Latest News :

மேடையிலேயே வியாபாரம் ஆன ‘வாழ்க விவசாயி’!
Sunday September-29 2019

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

 

இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன்,  இயக்குநர்  சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர் டிசிவா, தயாரிப்பாளர் பால்டிப்போ கதிரேசன், இயக்குநர் பொன்னி மோகன்,  நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, நடிகர் ஹலோ கந்தசாமி,நடிகை ஸ்ரீ கல்கி, நடிகர் திலீபன், பாடகர் அந்தோணி தாசன், இசையமைப்பாளர் ஜெய்கிருஷ், ஒளிப்பதிவாளர் ரத்தன் சந்த் , பாடலாசிரியர் தமயந்தி, நடன இயக்குநர் காதல் கந்தாஸ், கலை இயக்குநர் சரவணன் அபிராமன் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். 

 

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’ கதிரேசன் வரவேற்றார். 

 

அதனைத் தொடர்ந்து ‘வாழ்க விவசாயி’ படத்தின் டீஸரை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட, தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

 

விழாவில் இயக்குநர் பொன்னி மோகன் பேசுகையில், “விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து மீம்ஸ்களும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் வாழ்க விவசாயி என்று ஏன் படமெடுக்கவேண்டும் என்று தோன்றியது என்றால்,நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்.என்னுடைய தந்தையார் குள்ளமான உருவம் தான். ஆனால் பன்னிரண்டு அடிக்கு மேல் இருக்கும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு கம்பீரமாக நடப்பார். எங்கம்மா காளைமாட்டை பிடித்துக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து செல்வார்கள். எங்களுடைய தெருவில் உள்ள விவசாயிகள் இது போல் நடந்து செல்வது திருவிழா போல் இருக்கும். ஆறு மைல் தொலைவு நடந்து சென்று வயலில் வேலை செய்வார்கள். நான் அந்த கலப்பையைத் தூக்க முயன்றிருக்கிறேன். என்னால் முடியாது. அதை அசைக்கக்கூட முடியவில்லை. அதே போல்காளை மாட்டின் அருகே செல்லக்கூட முடியாது. ஆனால் என்னுடைய அம்மா அதனை வசப்படுத்தி வைத்திருந்தார். அதனால் என்னுடைய சிறியவயதில் ஹீரோ ஹீரோயினாக தெரிந்தவர்கள் விவசாயிகள் தான். அதனால் விவசாயிகளின் பெருமையை எடுத்துரைக்கவேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய கிராமத்தில் விவசாயிக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்த வீட்டிலுள்ள பெண் விவசாயியான அவரது மனைவி அந்த கலப்பையை சுமந்து செல்வதையும், விவசாயத்திற்கு உதவி புரிவதையும் பார்த்திருக்கிறேன். நமக்கு அத்தியாவசியமான உணவைத் தயாரிக்கும் விவசாயிகளைப் பற்றி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். அதற்கேற்றாற் போல் அப்புக்குட்டியும், வசுந்தராவும் அமைந்திருக்கிறார்கள். நான் சிறிய வயதில் நேரில் கண்டதை அப்படியே கண்முன் கொண்டு வந்தார்கள்.

 

நடிகர் அப்புக்குட்டியும், வசுந்தராவும். இதற்காக அவர்களைப்  பாராட்டுகிறேன். படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள். இந்த மருத நிலத்தின் படம், அனைவரின் மனதில் இடம்பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார். 

 

Vazhga Vivasayi Audio Launch

 

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், “அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு அப்புக்குட்டியைச் சந்திக்கும் போதெல்லாம். சரியான கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்கவேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டேயிருப்பேன். ஏனெனில் அவர் ஒரு சிறந்த நடிகர். அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் நன்றாக இருக்கும். நீண்ட நாளிற்கு பிறகு அப்புக்குட்டி யதார்த்தமாக  திரையில் தோன்றியிருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழகர்சாமியின் குதிரை படத்தில் அப்புக்குட்டி நடிக்கும் போது, அவருக்கு ஜோடியாக நடிக்கப் பல நடிகைகள் முன்வரவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். நடிகை வசுந்தரா சிறந்த நடிகை என்பதை பக்ரீத் உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்திருக்கிறார். முதல் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைவது கடினம். இந்தப் படத்தின் இயக்குநருக்கு அது அமைந்திருக்கிறது. அதற்காகப் பாராட்டுகள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் என அனைவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பது படத்தின் டீஸர் மற்றும் இசையை பார்க்கும் போது உணர முடிகிறது. தற்போதைய சூழலில் 'வாழ்க விவசாயி ' என்கிற டைட்டிலில் படம் வெளியாகியிருக்கிறது என்றால் இதைத் திரையரங்கத்திற்கு சென்று பார்ப்பவர்களின் கூட்டம் குறைவு தான். ஆனால் படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருப்பதால் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

 

ஒரு தயாரிப்பாளர் என்பவர் இயக்குநருக்கு அப்பா அம்மாவிற்குச் சமம். ஏனெனில் அப்பா அம்மாவிற்குப் பிறகு ஒரு இயக்குநரை நம்பி பணத்தை முதலீடுசெய்பவர்கள் தயாரிப்பாளர்கள் தான். விவசாயத்தை மையமாகக்கொண்ட இந்தக் கதையையும், அப்புக்குட்டி போன்ற நடிகர்களையும் நம்பி படத்தைத் தயாரித்த இந்தத்  தயாரிப்பாளரை நான் மனதார வாழ்த்துகிறேன். 

 

இந்தப் படத்தை வெற்றி பெறவைக்கவேண்டும் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.” என்றார். 

 

தயாரிப்பாளர் 'லிப்ரா 'ரவீந்திரன் சந்திரசேகரன் பேசுகையில்,“இந்தப் படத்தின் விழாவில் கலந்துகொள்ளுமாறு நடிகர் அப்புக்குட்டியும், படக்குழுவினரும் சில தினங்களுக்கு முன் என்னைச் சந்தித்தனர். அப்போது படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் படத்திற்கு ‘வாழ்க விவசாயி’ என்று டைட்டில் வைத்திருந்தது பாஸிட்டிவ்வாக இருந்தது. அது எனக்கு பிடித்தது. தற்போதைய சூழலில் விவசாயிகளைப் பற்றி வணிகரீதியான படங்களில் சில இடங்களில் மட்டும் விவசாயத்தைப் பற்றி வசனங்களாக மட்டுமே இருக்கும்.

 

தயாரிப்பாளரைப்பற்றி எனக்கு முன்பே வேறு வகையில் தெரியும். தயாரிப்பாளர் இந்தப் படத்தின் கதையை நம்பிப் படமெடுத்திருக்கிறார். அவருக்கு வணிகத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையும் பேசும் போது தெரிந்து கொண்டேன். இருந்தாலும் அவர்களின் அழைப்பை ஏற்று  இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் பாடல்களை பார்த்த பின்னர் தான் இந்த படத்தின் தரம் எனக்குத் தெரிந்தது. இப்போதுதான் இப் படத்தை நான் வெளியிட முடிவு செய்திருக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் சொல்லி விட்டார் என்பதற்காக இதனைச் சொல்லவில்லை. இப்படத்தின் தரமும், கன்டென்டும் எனக்கு பிடித்திருக்கிறது. 

 

இது போன்ற சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஊடகம் தான் சிறந்த ஸ்பான்ஸர். இந்த படத்திற்கு வேறு ஒரு தினத்தில் இதனை விட வித்தியாசமான முறையில் விழா ஒன்றை வைத்து வெளியீட்டை அறிவிக்கிறேன். அதற்கு முன்னதாக படக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன்.இந்தப் படத்தை திட்டமிட்டு, விளம்பரப்படுத்தி, நல்லமுறையில் தியேட்டருக்குக் கொண்டு வந்துவிடுவேன்.ஆனால் தியேட்டருக்கு ரசிகர்கள் வருகை தந்து என்னையும் வெற்றி பெறச் செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் , இயக்குநர், நடனஇயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள். வாழ்த்துகள்” என்றார். 

 

நடிகை வசுந்தரா பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின்  தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார், அதற்காகஇயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. ”என்றார். 

 

நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், “நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

 

Related News

5681

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery