நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.1 கோடி நிதி உதவி செய்துள்ளார். இது தொடர்பாக இன்று சென்னை பிரசாத் லேபில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம் தொடர்பாக வேண்டுகோள் விடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. உதவி செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. அதற்காக மன்னிப்பு கேட்பதற்காக தான் அவரை நான் தொடர்பு கொண்டேன்.
இந்த தருணத்தில் மேன் கைண்ட் மற்றும் காசா கிராண்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்தேன். அதில் கிடைத்த ஊதியத்தை ஆர் கே செல்வமணியிடம் கொடுத்து விட வேண்டும் என முடிவு செய்தேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் பணம் வரும் போதெல்லாம் ஏதேனும் கடன்காரர்களுக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்கே சரியாகி விடுகிறது.
அதன் பிறகு, நாம் செய்வது ஏதோ பெரிய உதவி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இந்தத் திட்டம் 800 கோடி மதிப்பிலானது. அதில் நான் கொடுப்பதெல்லாம் ஒரு சிறிய புள்ளி அவ்வளவுதான்.
இது ஒரு மிகப்பெரிய கனவு. மிகப் பெரிய முயற்சி. மிக சிறப்பாக தொடங்கி நல்லவிதமாக நிறைவடைய வேண்டும். நம்முடைய தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறுகிய காலத்திற்குள் இது நடைபெறும் என்றும், அதற்கு சரியான தலைவர் தான் இதற்கு பொறுப்பேற்றிருக்கிறார் என்றும் நான் முழுதாக முழுமனதுடன் நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
என்னுடைய உதவியை ஒரு கோடி ரூபாயுடன் நிறுத்திக் கொள்ளும் எண்ணமில்லை. தொடர்ந்து இந்த திட்டத்திற்கு என்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வேன்.
நான் திரைத்துறையில் வருவதற்கு முக்கியமான காரணம் என் தந்தையாரின் 10 லட்சம் கடன் தான். சிறிய வயதில் எனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை. துபாய்க்குச் சென்று சம்பாதித்து, கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கு சென்று சம்பாதித்து, வட்டியை மட்டும் தான் கட்டினேன். அசலை கட்ட முடியவில்லை.
அதன் பிறகு வீட்டு வாடகை. இருபதாம் தேதி ஆனவுடன் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படி வாடகை கொடுக்கப் போகிறோம் என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும்.
அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார்கள். என்ன கணக்கு என்று தெரியாது. விலைவாசி உயர்வை விட, வீட்டு வாடகை உயர்வு தான் அதிகம். இதுதான் பதற்றத்தை ஏற்படுத்தும்.
இதனால் எப்பாடுபட்டேனும் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அப்பாவின் 10 லட்சம் கடனை அடைத்துவிட வேண்டும். இந்த இரண்டு விஷயத்திற்காக தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். இங்கு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன்.
இப்படி தெரியாமல் தான் சினிமாவில் நடிக்க தொடங்கினேன். திட்டமிட்டு நடிக்க வரவில்லை. அப்படி ஒரு ஆசையும் இருந்ததில்லை.
வீட்டு வாடகை என்பது மிகப்பெரிய பாரம். சில இடங்களில் ஏதோ பாகிஸ்தானில் குடி இருக்கிறோம் என்ற உணர்வு வரும். வீட்டு உரிமையாளர்கள் விதிக்கும் நிபந்தனைகள் அப்படி இருக்கும். நான் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் இடம் பெற்றது போல், துணி காய போடக்கூடாது. சுவற்றில் ஆணி அடிக்க கூடாது. இப்படிப் பலப்பல புதிய புதிய நிபந்தனைகள் இருக்கும். உறவினர்கள் வரக்கூடாது. வந்தால் உடனடியாகத் திரும்பி செல்ல வேண்டும். அவர்கள் இங்கு குளிக்க கூடாது, என ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பார்கள்.
அதனால் சொந்த வீடு கனவு என்பது எல்லா தொழிலாளர்களுக்கும் இருக்கும் ஒரு கனவு. அந்தக் கனவு, அந்த ஆசை,இன்று நிறைவேறத் தொடங்குகிறது. கண்டிப்பாக இந்த கனவை என்னால் மட்டும் சுமக்க இயலாது. ஏனெனில் இதற்காக செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதனால் இந்த திட்டம் சிறப்பாக தொடங்கி, சிறப்பாக நிறைவடைய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்றார்.
பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது. எந்த பிரதிபலனும் பாராமல் இவர் வழங்கும் இந்த நிதி உதவிக்காக பெப்சி தொழிலாளர்கள் என்றென்றைக்கும் அவருக்கு நன்றியுடன் இருப்பார்கள்.
எங்களின் குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தம் ஒன்பது தொகுதிகளாக கட்டப்பட இருக்கிறது . இதில் ஒரு தொகுதிக்கு 248 குடியிருப்புகள் இடம்பெறும். இதில் ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ‘விஜயசேதுபதி டவர்’ என பெயரிட்டிருக்கிறோம். இந்த பெயர் சூட்டலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள் சூட்டி இருக்கிறோம். இந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முழுவதும் விஜயசேதுபதி கடவுளாக தான் தெரிவார்.” என்றார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...