Latest News :

‘கரிசல்’ நாவல் திரைப்படமாகிறது! - பி.சி.அன்பழகன் தயாரிக்கிறார்
Thursday November-14 2019

சாகித்ய அகாதெமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலனின் முதல் நாவலான ‘கரிசல்’ திரைப்படமாகிறது. ‘காமராசு’, ‘அய்யா வழி’, ‘நதிகள் நனைவதில்லை’ ஆகிய படங்களை இயக்கிய நாஞ்சில் பி.சி.அன்பழகன் ’கரிசல்’ நாவலை திரைப்படமாக தயாரிக்கிறார்.

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் என்ற ஊரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பொன்னீலன். தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளியான இவர் நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரைகள் என இவரது படைப்பு மிகச்சிறந்த எழுத்தாளராக எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியது. 

 

இவரது முதல் சிறுகதைத் தொகுதி ’ஊற்றில் மலர்ந்தது’ என்ற பெயரில் 1978 இல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவனத்துக்குக் கொண்டு வந்தது 1976 இல் வெளிவந்த ’கரிசல்’ என்ற நாவலே. இது பொன்னீலன் அப்போது ஆசிரியராகப் பணியாற்றி வந்த கோவில்பட்டி மக்களையும், நிலத்தையும் சித்தரிக்கும் நாவலாகும். 

 

1992 இல் வெளிவந்த இவரது ’புதிய தரிசனங்கள்’ என்ற நாவல் இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடிநிலைக் காலத்தைச் சித்தரிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. இந்நாவலுக்காக 1994 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார். மேலும், பொன்னீலனின் ’உறவுகள்’ என்ற சிறுகதை திரைப்பட இயக்குநர் மகேந்திரனால் ’பூட்டாத பூட்டுகள்’ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 

 

இந்நிலையில், பொன்னீலனின் 80 ஆவது பிறந்தநாள் குமரி மாவட்ட இலக்கியவாதிகளால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் இவரை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். 

 

அப்போது பி.சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் பிறந்து இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் பொன்னீலன். இவரது முதல் நாவலான ’கரிசல்’ என்னை மிகவும் கவர்ந்தது. எனவே, இந்நாவலை எனது வைகுண்டா சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்படமாக தயாரிக்க உள்ளேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் எழுத்தாளர் பொன்னீலன் பேசுகையில், “நான் எழுதிய முதல் நாவலான கரிசல் நான்காண்டுகள் களப்பணி செய்து எழுதப்பட்ட நாவல். அதை தற்போது சினிமாவாக இயக்க விரும்பும் குமரி மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் பி.சி.அன்பழகனுக்கு வாழ்த்துக்கள். தற்போது இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நல்ல புத்தகங்கள் வரும் போது புத்தகக் கண்காட்சிகளில்  அதை அதிகளவில் இளைஞர்கள், மாணவர்கள் வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்லிடப்பேசி, கணினி மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது. வாசிக்கும் தளங்கள் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. புத்தகம் மிகச்சிறந்த வாசிப்புக் கருவி என்பது உண்மை.” என்றார்.

 

இந்நிகழ்வில் தமிழறிஞர்கள் எஸ்.பத்மநாபன், ஏ.எம்.டி.செல்லத்துரை, முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஸ், ஓட்டல் ஸ்பார்சா பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News

5875

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery