Latest News :

”படம் முடிந்த பிறகும் மனதுக்குள் ஓடுகிறது” - பிரபலங்களின் பாராட்டில் ‘பேச்சுலர்’
Tuesday November-30 2021

தரமான மற்றும் வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களை தயாரித்து வரும் அக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லிபாபு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அவர் தேர்வு செய்யும் கதைகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வெற்றி திரைப்படங்களாகவும் அமைந்துவிடுகிறது.

 

’மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ என்று தொடர் வெற்றிகளை கொடுத்தவர், தற்போது அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்ய பாரதி ஆகியோரது நடிப்பில் ‘பேச்சுலர்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

 

ஐடி துறையில் பணிபுரியும் இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இந்த நிலையில், ‘பேச்சுலர்’ படக்குழுவினர் நேற்று மாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில், ஜிவி பிரகாஷ்குமார், திவ்ய பாரதி, இயக்குநர் சதீஷ் செல்வகுமார், தயாரிப்பாளர் டில்லிபாபு, விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

 

இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் வெளியிடும் பி.சக்திவேலன் நிகழ்ச்சியில் பேசுகையில், ”இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். சாதாரண ரசிகனாக சொல்கிறேன் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். படம் பார்த்து மறுநாளும் மனதிற்குள் இந்தப்படம் ஓடிக்கொண்டே இருந்தது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் டில்லிபாபு இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம் என்றார். டப்பிங் மட்டுமே 800 மணி நேரத்திற்கும் மேலாக செய்திருக்கிறார். இவரைப்போல் சமீபத்தில் திரைத்துறை மீது காதல் கொண்ட எவரையும் பார்த்தில்லை. இவர் பாதுகாக்கப்பட வேண்டிய நட்சத்திர தயாரிப்பாளர். தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கலைஞனாக இப்படத்தின் மூலம் வந்திருக்கிறார் இயக்குநர் சதீஷ். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் போல் இப்படம் இருக்கும். ஜீவி சாரோட கேரியர் பெஸ்டாக இப்படம் இருக்கும். இளைஞர்களுக்கான படமே இங்கு இல்லை. அதை போக்கும் விதமாக இப்படம் இருக்கும். எல்லோரும் அனுபவித்து ரசித்து பார்க்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.” என்றார்.

 

Bachelor

 

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசுகையில், ”3 வருடத்துக்கு முன்னாடி டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார். அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறு ஒன்றை எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம், தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து,  இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி. தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார். ஜீவி சார்,  ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம்,  இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்ன, சின்ன உணர்வும் படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும். படம் இத்தனை இயல்பாக இருக்க அவர் தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு  பேசுகையில், “படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான். 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு. போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது. அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். படத்தை பார்த்த அனைவருமே படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். எனக்கு ராட்சசனுக்கு பிறகு பெரிய படமாக இது இருக்கும். ஜீவி தந்த உழைப்பு பிரமிப்பானது இரவு பகலாக உழைத்திருக்கிறார். அவர் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். திவ்யபாரதி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஜீவிக்கும் அவருக்கும் நடிப்பில் போட்டியிருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம். நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்கள் தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன். சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது. 2 வருஷம் இயக்குநர்  சதீஷ் கேட்ட அனைத்தையும் தந்திருக்கிறேன். இயக்குநருக்கான சுதந்திரத்தை தர வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் கண்டுபிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சதீஷ். எல்ல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் தியேட்டரில் படம் பாருங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் GV பிரகாஷ் குமார் பேசுகையில், “இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன். டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது. அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது, அது திவ்ய பாரதிக்கு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார். ஆனால் பராவாயில்லை அருமையான மியூசிக் தந்திருக்கிறார். இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம், அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.” என்றார்.

 

ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Related News

7896

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery