Latest News :

”களவாணியை விட ‘களவாணி 2’வை ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள்” - இயக்குநர் சற்குணம்
Thursday July-04 2019

வர்மன்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘களவாணி 2’படத்தில், முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா உட்பட பெரும்பாலான நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

 

இயக்குநர் சற்குணம் பேசுகையில், “களவாணி படத்தை விட, இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். இது களவாணி படத்தின் முழு தொடர்ச்சி இல்லை. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். விமலின் களவாணி தோற்றத்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்த்தபோதே அந்த நம்பிக்கை வந்தது. ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருக்கிறார். களவாணி 2 படம் பற்றி சொன்னபோதே எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் ஓவியா. பயங்கர காய்ச்சல், ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து கொடுத்தார். சரண்யா மேடம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். இளவரசு சார் படப்பிடிப்பை தாண்டி, என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை அழைத்து பேசுவார். ஆலோசனை வழங்குவார். வில்லன் கதாபாத்திரத்தில் துரை சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வில்லன் ராஜ், சூரிக்கு பதில் ஆர்ஜே விக்னேஷ்காந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். நடராஜன் சங்கரன், மணி அமுதவன், ரொனால்ட் ரீகன், வி2 என 4 இசையமைப்பாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். நிச்சயம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.” என்றார்.

 

படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பேசுகையில், “விமல், ஓவியா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தபோது ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. அந்த தயக்கத்தை போக்கி, இருவரும் என்னை மிகவும் சகஜமாக்கினர். இந்த படத்தின் மூலம் விமல் என்ற நல்ல நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார். சரண்யா மேடம், இளவரசு சார் போன்ற மிகச்சிறந்த நடிகர்களுடன் ஒரு நாள் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இது உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட படம், அடிமட்ட அரசியலை பேசும் படம். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர் இளவரசு பேசுகையில், “10 வருடங்கள் கழித்தும் என்னை பார்ப்பவர்கள் அறிக்கி அப்பா, களவாணி அப்பா என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் களவாணி. எனக்கும் சரண்யா அவர்களுக்கும் பெயர் சொல்லும் படங்களில் ஒன்று. துரை சுதாகர் நடிக்க வரும் முன்பே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தனர். அவர் நடிப்பில் அந்த பயிற்சி தெரிந்தது. ஓவியா மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார், இது அப்படியே தொடர வேண்டும். களவாணி 3, 4, 5 என அடுத்தடுத்த பாகங்கள் வர வேண்டும் என விரும்புகிறேன்.” என்றார்.

 

Kalavani 2 Press Meet

 

நடிகை சரண்யா பொன்வன்னன் பேசுகையில், “களவாணி எனக்கு கிடைத்த ஒரு வாழ்நாள் சாதனை திரைப்படம். அந்த படத்தில் வந்த ”ஆடி போயி, ஆவணி வந்தால்” வசனம் எனக்கு உலகப் புகழை பெற்று தந்தது. முதல் பாகத்தில் இருந்து இந்த படம் வித்தியாசமாக இருக்கும். புது களத்தில் இந்த கதை நிகழும். படத்தில் நடிக்கும் போது முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை உருவானது. நான் இணைந்து நடித்த நடிகர்களிலேயே இளவரசு சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஓவியா ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஆகிட்டாங்க, அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

நடிகை ஓவியா பேசுகையில், “களவாணி எனக்கு மிகவும் நெருக்கமான படம். சற்குணம் சார் தான் எனக்கு ஓவியா என்ற பெயரை வைத்தார். அந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் இங்கு பார்ப்பது மகிழ்ச்சி. எனக்கும் விமலுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட, இளவரசு சார், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக இருக்கும். விமல் என் நெருங்கிய நண்பர், அவர் தான் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர். இந்த படமும் களவாணி அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும்.” என்றார்.

 

இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான மணி அமுதவன் பேசுகையில், “பாடலாசிரியராக இருந்த என்னை இசையமைப்பாளராக்கியவர் சற்குணம் சார். 3 பாடல்களை எழுதி, அதற்கு நானே இசையமைத்திருக்கிறேன். மேலும் பல படங்கள், பாடல்களுக்கும் இசையமைத்து வெற்றி பெற்று, அதை சற்குணம் சாருக்கு சமர்ப்பணம் செய்ய விரும்புகிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் பேசுகையில், “களவாணி 2 எனக்கு மிகவும் பிடித்த படம். வாழ்வியல் சார்ந்த படங்களை கொடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். அதை சற்குணம் சார் மிக எளிதாக செய்கிறார். இந்த படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது படத்தை பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்.” என்றார்.

 

நடிகர்கள் ரோபோ சங்கர், வில்லன் ராஜ், குமார், ஒளிப்பதிவாளர் மாசாணி,  படத்தொகுப்பாளர் ராஜா முமக்கது, இசையமைப்பாளர் ரொனால்ட் ரீகன் ஆகியோரும் கலந்துக் கொண்டு பேசினார்கள்.

Related News

5198

மக்களின் நம்பிக்கை நாயகனாக திகழும் உதயநிதி ஸ்டாலின்! - நடிகர் துரை சுதாகர் வாழ்த்து
Monday September-30 2024

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக திரைத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசியல் உலகிலும் இளம் வயதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார்...

கோலாகலமாக நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’-வின் துவக்க விழா!
Monday September-30 2024

சென்னையில் நடைபெற்ற 'பாரத் யாத்ரா' பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்...

Recent Gallery