விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்ற நோக்கத்தில் பேசிய ஜோதிகாவின் கருத்தை தவறாக புரிந்துக் கொண்டதால், அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.
இந்த நிலையில், ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை இயக்கும் இரா.சரவணன், ஜோதிகா ஏன் அப்படி பேசினார், அதன் உண்மை பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால், எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.
அதனால் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம். ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார். பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார்.
வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு எதிர்த்தாற்போல் இப்படியொரு அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைக்கக் காரணம் இந்தக் காட்சிதான்.
ஆயிரம் அன்ன சத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்று ஜோதிகா பேசியதாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
இதில் கோயில்களைக் குறைத்துப் பேசியது போன்ற பார்வை எங்கே வருகிறது? சில வருடங்களுக்கு முன்பு ‘கோயில் கட்டுவதை விடக் கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்’ எனப் பேசி இருப்பவர் வேறு யாருமல்ல, நம் பிரதமர் மோடி. அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா?
ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பவர் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்குப் பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.
அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். “எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்…” எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.
விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா. கால்கள் சுட்டுப் பொசுக்க காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறியவும், அப்படியே வாழவும் அவர் கற்றுக் கொண்டார்.
இந்தச் சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். “சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க சார்…” எனச் சிலிர்த்த அவருடைய நல்ல மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது. இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை! அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தத்தளிக்கும் இக்கட்டில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது!” என்று தெரிவித்துள்ளார்.
ஏன் அப்படிப் பேசினார் ஜோதிகா? இதுதான் உண்மையான பின்னணி... pic.twitter.com/mdXiNY8lPb
— இரா.சரவணன் (@erasaravanan) April 23, 2020
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...