கல்லூரிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமானப் படங்கள் வெளியானாலும், கல்லூரி விடுதிகளை மையப்படுத்திய படம் என்பது அரிதான ஒன்று தான். அந்த அகையில், கல்லூரி விடுதிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘மயூரன்’ கல்லூரி விடுதிகளின் மற்றொரு பக்கத்தை காட்டும் படமாகவும் உருவாகியுள்ளது.
இயக்குநர் பாலாவிடம் ’நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய நந்தா சுப்பராயன் இப்படத்தை இயக்குகிறார். பி.எப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகிய நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
’மயூரன்’ என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். பொறியியல் கல்லூரி விடுதியில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மையக்கரு. விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் மாணவர் ஒருவர் மாயமாகிறார். அவரை தேடி சில மாணவர்கள் செல்லும் போது நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியிருக்கிறார்களாம்.
இது உண்மை கதை இல்லை என்றாலும், இயக்குநர் நந்தா சுப்பராயன், தனது வாழ்வில் சந்தித்த சில விடுதி அனுபவங்களை வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். கல்லூரி விடுதி என்று சாதாரணமாக நாம் நினைத்தாலும், நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பல சர்ச்சையான விஷயங்கள் பல விடுதிகளில் நடந்து வருகிறது. அதில் சில வெளி உலகிற்கு தெரிந்தாலும், தெரியாத சம்பவங்கள் பல உண்டு. அப்படி நடக்கும் சம்பவங்களுக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? போன்ற விடுதி குறித்து அறியாத பல விஷயங்களை இப்படத்தில் பரபரப்பாக இயக்குநர் நந்தா சுப்பராயன் சொல்லியிருக்கிறாராம்.
படம் குறித்து கூறிய இயக்குநர் நந்தா சுப்பராயன், “கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம். நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.
சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும் படம் தான் மயூரன். ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.
வேலராமமூர்த்தி, ‘லென்ஸ்’ பட புகழ் ஆனந்த்சாமி, ‘தாரை தப்பட்டை’ அமுதாவாணன், அஸ்மிதா, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் கூத்துப்பட்டறையை சார்ந்த பல கலைஞர்கள் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணியாற்றிய பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்திருக்கிறார். குகை மா.புகழேந்தி பாடல்கள் எழுத, அஸ்வின் படத்தொகுப்பு செய்திருக்கிறார். டான் அசோக் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜாய்மதி நடனம் அமைத்திருக்கிறார். மணவை புவன் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.
படம் முழுவதுமாக முடிந்து வெளியீட்டுக்கு தயாரக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கு குழுவினர் பாராட்டியதோடு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
அதேபோல், படத்தை பார்த்த பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான எச்.முரளி, தனது பேனரின் மூலம் படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ‘மயூரன்’ வெளியாக உள்ளது.
யூபோரியா பிலிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் விமல் நாயகனாக நடிக்கும் சூப்பர் நேச்சுரல் திகில் படம் ‘பெல்லடோனா’...
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...