‘கைதி’ என்ற மிகப்பெரிய படத்தை கொடுத்திருக்கும் கார்த்தி, நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘தம்பி’. வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படமும் ‘கைதி’ படத்தை போல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகினாலும், குடும்ப உறவுகளை சுற்றி நடக்கும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
‘பாபநாசம்’ புகழ் ஜீத்தி ஜோசப் இயக்கியிருக்கும் இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்க, இவர்களுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படம் குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், ”இந்த படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணி சம்மதம் தெரிவித்துள்ளார். எனக்கு முன்பே அண்ணி கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்னிடம் அதைக் கூறும்போது உற்சாகமாக இருந்தது. இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று யோசித்து தான் முடிவெடுத்தோம். மேலும், ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். அவர் கதைக்குள்ள வந்தபிறகு இன்னும் சற்று மெருகேற்றினார். இப்படம் குடும்ப கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
இக்கதையைப் பற்றி நான் கூறினால் முழு படத்தையும் வெளியிடுவது போல் ஆகிவிடும். ஆகையால், ஏதோ ஒரு விஷயம் பிடித்ததால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நிச்சயம் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு, ‘பையா’ படத்தில் வித்தியாசமான காதல் கதை. படம் முழுவதும் இரண்டே பேர் தான். அதிலும், காரில் தான் பயணம். இதுபோன்ற தனித்தன்மையான, வித்தியாசமான கதை மற்றும் நடிப்பிற்கு வாய்ப்பும் இருந்தது என்பதால் தான் நடித்தேன். மேலும், என் கதாபாத்திரமும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தது.
எனது அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ.. அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார். அவருடைய கலாச்சாரம் எனக்கு பிடித்திருந்தது. அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய உழைப்பு தெரிந்தது.
மேலும், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. ஆகையால், என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும்.
இப்படத்தின் பலமே நடிகர்கள் தான். சத்யராஜ் சார் பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இளவரசு இருக்கிறார். ‘சௌகார்’ ஜானகி அம்மா நடித்திருக்கிறார். அவருக்கு 88 வயதாகிறது. இதுவரை கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். ஒருசில தோல்விகளிலேயே நாம் துவண்டு விடுகிறோம். ஆனால், அவர் இத்தனை ஆண்டு அனுபவத்தில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திப்பார். இருப்பினும், துவண்டுவிடமால் கொள்ளு பேரப்பிள்ளைகள் வரை அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இன்றும் தானே சமைத்து சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக்குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார். அவர் காலத்து கலாச்சாரம் நம்மை வியப்படைச் செய்கிறது.
சத்யராஜ் சார் இத்தனை படங்கள் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தனை ஆண்டுகள் நடித்தாலும் சிறிதும் சலிப்படையாமல் ஆர்வத்துடன் ரசித்து செய்கிறார்.
ஜீத்து ஜோசப் படம் என்றால், அவர் கதையை நேர்த்தியாக நகர்த்திக் கொண்டுபோகும் விதம், கதாபாத்திரங்கள், அனைத்து நடிகர்களுக்கும் நடிப்பதற்கான சந்தர்ப்பம் இப்படி அனைவரும் என்ன எதிர்பார்த்து வருவார்களோ, அது அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. முக்கியமாக, உணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இது மாதிரி நிறைவான படம் அரிதாகத்தான் வருகிறது. மலையாளத்தில் கலைஞர்களுக்கு நடிப்பதற்கான இடமும், சந்தர்ப்பமும் நிறைய இருக்கும். அதை எங்களுக்கும் கொடுத்தார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த அனுபவம், பெரிய இயக்குநரிடம் நடிக்கிறோம் என்றில்லாமல் இயல்பாக இருந்தது. அனைவரும் இணைந்து தான் இப்படத்தை எடுக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக செயலாற்றி இப்படத்தை முடித்தோம். 2 1/2 மணிநேரம் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்கள் நிறைவாக திரும்ப வேண்டும் என்று கூறினார். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் என்னிடம் மட்டுமல்லாமல், உதவி இயக்குநர், நடிகர் நடிகைகள், அண்ணி என்று எல்லோருடனும் கலந்து ஆலோசிப்பார். இந்த காட்சியை இதைவிட இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினால், அதையும் ஏற்றுக் கொள்வார். அதேபோல், அன்று வரவேண்டிய நடிகர் நடிகைகள் யாரேனும் வரமுடியாது என்று கூறினால், படப்பிடிப்பை ரத்து செய்ய மாட்டார். உடனே முடிவெடுத்து வேறு விஷயங்களை செய்து முடிப்பார்.
வசனங்களுக்கு மணிகண்டனிடமும், மேலும் இரண்டு இணை இயக்குநர்களிடமும் கலந்தாலோசித்து அன்றைக்குத் தேவையான வசனங்கள் அர்த்தம் மாறாமல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வார்.
‘96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தா இசையமைக்கும் படம் இது. அவர் கூறும்போது, இப்படத்திற்காக நான் வித்தியாசமான, பலவிதமான இசையை முயற்சி செய்திருக்கிறேன் என்றார். ஒரு காதல் பாடல் இருக்கிறது. சின்மயி பாடியிருக்கிறார். திரில்லர் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை கோவிந்த் வசந்தா சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உணர்வையும் தன் இசையின் மூலம் மேலெடுத்துக் கொடுத்திருக்கிறார். இவரின் இசை இப்படத்திற்கு பெரிய பலம்.
டிசம்பர் 20 ஆம் தேதி ‘தம்பி’ படம் வெளியாகிறது. இப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. வருட கடைசியில் பண்டிகை தருணத்தில் அனைவரும் கொண்டாடக்கூடிய படமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.” என்று நம்பிக்கையோடு கூறினார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...