யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர் சந்திரா இயக்கும் 'கள்ளன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குநர் சந்திரா ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, ”கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் இயக்குநர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ரொம்பவும் உணர்வுபூர்வமான இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.
‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்து தான் வாழ்வைத் தொடங்கினான். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை. பரந்து விரிந்த நிலவியலும் காடுகளும் ரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைத் தரும்.
தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது. அரசாங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்யும் போது, காலம் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது, சூறாவளியாய் திசைமாறி சுழற்றிப் போடுகிற அவனது வாழ்வின் போக்கையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். இசையமைப்பாளர் கே-யின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். பின்னோக்கிய காலக்கட்டங்களிலும், வேட்டையாடுதலையும் பற்றிய கதை என்பதால் பிரத்யேகமாக பாரம்பரியமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார்" என்றார்.
எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார். வேட்டை சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகியுள்ளார். எம்.எஸ். பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, ஃபைட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜா, முருகன், அருண், மாயா என அனைவரும் கதாப்பாத்திரங்களை கண்முன் தோற்றுவிப்பவர்களாக நடித்திருக்கின்றனர்.
காடு, மலை, விலங்குகளின் நிஜ வேட்டைக் காட்சிகள் என சிந்திக்க வைக்கும் படமாக உருவாகியிருக்கும் ‘கள்ளன்’ படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். யுகபாரதியும், ஞானகரவேலும் தலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...