Latest News :

திருக்குறளை மையப்படுத்தி உருவாகும் 'அடங்காமை' படத்தின் இசை வெளியீட்டு விழா
Friday September-10 2021

வோர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பொன்.புலேந்திரன் மற்றும் கைக்கேல் ஜாக்சன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அடங்காமை’. புதுமுக நடிகர் சரோன், புதுமுக நடிகை பிரியா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் கார்த்திகேயன், யாகவன், முகிலன், கணேஷ், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஆர்.கோபால் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் இப்படத்திற்கு பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கியூரன் மென்டிசன், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரமணிகாந்த் மற்றும் ஹெரால்ட் மென்டிஸன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகை வனிதா விஜயகுமார், பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் கே.ராஜான், இயக்குநர் வ.கெளதமன், நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமி, வசனகர்த்தா ஏ.பி.சிவா, இசையமைப்பாளர் எம்.எஸ்.செரிகாந்த், படத்தின் நாயகி பிரியா, நடிகர் முகிலன், நடிகர் பப்பு, தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தலைவர் டைமண்ட் பாபு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் ஆர்.கோபால், “தயாரிப்பாளர்களிடம் படத்தின் கதையை விவரிக்கும் போது, படத்திற்கு ஏன் ’அடங்காமை’ என பெயர் வைத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டனர்.  

 

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது அதிகளவு பேருந்துகளில் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்ற இந்த திருக்குறள் தான் இடம் பெற்றிருக்கும். எத்தனையோ திருக்குறள் இருக்க, இந்தத் திருக்குறளை மட்டும் அதிகளவிலான  பேருந்துகளில் இடம்பெற்றிருப்பதன் பின்னணி குறித்துச் சிந்தித்தேன். பிறகு இந்தக்குறளுக்கான பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றையும் வாசித்தேன். மேலும் இந்தத் திருக்குறளை மேற்கோளிட்டு ஏராளமான தலைவர்கள் உரையாற்றியதையும் அறிந்தேன். அதனைத்தொடர்ந்து இதனை மையமாக வைத்து கதை ஒன்றை உருவாக்கினேன். திருக்குறள் அனைவரது வாழ்வியலோடு இரண்டறக் கலந்து இருப்பதையும் உணர்ந்தேன். பிறகு இதை மையப்படுத்தி, அடக்கமான ஒரு நாயகன், அடங்காத இரண்டு நண்பர்கள் என மூவரை மையப்படுத்திக் கதையை எழுதினேன். இதில் மூவருக்கிடையேயான காதல், துரோகம் எல்லாம் கலந்த கலவையாகத் திரைக்கதையை உருவாக்கினேன்.

 

படத்தின் நாயகன் சரோன், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். படப்பிடிப்பின் போது இங்கு வருகை தருவதில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பல சிக்கல் இருந்தது. பல தடைகளையும் கடந்து, இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்.

 

இந்தப் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை டென்மார்க்கில் வசிக்கும் ஈழத் தமிழரான கீயூரன் மென்டிசன் இசையமைத்திருக்கிறார். மற்றொரு இசையமைப்பாளரான எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மற்றும் பின்னணி இசையை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.

 

தயாரிப்பாளர் கே ராஜன் நான் வசிக்கும் வட சென்னை பகுதியைச் சேர்ந்தவர். அவர் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பேசும் மேடை பேச்சுக்களை இணையதளத்தில் கண்டு, அவரின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டேன். ஒரு படத்தின் வெற்றிக்கு ஆதாரம் கதை என்பதையும், அந்தக் கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்? அப்படத்திற்குரிய பட்ஜெட் என்ன?, அதற்கான வியாபாரம் என்ன? என பல விஷயங்களை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து படக்குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தயாரிப்பாளர்கள் 1993 ஆம் ஆண்டில் கலை இயக்குநர் தோட்டா தரணி அவர்களது மேற்பார்வையில் பிரசாத் படப்பிடிப்பு வளாகத்தில் உருவான அரங்கம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றியவர்கள். அதன் பிறகு வாழ்க்கையில் முன்னேறி சினிமா மீதான பேரார்வத்தின் காரணமாக இப்படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள்.

 

திருக்குறளை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  

 

திரைப்படம் உருவாக்குவது நல்லதொரு தொழில். சில திட்டமிட தெரியாத படைப்பாளிகளால் தான் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை எம்முடைய அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

 

மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் உதவி எழுத்தாளராக அறிமுகமாகி, அதன் பிறகு திரைக்கதை ஆசிரியர் அன்னக்கிளி செல்வராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி, திரைக்கதை மற்றும் திரைப்படத்தின் நுட்பங்களை கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தின் மூலம் இந்தப் படத்தைச் சிறிய பட்ஜெட்டில் அற்புதமாகச் செதுக்கி இருக்கிறேன். இதுபோன்ற சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களை ரசிகர்கள் திரை அரங்கிற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழில் பெயர் வைத்தால் சலுகை வழங்கப்படும் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

 

பாடலாசிரியர், நடிகர் சினேகன் பேசுகையில், “சிறிய முதலீட்டுப் படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாவதற்கான வழிவகை காண வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் உதவியையும் கேட்டுப் பெற வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

 

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”தமிழ் திரை உலகில் தமிழ் பேசும் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே வழங்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டார்.

 

தயாரிப்பாளர் கே.ராஜன் இசை குறுந்தகடை வெளியிட படக்குழுவும், சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

Related News

7721

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

எம்.ஜி.ஆர் முகத்தை மறைக்கும் நம்பியார் முகம் ! - கவனம் ஈர்க்கும் ‘வா வாத்தியார்’ டீசர்
Wednesday November-13 2024

’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...

Children's Day special: Here are some of the best picks for the kids on JioCinema!
Wednesday November-13 2024

Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...

Recent Gallery