திரைப்படத்துறைக்கான மத்திய அரசின் புதிய சட்டம், படைப்புரிமையை பறிக்கும் வகையில் இருப்பதால், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் அதற்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா ஆகியோரை தொடர்ந்து இயக்குநர் அமீர், புதிய சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருப்பதோடு, சினிமாவில் அநீதியை எதிர்த்து போராடும் உச்ச நடிகர்கள், தற்போது ஒன்றிணைந்து போராட வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம்!! ஜெய் தமிழ்நாடு!!!
இந்தியா பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய 'உலகின் மாபெரும் ஜனநாயக நாடு' என்பதால் மட்டுமே, சர்வதேச அரங்கில் மிகப்பெரும் மரியாதையையும், பெருமையையும் பெற்றுத் திகழ்கிறது. இந்த மரியாதையையும், பெருமையையும் தகர்க்கும் விதமாக, தேசப்பற்று என்கின்ற ஒரு போலியான பிம்பத்தின் மூலம் நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே, மொழி வாரி மற்றும் மதவாரி சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள், ஒடுக்குதல்கள், தாக்குதல்கள் நடந்து வருவதோடு, அதற்கு உறுதுணை செய்யும் CAA, NPR, NRC போன்ற சட்டங்கள், விவசாயிகளை ஒடுக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்கள் என மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை நடைமுறைப் படுத்தியும் வருகிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களோடு நேரடியாக மோதிக் கொண்டும், மக்களை அலைக்கழித்துக் கொண்டும் இருக்கிறது. மேலும், மக்களின் உரிமையைப் பறிக்க புதிய சட்டங்களைக் கொண்டு வருவதும், அதை எதிர்த்து மக்கள் போராடுவதும் வாடிக்கையாகி, நெருக்கடிக் காலத்தைப் போல ஒரு புதிய வகையான அனுபவத்தை இந்தியத் துணைக்கண்ட மக்கள் அனைவருக்கும் ஒன்றிய அரசு தந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
பாசிச ஒன்றிய அரசின் முகமூடியைக் கிழித்தெறிய முற்பட்ட முற்போக்காளர்களான நரேந்திர தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கே இன்னும் முடிவு தெரியப்படாத நிலையில், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை மாற்றியும், பாடத்திட்டங்களின் மூலம் புதிய கட்டுக்கதைகளை புகுத்தியும், தமிழர்களின் போராட்ட வரலாற்றைத் திரித்துச் சொல்லும் 'பேமிலிமேன் 2' போன்ற திரைப்படங்கள் வெளிவர அனுமதித்தும், தற்புகழ்ச்சி பாடும் வகையில் மாண்புமிகு பிரதமர் மோதியைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், இனிவரும் காலங்களில் இந்தியத் திரைப்படங்களின் மூலமாக நாட்டின் உண்மைத் தன்மையையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் பதிவு செய்துவிடக்கூடாது என்கின்ற சர்வாதிகார நோக்கத்தோடு 'ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021' -ஐ ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இப்புதிய சட்டத்திருத்த மசோதாவின் சரத்துகளில், முக்கியமாக 'மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை, ஒன்றிய அரசு நினைத்தால் ரத்து செய்யலாம்' என்ற திருத்தம் ஆளும் பா.ஜ.க., அரசின் சர்வாதிகாரத் தன்மையை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. ஏற்கனவே, அரசுத்துறைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பதும், கருப்புச் சட்டங்களை மக்கள் மீது திணிப்பதும், பாதாள, பதுங்கும் அறைகளுடன் கூடிய 'சென்ட்ரல் விஸ்டா' என்ற புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை கட்டுவதும், அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறையை நோக்கிய நகர்தலே என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும். இதுபோன்ற செயல்கள் தொடருமானால், உலக அரங்கில் 'மாபெரும் ஜனநாயக நாடு' என்ற பெருமையை இந்தியா இழப்பதோடு, அன்பையும் , அஹிம்சையையும் சொன்ன மகாத்மா காந்தி பிறந்த மண்ணுக்கு மாபெரும் தலைக்குனிவையும் ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனம்.
எனவே, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான 'ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021'-ஐ, திரைப்படங்களில் அநீதிக்கு எதிராக வசனம் பேசிக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும், அவற்றை எழுதிக் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுமை மிக்க இயக்குநர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர்களும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இந்நேரத்தில், அவர்கள் முதலில் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள், ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல எனவே நான் ஏதும் பேசவில்லை பிறகு அவர்கள் சோசலிஸ்டுகளையும் தொழிற் சங்கவாதிகளையும் பிடிக்க வந்தார்கள், ஆனால் நானோ ஒரு சோசலிஸ்டோ, தொழிற் சங்கவாதியோ அல்ல எனவே நான் ஏதும் பேசவில்லை. பின்னர் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தார்கள், ஆனால் நானோ ஒரு யூதன் அல்ல, எனவே நான் ஏதும் பேசவில்லை. கடைசியில் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர், அப்போது எனக்காகப் பேச யாருமே இருக்கவில்லை. - மார்டின் நியெ மொல்லெர்
என்று ஹிட்லரின் கொடுங்கோல் அரசுக்கு எதிராக போர்ச்சூழலில் எழுதப்பட்ட கவிதையைப் புரிந்து கொள்ளவும், அதே போல நாமும் இங்கே எழுத வேண்டியதும் அவசியமாகிறது.
எனவே, இப்போதாவது ஒன்றிணைந்து குரலெழுப்புவோம்.! போராடுவோம்.!
வாழ்க ஜனநாயகம்.! ஒழிக சர்வாதிகாரம் .!! ஜெய் தமிழ்நாடு.!!!
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...