’குற்றம் 23’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் உருவான இரண்டாவது படத்திற்கு ‘ஏவி 31’ என்ற தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டது. ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான முறையில், அதே சமயம் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தி பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தின் தலைப்பை தி பார்க் ஓட்டலின் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பம் மூலம் அறிமுகப்படுத்தினார்கள். தலைப்பு அறிமுகம் ஓட்டல் முகப்பில் ஒளிபரப்பான போது, ஓட்டல் அமைந்திருந்த அண்ணா சாலை பகுதியே அதிரும் விதத்தில் இருந்ததோடு, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் இத்தகைய வித்தியாசமான முறையை பார்த்து வியந்து போனார்கள்.
படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் பேசுகையில், ”தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோடை மழை பெய்தது. கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ.. அந்த அளவிற்கு இந்தப் படமும் அபூர்வமான திரைப்படம். இயக்குனர் அறிவழகன் என்பது அறிவு- அழகன் என காரணப்பெயராகிவிட்டது. இதைவிட சிறப்பாக அவரது பெற்றோர்கள் இவருக்கு பெயர் சூட்ட இயலாது. இந்த கொரோனா காலகட்டத்தில் திரை அரங்கிற்கு வருகை தந்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் காலில் விழுந்து நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கலைகளின் சங்கமம் தான் சினிமா என்பதை யாராலும் மறுக்க இயலாது. அனைத்து திறமைசாலிகளின் இறுதி இலக்கு சினிமாவாக இருப்பதை நினைத்து ஆராதிக்கிறேன். கொண்டாடுகிறேன்.
இன்று பிறந்திருக்கும் 'பிலவ' ஆண்டிற்கான அர்த்தத்தில் 'தாவி குதித்து' என்ற ஒரு பொருளும் உண்டு. அதேபோல் இந்த ஆண்டில் திரை கலைஞர்களுக்கு 'தாவிக்குதித்து அடையும் வெற்றி போல்' பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நாளில் 'பார்டர்' படத்தையும், அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 'அடுத்த சாட்டை', 'வால்டர்', 'பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லையோ.. என்ற ஆதங்கம் என்னுள் உண்டு. அந்த அடையாளத்தை இந்த 'பார்டர்' திரைப்படம் பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
இயக்குநர் அறிவழகன் பேசுகையில், “என்னுடைய படைப்பை காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாக சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தான் நான் விரும்புகிறேன். அந்த வகையில் 'பார்டர்' படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம். இத்தகைய சூழலில் என்னுடைய உதவியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கடினமாக உழைத்து படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். இன்று வெளியாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.
எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் 'பார்டர்' இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. 'குற்றம் 23' படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.
'குற்றம் 23' படத்திற்கும், 'பார்டர்' படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார். 'பார்டர்' படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம். இந்த 'பார்டர்' திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். திரை அரங்கிற்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில், “ரசிகர்களுக்கும், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'கைதி' படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குனர், சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் 'பார்டர்' படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு. என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்து விட்டது. இதற்குமுன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் 'பார்டர்' என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.
நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 'பார்டர்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன். தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு 'பார்டர்' படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்றதால், இந்த படம் இந்தியா முழுமைக்குமான ஃபேன் இந்தியா திரைப்படமாக வெளியாகும், என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...