விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா? என்ற திரையுலகினரின் சந்தேகத்தை தவிடுபொடியாக்கி, மீண்டும் மக்கள் கூட்டத்தை திரையரங்குகளுக்கு கூட்டி வந்திருக்கும் ‘கோடியில் ஒருவன்’ வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் ஆண்டனி பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், “விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன் தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குநர் தான். இந்தப் படம் மட்டுமல்ல நான் நடித்த அனைத்து படத்திற்குமே இது பொருந்தும். ஆனந்த் என்னிடம் கதை சொல்லும் போதே கண் கலங்கி விட்டார். உண்மையான விஜயராகவன் அவர்தான். இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் போல ஆனந்த கிருஷ்ணனும் விஜய், அஜித் போன்றவர்களை வைத்து படம் இயக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து தகுதியும் இவருக்கு இருக்கிறது. என் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கு நன்றி. இந்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றி அதில் பணிபுரிந்த அனைவருக்கும் கிடைத்த வெற்றி.” என்றார்.
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் பேசுகையில், “என் அம்மாவிடம் நான் சொல்லியிருந்தேன் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று .எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன் .நான் நினைத்ததை விட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது. மெட்ரோ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன .ரசிகர்களுக்கு பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்த படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனி தான் உண்மையான கோடியில் ஒருவன். கோடியில் ஒருவன் ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார் தான்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்களை தியேட்டருக்கு கொண்டுவந்த முதல்படம் கோடியில் ஒருவன் தான். இரண்டாவது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா இல்லையா என்ற கேள்விகளை தவிடுபொடியாக்கி கோடியில் ஒருவன் ஜெயித்து இருக்கிறது. இந்த படத்தை எந்தவித பிரச்சனையுமின்றி தயாரித்துக் கொடுத்த தயாரிப்பாளர் ராஜா சாருக்கும் இயக்குனருக்கும் நன்றி. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு வருடங்களாக படத்தின் செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் டி.டி.ராஜா பேசுகையில், “இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் போதே ஊரடங்கு வந்தது. 6 மாதத்தில் முடிக்க வேண்டிய படம் 20 மாதங்கள் கடந்தது. OTT இல் இப்படத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிக விலையில் வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் இப்படத்தின் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தது .தியேட்டரில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று நினைத்து இப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஊடகத்துறையும், பத்திரிகை துறையும் தான்.” என்றார்.
‘கோடியில் ஒருவன்’ வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்ட படக்குழுவினர், அப்படியே ‘கோடியில் ஒருவன்’ இரண்டாம் பாகத்திற்கும் தயாராவதாக தெரிவித்தனர். குறிப்பாக இயக்குநர் அனந்த கிருஷ்ணன், கோடியில் ஒருவன் இரண்டாம் பாகம் நிச்சயம் இருக்கிறது, என்று தெரிவித்தார்.
ஆக, தனது மாபெரும் வெற்றிப் படமான ‘பிச்சைக்காரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி, விரைவில் ’கோடியில் ஒருவன்’ இரண்டாம் பாகத்திற்காகவும் தயாராகப் போகிறார்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...