்பு கம்பராமாயணத்தை ஒர் ஆண்டிலே ஆய்வு செய்தேன். இதனை சாதனையாக நினைக்க வேண்டாம். உலகளவிலே கம்பராமாயணம் என்ற மாபெரும் காவியத்தை பற்றி முழுமையாக யாருமே பேசியதில்லை என்று சொல்கிறார்கள். 2 மணி 20 நிமிடத்திலே 100 பாடல் வழியாக பேசினேன். பேப்பரில் எழுதி வைக்காமல், ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் பேசியது யாருமில்லை என்றார்கள். 

 

கம்பராமாயணத்தை விட மகாபாரதம் என்பது 4 மடங்கு பெரிய காவியம். அதனை 4 வருடம் ஆராய்ச்சி செய்து, அதே 2 மணி 20 நிமிடத்தில் பேசி 10 ஆயிரம் டிவிடி போட்டு உலகம் முழுவதும் போய் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று பார்த்தால் உடம்பைப் பேண வேண்டும். முகம், கை, கால்கள் தான் உங்களது அடையாளம். இதை தவிர்த்து பார்த்தால் ஒன்றுமே இல்லை ஜீரோ தான். 

 

ஷங்கர் ஐயாவுக்கு 92 வயதாகிறது. அதற்கு காரணம் தன்னுடைய உடம்பை அந்தளவுக்கு பேணியுள்ளார். இதுவரை அவருடைய வாழ்க்கையில் காப்பியைத் தொட்டதே இல்லை என்றார். முதலில் உடம்பைப் பேணுவதை பழகிக் கொள்ள வேண்டும். மாதத்தில் கண்டிப்பாக 20 நாட்களாவது வாக்கிங் செல்வேன். 4 மணிக்கு காலையில் எழுந்திருப்பேன். 4:15 - 5 மணி வரை யோகா செய்வேன். 5:10 போட் கிளப் சென்று ஒரு மணி நேரம் வாக்கிங் செல்வேன். அதற்குப் பிறகு வீட்டுக்கு வந்து பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வேலையைச் செய்துவிட்டு, படிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். கடைசி மூச்சு வரைக்கும் நீங்கள் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றால், உடம்பு ஆரோக்கியத்தை காக்க வேண்டும். 

 

இந்த உலகத்திற்கு பிறந்ததிற்கு அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால் லட்சிய நோக்கம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைப்பிடித்தால் உங்களை யாராலும் தடுக்க முடியாது. கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா - அம்மாவுக்கு படிப்பில்லை என்று வருத்தப்படலாம். அப்படி எந்த வருத்தமும் படத் தேவையில்லை. உங்களை எல்லாம் விட மிகவும் மோசமான சூழ்நிலையில் பிறந்தவன். பிறந்ததிலிருந்து எங்கப்பாவின் முகத்தைப் பார்த்ததே இல்லை. அப்பா என்று சினிமாவில் மட்டுமே வசனம் பேசியுள்ளேனே தவிர, அப்பா என்று யாரையும் அழைத்ததில்லை. 32 வயதிலே விதவையான அம்மா காட்டிலே பாடுபட்டு தான் என்னை படிக்க வைத்தார். எங்களது ஊரில் குடிக்கத் தண்ணீர் கிடையாது. சைக்கிளில் 3 கிமீ சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை தான் குளிக்க முடியும். அந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது. 

 

பெண்கள் டாய்லெட்டுக்கு செல்ல சூரியன் உதிக்கும் முன்னும், அஸ்தமனத்துக்குப் பின்னும் செல்லும் காலம் இன்னும் கிராமப்புறங்களிலே இருக்கிறது. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தான் எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படித்தேன். பள்ளிக்கூடத்துக்கு எங்களது ஊரிலிருந்து 1 கி.மீ செல்ல வேண்டும். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை. அதனாலேயே அப்பள்ளிக்கூடத்துக்குப் போவதை தவிர்த்துவந்தேன். 50 ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு அப்பள்ளிக்கு சென்று, முன்னாள் மாணவர்கள் அதனை தத்தெடுத்துக் கொள்கிறோம் என்று கூறினோம். 

 

ஏழையாக பிறந்துவிட்டோம், கிராமத்தில் பிறந்துவிட்டோம், அப்பா - அம்மா படிக்கவில்லை என்பது பாவம் கிடையாது. அது வரம். அதற்கு உதாரணம் நான். என்னை விட 100 மடங்கு பெரிய ஆட்களாக நீங்கள் வரலாம். பல்வேறு கஷ்டங்கள் கடந்து நடிகனானேன். 192 படங்கள் நடித்தேன். 40 வருடங்கள் நடித்தது போதும் என முடிவு செய்து, பேச ஆரம்பிக்கிறேன். இந்த சாதனை எல்லாம் ஒன்றுமே இல்லை. 100 சதவீதம் நீங்களும் இதைப் போன்று சாதிக்கலாம். சூர்யா - கார்த்தி இருவருமே இந்த அறக்கட்டளை நல்லபடியாக நடத்துவதற்காக தான் இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்துள்ளேன். உங்களுக்கு எல்லாம் கடவுளே கல்வியும், ஒழுக்கமும் தான். அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.​” என்றார்.

 

​நடிகர் கார்த்தி பேசும்போது, “​பொதுவாக அகரம் மாணவர்கள் அனைவருமே அரசு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். தமிழ் மொழியில் மிகவும் வலிமையானவர்களாக இருக்கிறார்கள். அனைவருமே கவிதை எழுதுகிறார்கள். முதலில் கவிதையை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும். கவிதை எழுதுவதற்கு அதை விட அறிவு வேண்டும். அகரம் மாணவர்கள் அனைவருமே அழகாக கவிதை எழுதுகிறார்கள். அது எப்படி என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய சிந்தனையே ரொம்ப ஆழமாக இருப்பதாக நம்புகிறேன். 

 

சிவக்குமார் கல்வி அறக்கட்டளைக்கு இது 38-வது ஆண்டு. அப்பா ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். 14 வயது வரைக்கும் 14 படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறார். அவருடைய வசதி அவ்வளவு தான். அரிசி சாதம் சாப்பிடுவதே பெரிய விஷயம். படிக்கிற பையன் என்பதால் மூன்று வேளையும் அப்பாவை சாப்பிட வைத்துவிடுவார்களாம். 

 

ஓவியத்திலிருந்து சினிமாவுக்குள் வந்து, 14 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்து முடித்துவிட்டார். நான் 10 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். ஒருவர் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் சுயம்பாக தனியாக வர இயலாது. அவர்களைச் சுற்றியுள்ள பலர் ஊன்றுகோளாக இருந்திருப்பார்கள். 60 ஆண்டுக்கு முன்பு அப்பா "நான் பொம்மை படம்" படிக்கப் போகிறேன் என்ற போது யாருமே உதவ முன்வரவில்லை. அப்போது அப்பா "யாராவது எனக்கு பண உதவி அளித்தால், நான் உங்களுக்கு அடிமை என சங்கிலியில் எழுதி வைத்துக் கொள்கிறேன்" என கடிதம் எழுதி வைத்திருக்கிறார். அப்பாவின் மாமா தான், அவரை சென்னைக்கு அழைத்து வந்து படிக்க வைத்திருக்கிறார். 

 

ஒரு மாதத்துக்கு 85 ரூபாய். அதற்குள் படிக்க வேண்டும், வாடகை கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் என அனைத்து செய்ய வேண்டும். 6 ஆண்டுகளுக்குள் 3000 ரூபாயில் படித்து முடித்து, 100 ஓவியங்களுக்கு மேல் வரைந்து முடித்துவிட்டார். எனது வாழ்க்கையில் சிறந்த 6 ஆண்டுகள் என அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படியிருந்தவர் எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பார்த்து, நடிக்க வைத்ததால் இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அவர்களுக்கு திருப்பி என்ன செய்ய முடியும். 

 

நம்மை உருவாக்கியவர்களுக்கு கல்வியை கொடையாக கொடுப்பதே சரியாக இருக்கும் என அப்பா தீர்மானித்தார். அதனால் ப்ளஸ் 2 மாணவர்கள் பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பித்தார். அப்பாவின் 100 வது படம் வெளியாகி 100 நாட்கள் ஓடிய விழாவில் எம்.ஜி.ஆர்  அவர்கள் முதல்வராக இருந்த போது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. 1980-ல் முதல் விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 25 வருடங்கள் நடத்தி, 25 ஆண்டு விழாவில் தலா 10,000 ரூபாய் விதம் கல்வி முறையில் வழங்கப்பட்டது. 

 

2004-ம் ஆண்டில் அகரம் பொறுப்பெடுத்து, 14 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மட்டுமன்றி, கஷ்டப்படுகிற மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறோம். கல்வி என்பது மதிப்பெண் வாங்குவதில் மட்டுமே இல்லை என்று, அறிவுக்கூர்மை தேவை, உணர்ச்சி பலம் தேவை. தற்போது விளையாட்டில் முதல் ஆளாக வந்தவர்கள், கண்டுபிடிப்புகளில் பெரிய ஆளாக வந்தவர்கள் என தேர்ந்தெடுத்து இந்தாண்டு பரிசுகள் கொடுத்திருக்கிறோம். ஆகையால் இந்த விழா ரொம்ப நிறைவாக இருக்கிறது. 

 

அப்பாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருடந்தோறும் ஓவியக்கலையில் பங்காற்றியவர்களை கெளரவிக்க விரும்பினோம். அந்தவகையில் அம்புலிமாமா ஷங்கர் ஐயாவை கெளரவப்படுத்தியதில் சந்தோஷம். ஓவியத்துக்கு நாம் எப்போது மதிப்பளிக்கப் போகிறோம், எப்போதுமே வருமானத்தை நோக்கியே ஓடப்போகிறோமா? ஓவியக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்தாண்டு முதல் தொடங்கியுள்ளோம்.

 

அகரம் ஆரம்பித்ததில் இருந்து பள்ளிக் கட்டணம் யாராவது கட்ட வேண்டும் என உதவிக் கேட்டால் உடனே கொடுக்கும் அளவுக்கு தூண்டுகோளாக இருக்கிறது. பிரபலங்கள் என்பதால் வெளியே தெரிகிறது. ஆனால், எங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் வாழை என்று சொல்லலாம். ஞானவேல் தான் அதனை முதலில் கொண்டு வந்தார். நிறைய பணமிருந்தால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்பது கிடையாது. நம்மால் மதிப்பிட முடியாதது நமது நேரம். அந்த நேரத்தைக் கொடுத்தால் பல இளைஞர்களை மேலே கொண்டு வர முடியும் என்பது வாழை நிரூபித்தது. அதனை பெரிதாக செய்ய முடியும் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் அகரம்.

 

அகரத்துக்கு தன்னார்வலர்கள் தான் மிகப்பெரிய சொத்து. அந்த தன்னார்வலர்கள் சனி மற்றும் ஞாயிறு அகரம் அலுவலகம் வந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்களோடு தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். கிட்டதட்ட 250 மாணவர்கள் அகரத்திலிருந்து வெளியே வந்து வேலையில் சேர்ந்துவிட்டார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். 

 

அகரத்தின் தேவை என்பது பெரிதாக இருக்கிறது. தன்னார்வலர்கள் வந்து உதவுகிறார்கள். பொருளாதாரம் என்பது மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அனைத்து குழந்தைகளையும் ஹாஸ்டலில் தங்க வைக்கிறோம். நிறைய கல்வி நிறுவங்கள் எங்களுக்கு இலவசமாக சீட்கள் கொடுத்துவிடுகிறார்கள். அது சாதாரணம் விஷயம் கிடையாது. ஆனால், ஹாஸ்டல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆகையால் அகரமே ஹாஸ்டல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து வெளியே வந்து படித்தால் தான் நிறைய விஷயங்கள் புதிதாக இருக்கும் என வெளியே படிக்க வைக்கிறோம். எங்களுக்கு பொருளாதார உதவி புரியும் அனைவருக்குமே நன்றி.

 

மாதம் 300 ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 2000 பேர் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். இப்படி பல பேருடைய கை சேர்த்து தான் அகரம் நடைபெற்று வருகிறது. 

 

மேலே இருப்பவர்கள் கீழே சென்றால் மறுபடியும் மேலே வருவதற்கு பலம் வேண்டும். ஆனால், கீழே இருப்பவர்கள் மேலே வருவதற்கு பெரும் பலம் தேவை. அந்த பலம் உங்களிடமே தான் இருக்கிறது. நான் இதில் சாதிப்பேன் என நினைத்தால் கண்டிப்பாக முடியும். சாதிக்க வேண்டும் என்று நம்புங்கள். நமக்கு அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, செல்வம் இருக்கிறது என்றால் அது அடுத்தவர்களுக்கு கொடுப்பதற்கு தான். அதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.​” என்றார்.

 

இவ்விழாவில் மிகவும் ஏழை எளிய  மாணவர்கள் 22 பேருக்கு தலா 1​0000 ரூபாய் வழங்கப்பட்டது. அது போக இந்த வருடம் 5​00​ மாணவர்களை படிக்கவைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

49

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் விநாயகராஜ்!
Saturday December-21 2024

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...

சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜிவி பிரகாஷ் குமார்!
Saturday December-21 2024

முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...

”பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல” - சூர்யா உருக்கம்
Friday December-20 2024

1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...

Recent Gallery