Latest News :

’ஆன்டி இண்டியன்’ படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள்!
Wednesday November-24 2021

பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன், இயக்கியிருக்கும் ’ஆன்டி இண்டியன்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.

 

இந்த நிலையில், ’ஆன்டி இண்டியன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கானா பாடல்களை பாடியதோடு மட்டும் இன்றி அந்த காட்சிகளில் நடித்த கானா பாடகர்களை நேரடியாக மேடையில் பாட்டு பாட வைத்து, நிகழ்ச்சியை கலகலப்பாக தொடங்கிய இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், “இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடந்தது. அப்போதே பாடல்களையும் வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், அந்த நிகழ்ச்சியில் அண்ணன் ராதாரவியால் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே ராதாரவியின் தலைமையில் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதனால், தான் இன்று இந்த விழா நடைபெறுகிறது. எனவே, இந்த விழாவின் நாயகன் அண்ணன் ராதாரவி அவர்கள் தான்.

 

நாவ அவரிடம் கதை சொல்ல சென்ற போது மூன்று முறை என்னிடம் கதை கேட்டார். பிறகு அவர் நடிக்கும் போது, அவரை அப்படியே ரியலாக காட்ட வேண்டும் என்று நினைத்து, அப்படியே ரியலாக இருந்தால் போதும், லைவாக இருக்கும் என்றேன். அதற்கு அவர், கற்பழிப்பு காட்சிகளையும் அப்படியே லைவாக தான் எடுப்பீயா என்று கேட்டு என்னை அதிர்ச்சியடைய செய்தார். பிறகு நான் சொன்னது போலவே நடித்து கொடுத்தவர், வசனங்களில் சிறு சிறு திருத்தம் செய்தார். ஆனால், அதை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிறகு நான் சொன்னது போலவும், அவர் திருத்தம் செய்தது போலவும் காட்சிகளை படமாக்கி இறுதியில் இரண்டையும் சேர்த்துக்கொண்டேன். அது ரொம்ப நன்றாக வந்துள்ளது.

 

சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன். சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னாடி, இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க” என்றார்.

 

நடிகர் ராதாரவி பேசுகையில், “இந்த படத்துல நான் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியும். படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனா இந்த நேரத்துல இந்தப்படம் வெளியாகும்போது யாரு என்னவிதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியல.

 

இந்தப்படம் வெளியாகிறதுக்கே மாறனுக்கு நிறைய எதிர்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.நிஜம் தான். அத்தனை பேரு படத்த கழுவி ஊத்திருக்கார். நிச்சயம் காத்துக்கிட்டுதான் இருப்பாங்க. திட்டத்தான் செய்வாங்க. அதேசமயம் படம் வெளியானா மாறனுக்கு வாழ்த்தும் கிடைக்கும். அந்த அளவுக்கு திட்டும் கிடைக்கும்.அதனால யாரும் என்ன வேணா பேசிட்டு போகட்டும். நீ எதுக்கும் வாய் திறந்து கருத்து சொல்லாம அப்படியே சைலண்ட்டா இருந்துரு.

 

ஒரு படத்தை படமா பாருங்க.படம் முடிஞ்சுதா, அதை தியேட்டர்லயே விட்டுட்டு வந்துருங்க.விஜய் பைரவான்னு ஒரு படத்துல மெடிக்கல் காலேஜ் மோசடி பத்தி சொல்லிருந்தாரு.ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ சொல்லிட்டாருன்னு உடனே திருந்தவா போறாங்க.. அதுக்கு பின்னாடி இதே மாதிரி ரெண்டு காலேஜ் திறந்துட்டாங்க.

 

நிச்சயம் இந்தப்படம் வெளியானதும் இதுக்கு விவாத மேடை நடத்துறதுக்கு தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. இந்தக்காலத்துல கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களை சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது.

 

படங்களை எல்லாம் ஒடிடி தளத்துலேயே ரிலீஸ் பண்ணிகிட்டே இருந்தா, உன் படத்துக்கு இவ்வளவுதான் வேல்யூ அப்படினு, நாளைக்கு ஹீரோவாட சம்பளத்தையே அவங்க தான் நிர்ணயிப்பாங்க” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசுகையில், “இந்தப்படத்துக்கு மாறன் தான் இசையமைச்சிருக்காரு.. அதுபத்தி அவரு தன்னடக்கமா தான் பேசினாரு.. ஆனா படத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணிருக்காரு.இந்தப்படம் வெளியானதும் நிறைய படங்களுக்கு அவரை இசையமைக்க கேட்டு வந்தாலும் அதுல ஆச்சர்யப்பட தேவையில்லை. வடிவேலுக்கு அப்புறமா யதார்த்தமா நடிக்கிற காமெடி நடிகர் இல்லாத சூழல் இருக்கு. ஆனா இந்த விஜய் டிவி பாலா நிச்சயம் காமெடில ஒரு பெரிய ஆளா வருவாரு. ஷூட்டிங்ஸ்பாட்டுல இவரோட நடிப்பை பார்த்து அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. ராதாரவி மாதிரி சீனியர் நடிகர்கள் சொல்கிற கரெக்சன்களை ஏத்துக்கிறதுல தப்பே இல்ல. அவரை மாதிரியான அனுபவசாலி நடிகர்களை நாம தொடர்ந்து பயன்படுத்திக்கணும்.

 

இந்தப்படத்தை வெளியிட விடக்கூடாதுன்னு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தப்படத்தால ஏற்கனவே இலாபம் கிடைச்சிடுச்சு அப்படின்னு நான் இதுக்கு முன்னாடி நிகழ்ச்சில சொல்லிருந்தேன்.ஆனா அப்படி ஏதும் நடக்கலை.. ஏன்னா இந்தப்படத்தோட வியாபாரத்துல மிகப்பெரிய சதி நடந்திருச்சு.

 

இந்தப்படத்தை வெளியிட்டா தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருமோன்னு ஒடிடி நிறுவனங்கள் இந்தப்படத்தை வாங்க தயங்குனாங்க.தமிழர்களுக்கு எதிரான பேமிலிமேன்-2 மாதிரியான படங்களை ரிலீஸ் பண்றாங்க.ஆனா தமிழர்களுக்கான படத்தை ரிலீஸ் பண்ண மறுக்கிறாங்க.அதனால ஒரு பக்கம் தியேட்டர்கள்ல நாங்களே சொந்தமா ரிலீஸ் பண்றோம்.. இன்னொரு பக்கம் வெளிநாடுகள்ல காண்ட்ரலி அப்படிங்கிற நிறுவனம் மூலம் தியேட்டர் வசதிகள் இல்லாத ஊர்களுக்கு கேபிள் மூலமா இந்தப்படத்தை வெளியிட ஒப்பந்தம் பண்ணிருக்கோம்.இதனால வியாபாரத்துல பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு புது முயற்சி எடுத்துருக்கோம்னு சொல்லலாம்.” என்றார்.

 

சேலம் பகுதிக்கான இப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் நடிகரும் இயக்குநருமான ராமகிருஷ்ணா பேசுகையில், “ப்ளூ சட்டை மாறன் அவர்கள் மீது திரையுலகினருக்கு பெரும் கோபம் இருக்கிறது, எனக்கும் தான். காரணம், ஒரு படத்தை மிக கடுமையாக விமர்சித்து, அந்த படத்தை படுதோல்வி அடைய செய்திருக்கிறார். இருந்தாலும், இந்த படத்தை நான் சேலம் பகுதியில் விநியோகம் செய்ய வாங்கியிருக்கிறேன். அதற்கும் ப்ளூ சட்டை மாறன் தான் காரணம். ஏன் என்றால், அவருடைய படம் மிக நன்றாக வந்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். அது மட்டும் அல்ல, விநியோகம் மற்றும் திரையரங்க துறையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலர், மாறன் படத்திற்கு நிச்சயம் நல்ல ஓபனிங் இருக்கும், என்று கூறுகிறார்கள். அதுமட்டும் அல்ல, பல திரையரங்குகளில் இருந்து அவர்களே என்னை தொடர்பு கொண்டு படத்தை நாங்கள் திரையிடுகிறோம், என்று கூறி ஒப்பந்தம் போடுகிறார்கள். சொல்ல போனால், மாறனின் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். இருந்தாலும், மாறன் மீது எனக்கு கோபம் இருக்கத்தான் செய்கிறது.” என்றார்.

Related News

7891

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery