Latest News :

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்த சந்தோஷ் நாராயணன்! - ‘மாஜா’வின் முதல் பாடல் ரிலீஸ்
Sunday March-07 2021

தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மாஜா’ என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த தளத்தின் முதல் பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில், அறிவு வரிகளில், தீயின் குரலில் உருவாகியுள்ளது. 

 

”என்ஞாய் எஞ்சாமி...” (Enjoy Enjaami) என்று தொடங்கும் இப்பாடல் மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் கலைப்பு எஸ்.தாணு, இயக்குநர்கள் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன், நலன் குமாரசாமி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் மணிகண்டன் பேசுகையில், “முதலில் இப்பாடலுக்கு முழுதாய் நான் தயாராகவில்லை. நான் பாடலை கேட்கவில்லை. ஆனால் அறிவு அவர்களின் வரிகளை கண்டு பிரமித்தேன். நம் தமிழ் கலாச்சாரத்தின் வலிமையை எடுத்துரைப்பதாக அது அமைந்திருந்தது. இந்த பாடல் சமத்துவத்தை பேசும்படி அமைந்திருந்தது. சமத்துவம் எனும் போது உலகில் அனைத்துமே சமம் தான். புல் பூண்டும்  வண்ணத்துபூச்சியும் ஒன்று தான். தீ ஒரு பெரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். அவரது குரலில் பாடலின் அனைத்து உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். சந்தோஷ் நாராயணனுடன் பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. ஒவ்வொரு வரியையும் இசையாக மாற்றும் அவரது மேதமை பிரமிப்பானது.” என்றார்.

 

இயக்குநர் நலன் குமாரசாமி பேசுகையில், “நான் பாடலை ஏற்கனவே கேட்டுவிட்டேன். ஆனால் பாடலை விஷுவலாக பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். ஒவ்வொரு பாடலும் ஒரு கதையை சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். இப்பாடல் அப்பணியினை மிகச்சிறப்பாக செய்துள்ளது.” என்றார்.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “தீ மிக அற்புதமான திறமை கொண்ட கலைஞர். வரிகளை பாடலாக தன் குரலில் கொண்டுவருவதில்  தனித்துவமான திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தாலும் அவரின் தமிழ் உச்சரிப்பு அனைவரும் பிரமிக்கும் வண்ணம் உள்ளது. அறிவு மற்றும் தீ இருவரும் இப்பாடலில் வியத்தகு பணியினை செய்துள்ளார்கள். அனைத்து தரப்பிலிருந்தும் விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களை வந்தடையும். சந்தோஷ் நாராயணன் இவர்கள் இருவரையும் இப்பாடலுக்கு அழைத்து வந்திருப்பது மிகச்சிறப்பானது. அவர்கள் இருவரையும் போலவே  இவரும் பெரும் திறமைசாலி. மிகப்பெரும் உயரத்தில் இருந்தாலும் எளிமையாக இருக்க கூடியவர். ஏதாவது குக்கிராமத்திலிருந்து திறமைசாலிகளை நான் அறிமுகப்படுத்தினாலும் அவர்களின் திறமையை மதித்து உடனடியாக பயன்படுத்துவார்.” என்றார்.

 

இயக்குநர் சுதா கொங்குரா கூறியதாவது, “நாங்கள் ஒரு முக்கியமான பாடலை பதிவு செய்யும்போது ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குரலை தேடிக்கொண்டிருந்தோம். சந்தோஷ் நாராயணன் அப்போது தான் தீ அவர்களின் திறமையை  அறிமுகப்படுத்தினார். அவரும் அற்புதமாக பாடி தந்தார். இப்போது கூட “சூரரை போற்று” படத்தில் “காட்டுப் பயலே” பாடலில் பிரமாதப்படுத்தியிருந்தார். சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி.” என்றார்.

 

Enjoy Enjaami Song Release

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறுகையில், “இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடனான பயணம் கபாலியில் துவங்கியது. பின் காலா  இப்போது கர்ணன் படத்திலும் தொடர்கிறது. இன்னும் எங்கள் பயணம் தொடரும். இப்பாடல் அற்புதமாக வந்துள்ளது. உறுதியாக சொல்கிறேன் இப்பாடல் உலகளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் கார்த்திக் சுபராஜ் பேசுகையில், “நானும் சந்தோஷ் நாராயணன் அவர்களும் இப்பாடலின் மையத்தை பற்றி பல காலமாக விவாதித்துள்ளோம். ஆனால் அவரது குறிக்கோள் தீ அவர்களை அறிமுகப்படுத்துவல்ல, சுயாதீன கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவது தான்.” என்றார்.

 

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், இப்பாடல் சந்தோஷ் நாராயணன், அறிவு மற்றும் தீ அவர்களின் மிகச்சிறப்பான பணி. இந்த முயற்சி தரமான தனித்துவமிக்க பாடலை உருவாக்குவது மட்டுமல்ல, அடையாளமின்றியிருக்கும் திறமைமிகு சுயாதீன கலைஞர்களை வெளிச்சம் போட்டு காட்டும் முயற்சி ஆகும். இசை திறமைகளை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷ் நாராயணன் மிகத்தீவிரமாக இயங்குபவர். தீ வெறும் பின்னணி பாடகர் அல்ல பாடல் வரிகளின் உணர்வுகளை அற்புதமாக வெளிக்கொண்டு வருபவர். இப்பாடல் அவரது திறமையை வெளிக்கொண்டுவந்துள்ளது. அறிவு மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். டிஜிட்டல் தளம் இசைக்கும் ரசிகர்களுக்குமான தூரத்தையும் தடைகளையும் உடைத்துள்ளது. இன்னும் நிறைய தனித்துவமான இசைக்கலைஞர்கள் வரும் காலத்தில் வந்துகொண்டே இருப்பார்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் தேவா பேசுகையில், “இது மிகவும் அழகான நிகழ்வு. சந்தோஷ் நாராயாணன் புது கலைஞர்களை ஊக்குவிப்பதை, நான் கேள்விபட்டிருக்கிறேன். தீ நம் பகுதியை சேர்ந்த ஒருவரைப் போலத் தெரியவில்லை, ஆனால் அவரது தமிழ் உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. பாடலாசிரியர் அறிவு மிக அற்புதமான வேலையை செய்துள்ளார்.” என்றார்.

 

பாடகி தீ பேசுகையில், “ஒரு நிகழ்வில் பேசுவதற்கு எந்தவித தயாரிப்பும் இல்லாமல் வரும் ஆட்களில் நானும் ஒருவர். பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நண்பர்களின் வருகை என்னை மிகவும் சந்தோஷபடுத்தியது. தென்னிந்தியாவின் திறமைமிக்க சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க, புதிய தளத்தை அறிமுகப்படுத்திய மாஜாவுக்கு (maajja) நன்றி. அமித்தின் (Studio MOCA)அற்புதமான வேலைக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அறிவு உலகின் சிறந்த கலைஞர்களில் ஒருவர். என் தந்தை என்பதை விட, மற்றொரு கலைஞராக சந்தோஷ் நாராயணன் அவர்களுடன் பணியாற்றுவதில் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன். நான் எப்போதும் ரஞ்சித் அண்ணாவின் படைப்புகளைப் பார்த்து பிரம்பிப்படைகிறேன், இந்த பாடல் அவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. என் அம்மா என் கடவுள், அவர் என்னை ஒரு கலைஞராக்குவதில் பெரும் அர்ப்பணிப்பை தந்துள்ளார்.” என்றார்.

 

பாடலாசிரியர் அறிவு பேசுகையில், “ஒரு சுயாதீன கலைஞரின் வாழ்கை எப்பொழுதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளான ரசிகர்களுடன் முடிந்துவிடும். ஆனால் இன்று எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, எனது பாடல் மிகப்பெரும் வெளியீட்டு நிகழ்வில் வெளியாகிறது. படத்திற்கு பாடல் எழுதுவது, சுயாதீனமான பாடல்கள் எழுதுவதில் இருந்து மாறுபடுகிறது. படத்திற்கு ஒரு சூழலுக்கான  பாடல்  தான் எழுத வேண்டியுள்ளது, தனியாக எழுதும்போது ஒரு கருவை மையபடுத்தி எழுதலாம். இப்படியான தளத்தை உருவாக்கியதற்கு மாஜாவிற்கு நன்றி சொல்லி கொள்கிறேன். இதன் மேற்பார்வையாளராக இருக்கும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் நன்றி சொல்லிகொள்கிறேன். சந்தோஷ் நாராயணன் ஒரு அரசியல் இசையமைப்பாளர், அவர் ஒரு பாடலை சாதாரணமாக இசையமைக்கமாட்டார். மிகவும் ஆழமாக சென்று, அதன் அடிநாதத்தை கண்டறிந்து இசையமைப்பார்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “அறிவு போன்ற நன்கு அறிந்த கலைஞருக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வருகிறது. கற்பனை செய்து பாருங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயாதீன கலைஞர்கள் உள்ளனர், அவர்கள் அங்கீகாரங்களுக்காக காத்திருக்கிறார்கள்.இப்போது நாங்கள் பல கிராமங்களையும் நகரங்களையும் பார்வையிடத் தொடங்கியுள்ளோம். அவர்களின் ஆத்மார்த்தமான படைப்புகளை ரசிப்பதை விட, அந்த கலைஞர்களின் திறமைகளை முன்பே காட்சிப்படுத்தாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்க விரும்பினேன். தீ ஒரு திறமையான கலைஞர். புதிய இசையை ஆராய்வதற்கான எனது லட்சிய உந்துதலின் பின்னால் உள்ள உத்வேகம் ரஞ்சித் தான்.” என்றார்.

 

பாடலாசிரியர் விவேக் பேசுகையில், “இது மிகவும் பிரத்யேகமான இடம். தீ தனித்துவமான திறமைமிக்கவர். அவர் அடிப்படையில் பாப் கல்சர் (pop culture) பாடகி, ஆனால் அவர் பலவிதமான வகைகளை முயற்சித்து பார்ப்பவர். சந்தோஷ் நாராயணன் தனது இசையின் மூலம் ஒரே நேரத்தில் மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சமாகவும், அதே நேரத்தில் புயலாகவும் தனது திறமையை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளவர். தீ அவர்களின்  சிறந்த படைப்புகளை காணும்போது, இசை சரியான கைகளில் இருப்பதாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அறிவு அத்தகைய அற்புதமான கலைஞர். இன்னும் நிறைய பாரட்டுக்களை பெற வேண்டியவர்.” என்றார்.

Related News

7368

”’தண்டேல்’ படத்திற்காக என்னை மாற்றிக் கொண்டேன்” - நடிகர் நாக சைதன்யா
Friday January-31 2025

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘தருணம்’! - ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது
Wednesday January-29 2025

சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது...

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Wednesday January-29 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...

Recent Gallery