Latest News :

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பு - ‘மாநாடு’ படத்தை பாராட்டிய சீமான்
Tuesday November-30 2021

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. வெளியான முதல் மூன்று நாட்களிலேயே பல படங்களில் வசூல் சாதனையை முறியடித்திருக்கும் இப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள பாராட்டி அறிக்கையில், “அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும் போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி வியப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு. இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிற போக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது. 

 

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்! அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்! தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

 

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்ட போதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்! எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்!

 

நானே வெற்றிபெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.

Related News

7897

ரூ.10 கோடிக்காக தனுஷ் மீது பரபரப்பு குற்றம் சாட்டிய நயன்தாரா!
Saturday November-16 2024

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...

”பயம் கலந்த சந்தோஷத்துடன் தான் சம்மதித்தேன்” - மனம் திறந்த நடிகர் அதர்வா
Saturday November-16 2024

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...

“சித்தார்த்தின் ரொமாண்டிக் கம்பேக் படமாக ‘மிஸ் யூ’ இருக்கும்” - இயக்குநர் என்.ராஜசேகர்
Friday November-15 2024

7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில்,  இயக்குநர் என்...

Recent Gallery