சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் வெளியீட்டை தமிழ்த் திரையுலகம் மட்டும் இன்றி அரசியல் உலகமும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மை சம்பவம் தான். ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு வழக்கறிஞரின் வெற்றிக்கரமான வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய் பீம்’ மூலம் பதிலளிக்கத் தயாராக உள்ளார்.
வியாபார நோக்கில் மட்டும் படங்களை தேர்வு செய்யாமல், எளிய மற்றும் நிராகரிக்கப்பட்ட மக்களை பயணத்தை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் முயற்சியில் அவ்வபோது ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா, ‘ஜெய் பீம்’ குறித்து கூறுகையில், “24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்.
’ஜெய் பீம்’ திரைப்படம் மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை. இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான். இனிவரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களை கொடுக்க விடும்புகிறேன்.” என்றார்.
த.செ.ஞானவேல் கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தின் மூலம் 240 நாடுகளில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...