Latest News :

’சீமராஜா’ தோல்வி! - சரிகட்ட கதை திருடினாரா பொன்ராம்?
Tuesday December-03 2019

ஹாலிவுட் படங்களை காப்பியடித்து படம் எடுக்கும் இயக்குநர்களை விட, பிறரின் கதையை திருடி படம் எடுக்கும் இயக்குநர்கள் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறார்கள். அதிலும், முன்னணி இயக்குநர்கள் பலர் தொடர்ந்து இது போன்ற கதை திருட்டில் சிக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில், இயக்குநர் பொன்ராமும் பத்திரிகையாளர் தேனி கண்ணனின் சிறுகதை ஒன்றை திருடி படம் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், மூன்றாவதாக இயக்கிய ‘சீமராஜா’ மூலம் மிகப்பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்தவர், தற்போது சசிகுமாரை வைத்து ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை பத்திரிகையாளர் தேனி கண்ணன், இதழ் வார ஒன்றில் சிறுகதையாக எழுதியதோடு, சினிமாவுக்கான கதையாக அதை விரிவுப்படுத்தி எழுதியிருக்கிறார். மேலும், இயக்குநர் பொன்ராமின் துணை இயக்கிநரிடம் இந்த கதை குறித்தும் அவர் சொல்ல, அந்த கதை தான் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து நிருபர் தேனி கண்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிட்ட பதிவு இதோ,

 

எம்.ஜி.ஆர் மகன் யாருடைய கதை?

 

அன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம்.

 

2017 ல் புதிய தலைமுறை இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்டது. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.உதயசூரியன் அவர்கள் என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயக்கனி என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன். அந்தக்கதையை படித்த கல்வி இதழியின் ஆசிரியர் திரு பெ.கருணாகரன் அவர்கள் அருமையாக இருக்கிறது கண்ணன். இதை இன்னும் விரிவு படுத்தினால் ஒரு சினிமாவுக்கான கதையாக இருக்கும், என்று கருத்து தெரிவித்தார். அந்த உற்சாகத்தில் அந்த கதையை கொஞ்சம் மாற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். அந்தக்கதை இது தான்.

 

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண். தேர்தல் வந்தால் கட்-அவுட் வைப்பது ஏழைகளுக்கு உதவிசெய்வது என்று பரபரப்பாக இருப்பார். எம்.ஜி.ஆர் போலவே மது, சிகரெட் போன்ற பக்கங்கள் இல்லாதவராக இருப்பார். ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்துக்காக தேனிக்கு வரும் புரட்சித்தலைவர் தன்னுடைய தீவிர பக்தர் ராஜ்கிரணை பற்றி கேள்வி பட்டு, அவரை அழைத்து சந்திக்கிறார். அப்போது அவருக்கு நெல்லிக்காய் கூடையை பரிசாக்கொடுக்கிறார் ராஜ்கிரண். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு தனக்காக ராஜ்கிரண் நிறைய செலவு செய்து விழாக்கள் நடத்துவதையும், அன்னதானம் செய்வதையும் பாராட்டுகிறார். அபோது சென்னை வந்து தோட்டத்தில் சந்திக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.

 

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தனது தங்கையை மருத்துவ மனையில் சேர்க்க கூட பணமில்லாமல் இருக்கும் ராஜ்கிரண், தலைவரை சந்தித்து உதவி கேட்க சென்னை வருகிறார். அந்த நேரத்தில் பொன்மனச்செம்மல் திடீரென்று இறந்து விடுகிறார். ராமாவரம் செல்லும் ராஜ்கிரணை அதிமுகவை சேர்ந்த நிர்வாகி அடையாளம் கண்டு தலைவர் இறந்து போவதற்கு முன்னால் ஐந்து லட்சம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொன்னார், என்று கொடுக்கிறார். இதை வாங்கிய ராஜ்கிரண் கதறி அழுகிறார்.

 

ஊருக்கு திரும்பும் ராஜ்கிரணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரசவ வலி வந்து தங்கை ஆன் குழந்தையை பெற்று பிரசவத்திலேயே இறந்து போகிறார். இதனால் மருமகனை வளர்க்க கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். மருமகன் சிவகார்த்திகேயன் அவருக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆனால், அவரோ பொறுப்பில்லாமல் வளர்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன ராஜ்கிரண், மன வருத்தத்தில் இருக்கிறார். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து நீ யார் தெரியுமா? எம்.ஜி.ஆர் புள்ளடா, என்று அவர் சில தகவல்களை சொல்கிறார். இதைக்கேட்டு மனம் மாறும் சிவா செய்யும் ஒரு காரியம் ஊருக்கே நல்லதாக முடிகிறது. இது நான் எழுதிய கதையின் அவுட் லைன் தான். இதில் பல சம்பவங்கள் உள்ளீடாக இருக்கிறது. கூடவே மாமா என்பதை அப்பாவாகவும், மருமகனை மகனாகவும் மாற்றலாம் என்ற சான்ஸையும் வைத்திருந்தென்.

 

இந்த நிலையில், சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இது ஒரு வேளை நான் எழுதிய கதையாக இருக்குமோ, என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. காரணம் பொன்ராம் அவர்களிடம் கதை விவாதத்தில் இருந்த என் அருமை நண்பர், அவரது கதை சம்மந்தமாக என்னை சந்திக்க வந்தார். அப்போது அவரது கதைக்கு தீர்வுகள் சொல்லி அதை அவர் முழுமையாக்கினார். பிறகு நான் அவரிடம் சொன்ன கதைதான் நான் எழுதியிருக்கும் எம்.ஜி.ஆர் கதை. ஒரு வேலை அவரையறியாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதை நான் பயன்படுத்திக் கொண்டு படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை காத்திருந்து ரிலீஸ் நேரத்தில் இதைச் சொல்லி யாரையும் கஷ்ட்டப்படுத்த விரும்பவில்லை.

 

இது குறித்து நான் என் நண்பரிடம் கேட்டபோது, அவர் உங்கள் கதையில் பேரனாக சொன்னீர்கள், இவர் மகன் என்று தானே சொல்லியிருக்கிறார். உங்கள் கதை வேறு, இது வேறு, என்றார்.

 

நல்லது, என்னுடைய கவலையெல்லாம் என் ஹீரோ பச்சை சட்டை என்றும், பொன்ராம் ஹீரோ சிவப்பு சட்டை என்றும் சொல்லி கதைக்கு வேறு வேறு அடையாளம் கொடுத்து விடக்கூடாது என்பது தான். அல்லது திருட்டுக்கு இப்போதெல்லாம் சிம்பிளாக சொல்லும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட திரு.சசிகுமார் மீதும் திரு.பொன்ராம் மீதும் என் மண்ணின் கலைஞர்கள் என்ற வகையில் பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள், என்று கருதுகிறேன்.

 

மற்றபடி உண்மையிலேயே பொன்ராம் படம் வேறு கதையாக இருக்கும் பட்சத்தில், படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

புரட்சித்தலைவரை நம்பிக்கெட்டவர்கள் யாரும் இல்லை. நானும் அவரை நம்பிதான் என் கதையை எழுதியிருக்கிறே.

 

அன்புடன்

 

தேனி கண்ணன்.

 

Theni Kannan

 

தேனி கண்ணனின் இந்த குற்றச்சாட்டுக்கு ‘எம்.ஜி.ஆர் மகன்’ படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், இயக்குநர் பொன்ராம் மற்றும் ஹீரோ சசிகுமாரும் இந்த விவகாரம் தொடர்பாக மவுனக் காத்து வருவதால், தேனி கண்ணனின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாம்.

 

இதுமட்டும் அல்ல, இந்த கதை குறித்து தேனி கண்ணன், பொன்ராமின் துணை இயக்குநரிடம் கூறிய போது, இந்த கதைக்கு சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார். அப்படி அவர் இல்லை என்றால், சசிகுமாரை வைத்து எடுக்கலாம், என்று யோசனை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

5942

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

எம்.ஜி.ஆர் முகத்தை மறைக்கும் நம்பியார் முகம் ! - கவனம் ஈர்க்கும் ‘வா வாத்தியார்’ டீசர்
Wednesday November-13 2024

’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...

Children's Day special: Here are some of the best picks for the kids on JioCinema!
Wednesday November-13 2024

Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...

Recent Gallery