வித்தியாசத்தையும், புதுமையையும் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் டைம் லூப் என்ற புதிய ஜானர் திரைப்படங்கள் கூட வெளியாக தொடங்கியிருந்தாலும், குடும்பக் கதை திரைப்படங்களுக்கு என்று எப்பவுமே தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படிப்பட்ட படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை. அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் தான் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.
ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரித்துள்ள இப்படத்தை நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக், சேரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக, நடிகர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதியின் இளைய மகள் ஷிவத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் சரவணன், டேனியல் பாலாஜி, பாடலாசிரியர் சினேகன், வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜோ மல்லூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
போரா பரணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க, சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி.தியாகராஜன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, நடிகைகள் குட்டி பத்மினி, ஜீவிதா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா ”இந்தப்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரவர தமிழ் படங்களின் பெயர்களே பிடிக்கவில்லை. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. நந்தா பெரியசாமி அற்புதமான கதாசிரியன். நல்ல இயக்குநர். கார்த்திக்கை இயக்கும் போது அவனுக்கு இப்படி ஒரு பையன் வருவான் என நினைக்கவில்லை. அவனோடு அமர்ந்திருப்பது மகிழ்ச்சி. ராஜசேகரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன், அவர் மகள் இப்போது நடிக்கிறார். அவர்களின் பெற்றோரோடு இருந்து விட்டு, இன்று அவர்களுடன் இருக்கிறேன் மகிழ்ச்சி. ரங்கநாதன் நல்ல தயாரிப்பாளர். இப்படி ஒரு தலைப்பில், கூட்டு குடும்ப படம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழ் படம், அற்புதமான படம். இந்தப்படம் பார்க்கும் போது நம் கண் கலங்கும், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “பிரமாண்டமான விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்தே ஒரு மிகப்பெரிய படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, இப்போது படத்தின் வியாபாரத்தையும் முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ரங்கநாதன். அவருக்கு வாழ்த்துக்கள். ஹிந்தியில் வந்து வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்தை எழுதியிருக்கிறார் நந்தா பெரியசாமி. அவரது இயக்கத்தில் இந்தப்படம் வருவது பெரிய வரவேற்பை தரும். ராஜசேகரின் மகள் ஷ்வாத்மிகா மிக அழகாக இருக்கிறார். சேரன் மற்றும் கௌதம் கார்த்திக்கு இப்படம் பெரிய வெற்றியாக அமையவேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசுகையில், “ஆனந்தம் விளையாடும் வீடு படத்திற்கு டைட்டிலே அதுவே அழகு தான். இப்படத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. 25 வருடங்கள் முன் தர்மபத்தினி படம் வந்தது, அதில் கார்த்தி சாரும், ஜீவிதா மேடமும் நடித்திருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் இன்று இணைந்து நடிக்து, இந்தப்படம் வருவது மகிழ்ச்சி. அந்தப்படம் போல் இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். சேரன் எப்போதும் நல்ல படங்கள் தான் நடிப்பார். இந்தப்படம் நன்றாக இருக்கும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன் பேசுகையில், “இந்தப்படம் பாடல்கள் டிரெயலர் பார்க்க மிக அழகாக இருந்தது. இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். தயாரிப்பாளரை மிகவும் பாராட்ட வேண்டும் இவ்வளவு ஆர்டிஸ்ட், டெக்னீஷுயன் வைத்து அருமையாக எடுத்திருக்கிறார். நிச்சயம் குடும்ப படங்கள் ஓட வேண்டும் இந்தப்படமும் ஓடும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “என்னுடைய ஆனந்தம் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு ஆனந்தம் விளையாடும் வீடு தான். அப்பொது இந்த டைட்டிலை சேரன் சார் வைத்திருந்தார். அவர் நடிப்பதற்காக வைத்திருப்பதாக சொன்னார். பின் ஆனந்தம் என வைத்தோம். அன்று அவர் நடிப்பதாக சொன்னது இன்று நடந்திருக்கிறது. ஆனந்தம் திரைக்கதை வளர நந்தா தான் காரணம். தோல்வியோ வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா. அவருக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. சினேகன் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அறிமுகமாகும் ஷ்வாத்மிகாவுக்கு வாழ்த்துக்கள். இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்தப்படத்தை பார்க்கும் போது பெரிய குடும்பம் படம் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நாள் ஓடினாலே, இந்தப்படம் 100 நாள் ஓடும். சேரனுக்காக தான் இன்று வந்தேன் அவனை என் மாணவன் என சொல்லிக்கொள்வது எனக்கு பெருமை. நாயகி ஷ்வாத்மிகா அப்பாவை வைத்து படம் எடுத்திருக்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள். சித்துவின் பாடல்கள் எல்லாம் நன்றாக இருந்தது. சேரனுக்கு இந்தப்படம் மட்டுமல்லாமல், அவன் நடித்து இன்னும் நிறைய படங்கள் ஓடி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்தப்படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் சேரன் பேசுகையில், “சித்துகுமார் இப்போது தான் வளர்கிறார். இந்தப்பாடலை நந்தா போட்டு காட்டிய பிறகு, சித்துவை பார்த்த போது இவரா இசையமைத்தார் என தோன்றியது, நம்பவே முடியவில்லை. அவர் நன்றாக வர வேண்டும். சினேகன் நல்ல கவிஞர். தேசிய விருது கிடைக்கும் என்கிறார்கள் வாழ்த்துக்கள். இந்த இருவருக்கு தான் இந்த விழா. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். இந்தப்படம் தான் எங்களுக்கு கொரோனா காலத்தில், மூன்று மாதம் சாப்பாடு போட்டது. அந்த தர்மமே இந்தப்படத்தை வெல்ல வைக்கும். எதையும் சரியாக திட்டமிட்டு செய்கிறார். நந்தா பெரியசாமி என்ற நண்பன் ஒருவனுக்காக மட்டுமே செய்த படம் தான் இது. அவரது வெற்றிக்கு ஒரு அனிலாக இருக்க வேண்டுமென்று தான் இந்தப்படத்தில் நடித்தேன். நல்ல சிந்தனையாளன் தோற்க கூடாது. இந்தப்படத்திற்கு பிறகு அவர் பெரிய வெற்றி பெறுவார். நிறைய கதைகள் வைத்துள்ளார். அவரை விட்டு விடாதீர்கள். அவர் பின்னால் நான் நிற்பேன். இந்தப்படத்தில் எங்கள் குடும்பம் மொத்தமாக இங்கு இருக்கிறது. எனக்கு அண்ணன் தம்பி இல்லை அதை இந்தபடத்தில் வாழ்ந்து அனுபவித்தேன். அவ்வளவு அழகாக எல்லோரும் கேர்க்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கௌதம் கார்த்திக் அத்தனை எளிமையாக இருக்கிறார். அவரது குரல் அப்படியே கார்த்திக் சார் போலவே இருக்கிறது. ஷ்வாத்மிகா நம்ம வீட்டு பிள்ளை ராஜசேகரின் மகள், அருமையாக நடித்திருக்கிறார். இந்தப்படம் அற்புதமாக வந்திருக்கிறது பார்த்து ஆதரவு தாருங்கள்.” என்றார்.
இந்நிகழ்வில் ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசுகையில், “இந்தப்படத்தை விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை, கஷ்டப்பட்டு தான் இதை உருவாக்கியிருக்கிறோம். அத்தனை ஆர்ட்டிஸ்டும் கடுமையான ஒத்துழைப்பு தந்தார்கள். சேரன் சார் எனக்கு ஒரு அண்ணன் தான். அவர் இந்தப்படத்தில் எல்லா வேலையும் செய்தார். சித்துகுமார் அருமையான பாடல்கள் தந்திருக்கிறார். இந்தப்படத்திற்கு சினேகனுக்கு தேசிய விருது கிடைக்கும். நந்தா உண்மை உழைப்பு உயர்வு என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பார். எப்போதும் உழைத்து கொண்டே இருப்பார். இப்படத்தில் அனைவருமே கடுமையான உழைப்பை தந்திருக்கிறார்கள். படத்தை கிறிஷ்துமஸ்க்கு கொண்டு வர வேலை செய்து வருகிறோம். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நாயகி ஷிவத்மிகா ராஜசேகர் பேசுகையில், “இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த நந்தா சார், ரங்கநாதன் சாருக்கு நன்றி. சேரன் சாருடன் முதல் படத்திலேயே நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள் படம் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.
நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில், “இந்த மேடையில் ஜாம்பவான்கள் உடன் இருப்பது பெருமையாக இருக்கிறது. எல்லொரைப்பற்றி அனைவரும் பேசி விட்டார்கள். பைட்டர் தினேஷ் இதில் அழகாக வேலை பார்த்துள்ளார் அவருக்கு நன்றி. ராதிகா மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. நிறைய குட்டீஸ் இப்படத்தில் அழகாக நடித்துள்ளார்கள். ஷ்வாத்மிகா இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். சேரன் சாருடன் தான் அதிக காட்சிகள் நடித்திருக்கிறேன். நிறைய விசயங்கள் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நன்றி. சித்துக்குமார் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகான வரிகள் தந்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் அழகாக வந்துள்ளது. பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்றார்.
இந்நிகழ்வில் இயக்குநர் நந்தா பெரியசாமி பேசுகையில், “தயாரிப்பாளர் ரங்கநாதன் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொன்னார். 5000 நஷ்டம் வந்தால் கூட தாங்க முடியாது, பார்த்து பண்ணி தாருங்கள் என்றார். நானும் மிடில் கிளாஸ் தான் சார் என்று அவருக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றி கொடுத்தேன். அதற்கு உதவிய கலைஞர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி. ஒரு நல்ல படத்தை செய்திருக்கிறேன்.” என்றார்.
40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...