Latest News :

‘அடங்காமை’ பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
Thursday April-29 2021

நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும் துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடங்காமை’. வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கோபால் இயக்குகிறார். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.

 

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகியாக நடிக்க, யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

 

சிறுவயதிலிருந்து ஒன்றாகப் பழகிய மூன்று நண்பர்கள் ஆளுக்கொரு லட்சியத்தோடு வளர்கிறார்கள். அதன்படி அவர்களில் ஒருவன் டாக்டராகவும், இன்னொருவன் நடிகனாகவும், மற்றொருவன் அரசியல்வாதியாகவும் மாறுகிறார்கள்.

 

டாக்டரை வளர்த்தெடுத்த பாதிரியார் மர்மமாகக் கொலை செய்யப்படுகிறார். அது மட்டுமல்ல டாக்டரின் காதலியின் அக்காவும் கொலை செய்யப்படுகிறாள். கொலைக்கான மர்மம் புரியாமல் குழம்பிப் போய் நண்பர்களின் உதவியை நாடுகிறான் மூவரில் ஒருவனான டாக்டர். ஆனால் உடனிருக்கும் அவர்களால் தான் இந்தச் சதி நடந்துள்ளது என்று பிறகே தெரிய வருகிறது. அவர்களை எப்படிப் பழிவாங்குவது? பழகிய நட்பில் பழிவாங்குதல் அறமல்ல என்று அவன் அஞ்சித் தயங்குகிறான்,யோசிக்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த  தீர்ப்பு எதிர்பாராத வகையில் இயற்கை மூலம் கிடைக்கிறது, அது என்ன தீர்ப்பு, அது எப்படி நடக்கிறது என்பது தான் ‘அடங்காமை’ படத்தின் கதை.

 

படம் பற்றி இயக்குநர் கோபால் கூறுகையில், ”திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் ”அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. 

 

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் 27ஆம் தேதி வெளியானது. அதே நேரத்தில் அடக்கமாக இருத்தல் இப்போதைய கொரோனா காலத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்றாகும். அதனால்தான் இப்போது வீடு அடங்காமையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்று எச்சரித்து ஊரடங்கு போட்டு அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறது.

 

எனவே அடங்காமையை எச்சரித்து கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒரு மோஷன் போஸ்டரையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதில் கைகள் தொடுதல் மூலம் நோய் வரும் அபாயத்தைக் கூறி ”நிலைமை அறிவோம், மடமை தவிர்ப்போம், அரசின் அறிவுரை ஏற்போம்”என எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.

 

தயாரிப்பாளர்களில் ஒருவரான பொன்.புலேந்திரன் டென்மார்க்கில் இருந்து இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார். தமிழ் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட இவர், இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத்தயாரிப்பில் ஈடுபட இருக்கிறாராம். திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார் புலேந்திரன்.

 

இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.ஜி.வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன், திரை இசை எம்.எஸ்.ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமானிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.வருகிறது.

 

‘அடங்காமை’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், “பொதுவான வழக்கமாகப்  படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில்  படத்தின் டைட்டிலை மட்டும் மோஷன் போஸ்டர் ஆக வெளியிடுவார்கள். இதில் படத்தின் பெயருடன் கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மோஷன் போஸ்டரை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது மக்களுக்குத் தேவை விழிப்புணர்வு தான். இந்த போஸ்டரை  வெளியிட்டதன் மூலம் நானும் அந்த விழிப்புணர்வுப் பணியில் பங்கு எடுத்துக் கொள்கிறேன்.” என்றார்.

Related News

7502

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் வெளியான ‘சங்கராந்தி வஸ்துனம்’!
Sunday March-02 2025

ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Sunday March-02 2025

இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...

இயக்குநர் மோகன்.ஜி - ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் உருவாகும் ‘திரெளபதி 2’!
Sunday March-02 2025

‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...

Recent Gallery