Latest News :

”உணர்வுகளின் அசலான பதிவு” - ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்
Saturday October-17 2020

‘ரேணிகுண்டா’ , ‘18 வயசு’, விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம், தற்போது ‘ஐஸ்வர்யா முருகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மாஸ்டர் பீஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரிக்கும் இப்படத்தில் அருண் பன்னீர்செல்வம் ஹீரோவாக அறிமுகமாக, வித்யா பிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஹர்ஷ் லல்வானி ஜி, சாய் சங்கீத், குண்டு கார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, ராஜன், தெய்வேந்திரன், நாகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த அருண் ஜெனா என்பவர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய, முகமது கலையை நிர்மாணிக்கிறார். தினேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, தஸ்தா நடனம் அமைக்கிறார்.

 

படம் பற்றி இயக்குநர் பன்னீர் செல்வம் கூறுகையில், “காதல் அழகானது தான் .இயல்பானதுதான்.ஆனால் அந்தப் பூ எந்த சந்தர்ப்பத்தில் மலரும் என்பதை யாரும் கணிக்க முடியாது .அப்படி இருவர் இடையே மலரும் காதல் சில நேரம் இரு குடும்பத்தையும் இலைகளும் கிளைகளும் தாண்டி வேரோடும் ஆணிவேரோடும் அசைத்து நிலை குலைத்து விடுகிறது.ஒரு புன்னகை மலரும் போது ஒரு கண்ணீர்த்துளி அரும்ப வேண்டும் என்கிற நியதி எதுவுமில்லை .ஆனால் காதலில் அது நிகழ்கிறது.அப்படி ஒரு காதலின் வலி நிறைந்த பக்கங்களைச் சொல்வதுதான் 'ஐஸ்வர்யா முருகன்'.

 

அப்படி என்றால் இந்தப் படம் காதலுக்கு எதிரானது என்று கேட்கலாம் .அப்படி இல்லை. காதலும் இயல்பானதுதான் .  அதை நாம் எடுத்துக் கொள்வதில்தான் சிக்கல்  இருக்கிறது .அதை சம்பந்தப்பட்ட இரு  குடும்பங்களும் எவ்வாறு எதிர்கொள்கின்றன? அதன் விளைவுகள் எப்படி இருக்கின்றன? என்பதையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும் -இருவரும் சேர்ந்து விட்டதுடன் அந்தக் காதல் கதை முடிவதில்லை .அதன் பின்னான விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. தாங்கள் ஏதோ இழந்துவிட்டதாக இரண்டு குடும்பங்களும் பரிதவிக்கின்றன, தத்தளிக்கின்றன, கொந்தளிக்கின்றன. அதன் விளைவுகள் மூர்க்கமாக வன்முறையாக வெளிப்படுகின்றன. நம் சமுதாயத்தில் அதன் சாட்சி சொல்லும் காட்சிகளாக  ரத்தமும் சதையுமாக எத்தனையோ சம்பவங்கள்  காணப்படுகின்றன. எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு அல்ல. காதலுக்கு மட்டும் ஏன் அதை ஒரு தீர்வாக  எடுத்துக் கொள்கிறார்கள்? என்று இந்தப் படம் கேள்வி கேட்கிறது. இப்படத்தின் நோக்கம் எந்தத் தீர்வையும் சொல்வதல்ல. கலை என்பது கேள்விகள் கேட்பதும் சிந்திக்க வைப்பதும் தான் என்கிற வகையில் நானும் இந்தப் படத்தில் சில கேள்விகளை வைத்திருக்கிறேன். நல்ல நட்பு பற்றிய காட்சிகளும் படத்தில் உள்ளன.

 

இப்படம் கதையையும் உணர்வுகளையும் மட்டும் நம்பி எடுக்கப்பட்டுள்ளது.  அதற்கேற்ற  புதுமுகங்களைப் பயன்படுத்தி இருக்கிறேன். படப்பிடிப்பை 45 நாட்கள் திண்டுக்கல், பழனி, மதுரை  பகுதிகளில் ஒரே மூச்சில் நடத்தி முடித்திருக்கிறோம். மண்ணும் மக்களும் இயல்பாக இருக்க பெரும்பாலும் அசலான மண்ணின் மைந்தர்களைப் பயன்படுத்தி இருக்கிறோம். மதுரையில் நெரிசல் நிறைந்த தெருக்களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். உணர்வு எங்கெங்கு தேடிச் செல்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் காட்சிகள் என்ற வகையில் எந்தச் சமரசமும் இல்லாமல் இடங்களைத் தேர்வு செய்து படப்பதிவு செய்திருக்கிறோம். இப்படத்தில் நடிகர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் கதை மாந்தர்களாகவே தோன்றுவார்கள்.

 

கணேஷ் ராகவேந்திரா இசையில் யுகபாரதியின் வரிகளில் இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளன. 'யாரோ இவன் ?' என்று சைந்தவி பாடும் பாடலும், 'அம்மம்மா' என்ற இன்னொரு பாடலும் காதலுணர்வு சொல்வன. 'எங்கிருந்தோ கத்து தம்மா செங்குருவி  காதலெனும் கல்லடியை தாங்காமல்' என்கிற பாடல்,  காதலர்களுக்குச் சில நேரம் நேரும் அவலங்களைக் கண்டு பதறும் நம் மனசாட்சியின் குரலாக ஒலிக்கும்.

 

படத்தைப் பார்த்துவிட்டு உணர்வுகளின் அசலான பதிவாக இருக்கிறது என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.

 

'ஐஸ்வர்யா முருகன்' விரைவில் திரையரங்குகளில் ஓர் அசலான திரைப் பதிவாக வெளிவரவிருக்கிறது” என்றார் நம்பிக்கையோடு.

Related News

6992

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...