ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR.பிரகாஷ் பாபு, SR.பிரபு தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் 'சுல்தான்'. இப்படத்தில் நடித்த அனுபவங்களை கார்த்தி பகிர்ந்து கொண்டதாவது:
பாக்கியராஜ் சுல்தான் கதையை பற்றி ஒரு வரியில் கூறும்பொழுது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கை லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதை செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம். இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக்கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள் தான். ஆகையால் நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காக செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் சுல்தான். அதன் பிறகுதான் அவனுக்கு தெரிகிறது நூறுபேரை சமாளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்களை எப்படி கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் சுல்தான் திரைப்படம்.
20 நிமிடங்கள் தான் பாக்கியராஜ் கண்ணன் இக்கதையைக் கூறினார். கேட்ட உடனே ஒப்புக் கொண்டேன். பிறகு, எஸ்ஆர் பிரபுவிடம் இக்கதையை கேளுங்கள் என்று கூறினேன் அவரும் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றார்.
அதன் பின்பு, உணர்வுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூற, பாக்கியராஜ் கண்ணன் அதை அமர்க்களமாக ரெடி பண்ணினார். அதேபோல், நகைச்சுவை கதையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்டது.
இப்படத்தில் என்னை சுல்தான் என்று லால் சார் செல்லமாக அழைப்பார்.
யோகி பாபுவுடன் முதன்முதலாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறேன். அவரைப் பற்றி கூறவே வேண்டாம். அதுவும், உணவகத்தில் அவர் செய்யும் நகைச்சுவையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். நீங்கள் படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும். ‘ஓட்ட லாரி’ என்று கதாபாத்திரத்தைக் கூறியதுமே யோகி பாபு தான் நினைவிற்கு வந்தார். யோகி பாபு இக்கதையில் முக்கிய திருப்பு முனைக்கு காரணமாக இருப்பார்.
இக்கதையை நெப்போலியனிடம் கூறியதும் அவரும் சம்மதம் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே அவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால், 100 பேர் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். அங்கு, நகைச்சுவை, சண்டை, கேலி, கிண்டல், அவமானம் என்று அனைத்தையுமே கொண்டுவர முடியும். அதற்காக ஒன்றரை வருட காலம் நேரம் எடுத்து கதையை மெருகேற்றினார்.
இப்படத்தில், இன்னொரு சவாலான விஷயம் 100 பேரையும் காட்சிக்குள் கொண்டு வருவது தான். அதேபோல், இப்படத்தில் எழுந்த இன்னொரு சிக்கல், எந்த லென்ஸ் போட்டு 100 பேரையும் ஒரே காட்சியில் அடைப்பது என்கிற குழப்பம் தீரவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது.
மேலும், தந்தை கூறியதற்காக 100 பேரை சமாளித்து விடலாம் என்று நினைக்கும் பொழுது, நிலைமை கைமீறி போகின்றது. அப்பொழுது தான் கதை தீவிரமாக போகின்றது. இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக நிச்சயம் இருக்கும்.
100 பேர் இருந்தாலும், இறுதிக் காட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.
ராஷ்மிகா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் அப்பாவுடன் சிறுவயது முதலே தமிழ் படங்களை பார்த்து வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் கிராமத்து பெண் பாத்திரத்திற்காக காத்திருந்திருக்கிறார். இப்பட வாய்ப்பு கிடைத்ததும் எனக்கும், அப்பாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். அதேபோல் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை ரசித்து செய்தார். படப்பிடிப்பு தளத்திலும் இயல்பாக அனைவருடனும் பழகுவார். நாடு முழுவதும் அவர் பிரபலமடைந்த பிறகும் அவர் இயல்பாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.
இப்படத்தின் படிப்பிடிப்பு கடவூரில் நடத்தினோம். அந்த ஊர் மக்கள் மிகவும் பாசத்தோடு பழகினார்கள். தினமும் பலவித உணவு ஆசையாக கொடுத்தார்கள். அங்குள்ள சிறுவர்கள் நடிகர் என்பதை மறந்து அண்ணா, வாங்க அண்ணா கிரிக்கெட் விளையாடலாம் என்று அழைப்பார்கள்.
எனது ஒவ்வொரு படமும் இயக்குநர்களின் இரண்டாவது படமாக அமைவது திட்டமிட்டு நடப்பது அல்ல, தானாக நிகழ்வது.
இப்படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறேன். முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் பி.எஸ்.மித்திரன் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன்.
பொன்னியன் செல்வன் படத்திற்காக நான் நிறைய புத்தகம் படிக்க வேண்டியிருந்தது. அப்போது 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிர்வாகம், நீர் மேலாண்மை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
என் அண்ணன் சூர்யா, அவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டு வெற்றி பெற்றார். நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்தால் அப்படத்திற்காக பணியாற்றியோர் பலரின் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லாது என்பதற்காக இம்முடிவை எடுத்தார். மேலும், அப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
கொரோனா காலத்தில் அப்பாவிடம் கேட்டு சில புத்தகங்களைப் படித்தேன். இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல், சோழர்களின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எனது நண்பர்களிடம் கேட்டு சில புத்தகங்கள் படித்தேன். மேலும், கொரோனா காலத்தில் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து அதில் விளைந்த புடலங்காய், கீரை போன்ற பல காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட்டோம். எனது அம்மா நமது மாடித் தோட்டத்தில் விளைந்தது என்று மகிழ்ச்சியாக கூறி பரிமாறுவார். எங்கள் வீட்டில் எப்போதும் சிறு தானிய உணவுகளைத் தான் உண்போம். இந்த வகையான உணவுகளை சாப்பிட பழகி விட்டால் மற்ற உணவுகள் பிடிக்காது. சென்னையில் கிடைப்பதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்டது. ஆகையால், இயற்கையான உரம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை நேரடியாக சென்று வாங்கி வருவோம். உணவு விஷயத்தில் அப்பா மிகவும் கடுமையாக பின்பற்றுவார். மாலை 4 மணிக்கு மேல் எண்ணெயில் சமைத்த உணவை எடுத்துக் கொள்ள மாட்டார். என் மனைவி வந்த பிறகு வெள்ளை சர்க்கரையை முழுவதும் தவிர்த்து விட்டோம். கேக் செய்வதற்கு கூட நாட்டுச் சர்க்கரை தான் சேர்ப்போம்.
இவ்வாறு நடிகர் கார்த்தி 'சுல்தான்' பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...