’ராட்சசன்’ படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்த விஷ்ணு விஷால், அப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்தாலும், சுமார் இரண்டு வருடங்களாக அவருடைய நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகத நிலையில், இந்த வருடம் அவருடைய 4 படங்கள் ரிலீஸாக உள்ளது. அத்துடன், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும், தனது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் குறித்து இன்று பத்திரிகையாளர்களிடம் பகிந்துக் கொண்ட விஷ்ணு விஷால், “சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. முதலில் 'காடன்' வெளியாகிறது. அதைத்தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் 'எஃப் ஐ ஆர்' வெளியாகவிருக்கிறது. 'மோகன்தாஸ்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். 'ஜீவி' படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்.
இந்த ஆண்டிலேயே பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறேன். திருமண தேதி இன்னும் தீர்மானிக்கவில்லை. முடிவான உடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த திரைப்படம் ஒன்று திரையில் வெளியாகிறது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'ராட்சசன்' படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட விவாகரத்து தருணங்களின் போதும் எனக்குப் பக்கபலமாக இருந்து சொந்த வாழ்க்கைக்கு மதிப்பளித்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
சூரியுடனான பிரச்சனை குறித்து கேட்ட போது, அந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து பேச கூடாது. இருந்தாலும், சூரி சொன்ன நில பிரச்சனைக்கும் எனக்கும், எனது அப்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 5 வருடங்களுக்கு முன்பு நீங்கள் தான் என் தெய்வம் என்று என் அப்பா காலில் விழுந்த சூரி, இப்போது இப்படி செய்வது அதிர்ச்சியாக உள்ளது. அவரை பற்றி நிறைய குறை சொல்லலாம், அப்படி சொன்னால் அவருக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார். சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒருநாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்.” என்றார்.
போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறித்து கேட்ட போது, ”புகார் என் மீதல்ல. என்னுடைய வீட்டின் உரிமையாளர் மீது புகார் கொடுத்தனர். ஆனால் அதற்குப் பிறகு புகார் கொடுத்தவரிடம் நான் தன்னிலை விளக்கம் கொடுத்து விட்டேன். அதன் பிறகு அவரும் நானும் இன்றுவரை இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். அன்று இரவு என்னுடைய அறையில் நான் பணியாற்றும் படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் என்பதால், அவருக்கு பார்ட்டி கொடுத்தோம். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்கூட்டியே 6 பேர் மட்டுமே கலந்துகொண்ட பார்ட்டி அது. இதை போலீஸிடமும் தெரிவித்து விட்டோம். அவர்களும் விசாரித்துவிட்டு, புகார் கொடுத்தவரிடம் விளக்கம் கொடுத்து விட்டு சென்று விட்டனர். நான் போலீஸ் அதிகாரியின் மகன் என்பதால், புகார் கொடுத்தவர் ஏதேனும் வேறு வழியில் பழி வாங்கி விடுவாரோ என்ற அச்சம் அவருள் இருந்தது. அந்த அச்சத்தை அவரிடமிருந்து களைந்தேன். தற்போது நட்பு பாராட்டி வருகிறார்.” என்றார்.
சம்பளம் குறைப்பு குறித்து கேட்டதற்கு, “நான் 'ராட்சசன்' படத்தில் நடிக்கும் பொழுது 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்துக்கொண்டேன். ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் மற்றொரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். ஆனால் இதை நான் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க இயலாது. படப்பிடிப்பின்போது படத்தின் தரத்திற்காக படப்பிடிப்பு நாட்கள் அதிகரிக்கப்படும் பொழுது தயாரிப்பாளர் படும் வேதனையை நான் நேரில் கண்டிருக்கிறேன். இதன் காரணமாக 'ராட்சசன்' படம் வெற்றி பெறும் என்ற உறுதியாக நம்பினேன். அதற்காகவும் நான் என்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பதால் என்னுடைய வணிக எல்லை எது என்பது குறித்தும், திரை வணிகம் குறித்தும் எனக்கு ஓரளவுத் தெரியும்.
'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒன்பது படங்களிலிருந்து நான் நீக்கப்பட்டேன். ராட்சசன் படப்பிடிப்பின் போதுதான் என்னுடைய மனைவி விவாகரத்து கோருகிறார். இருந்தாலும் 25 நாட்கள் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தேன். தொழில் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
திரை உலகை பொறுத்தவரை நீச்சல் தெரியாத ஒருவரை கடலில் தூக்கி வீசியது போன்ற நிலையில் தான் என்னுடைய தொடக்க காலகட்ட பயணம் இருந்தது. 'ராட்சசன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தான், என்னாலும் இனிமேல் துணிந்து நீச்சலடித்து வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்தது.” என்றார்.
இறுதியாக ஒடிடி குறித்து பேசிய விஷ்ணு விஷால், தான் தயாரிக்கும் மற்றும் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு தன்னால் முடிந்த முயற்சியை முழுமையாக எடுப்பேன், என்று கூறிய விஷ்ணு விஷால், அதே சமயம், என்னால் முடியாத பட்சத்தில், பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்பை தாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒடிடி-யில் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவேன். ஆனால், என்னை பொருத்தவரை திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்க வேண்டும், என்று தான் சொல்வேன், என்று கூறினார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...