பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கள்ளன்’. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்புராயன், மாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வ.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே இசையமைத்துள்ளார். எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்துள்ளார். நா.முத்துக்குமார், யுகபாரதி, ஞானகரவேல், சந்திரா தங்கராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் டீசரை நேற்று (டிச.14) நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் டீசர், மறுபக்கம் எதிர்ப்பையும் எதிர்கொண்டு வருகிறது. இதற்கு காரணம் படத்தின் தலைப்பு தான்.
கள்ளர் சமூகத்தை சேர்ந்த சிலர் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக நாயகன் கரு.பழனியப்பன், இயக்குநர் சந்திரா தங்கராஜ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மிரட்டலும் விடப்பட்டு வருதாக கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பாக நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த இயக்குநர் சந்திரா தங்கராஜ், ”இந்த படத்தில் சாதி பற்றி எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குற்ற பின்னணியில் சொல்லப்பட்ட கமர்ஷியல் திரைப்படம்.
வேட்டையாடும் தொழிலை சார்ந்திருக்கும் கதாநாயகன், வேட்டையாடுவதற்கு அரசு தடை போட்டவுடன், திருடுவதில் ஈடுபடுகிறார். அதனால் அவரது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் படத்தின் கதை. வேட்டைக்கு தடை விதிக்கும் அரசு, அதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு மாற்று வழியை காண்பிக்க வேண்டும் என்பதையும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அம்மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதோடு, தவறான முறையில் வாழும் வாழ்க்கை இறுதியில் அழிவை தான் தரும், என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறோம். இப்படிப்பட்ட கதைக்கு பொருத்தமான தலைப்பு ‘கள்ளன்’ என்பதால் தான் வைத்தோம். இது சாதியை குறிக்கும் வார்த்தை அல்ல, இது ஒரு தமிழ் வார்த்தை. எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் போன்ற படங்கள் தான் எனக்கு இப்படி ஒரு தலைப்பு வைக்க தூண்டுதலாக இருந்தது.
இந்த விளக்கத்தை எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கூறிவிட்டோம். அதையும் தாண்டி எதிர்ப்பவர்கள் படத்தை பார்த்த பிறகு நிச்சயம் எதிர்க்க மாட்டார்கள். அதே சமயம், நீதிமன்றமோ அல்லது தணிக்கை குழுவோ இந்த தலைப்பை மாற்ற சொன்னால், நிச்சயம் வேறு ஒரு தலைப்பு வைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். மற்றபடி, வேறு யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.” என்றார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் சந்திரா தங்கராஜ், “மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக மட்டும் இன்றி, நல்ல கருத்தை மக்களுக்கு சொல்லும் ஒரு கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். அதே சமயம், படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் மக்கள் மனதில் பெரிய இடம் பிடிப்பார்கள். குறிப்பாக படத்தில் வரும் இரண்டு பெண் கதாப்பாத்திரங்கள் பெரிதும் பேசப்படும். படத்தில் வேட்டையாடும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை கிராபிக்ஸ் மூலம் தான் படமாக்கினோம். ஆனால், அது கிராபிக்ஸ் என்று தெரியாதவாறு மிக நேர்த்தியாக இருக்கும். அதனால் தான் கொஞ்சம் காலதாமதமும் ஆனது.” என்றார்.
தயாரிப்பாளர் வ.மதியழகன் பேசுகையில், “நான் பல படங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கிறேன். ஆனால், இந்த படம் தான் வெளியாக சற்று காலதாமதாகி விட்டது. இதற்கு கொரோனா போன்ற பிரச்சனைகள் தான் காரணம். இயக்குநர் சந்திரா எனக்கு சொன்னது போலவே படத்தை மிக சிறப்பாக முடித்துக்கொடுத்து விட்டார். இப்படம் ‘சுப்பிரமணியபுரம்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் போல மேக்கிங்கில் மிரட்டும். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருக்கும். படத்தை பார்த்த இயக்குநர் ராம், படம் பேய் போல இருப்பதாக கூறியவர், க்ளைமாக்ஸ் மற்றும் கடைசி 25 நிமிட படம் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருப்பதாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியாமல் போகிறார்கள். ஆனால், இயக்குநர் சந்திரா அந்த குறையை போக்கிவிடுவார் என்பது ‘கள்ளன்’ படத்தை பார்த்த போது தெரிகிறது.” என்றார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ள ‘கள்ளன்’ படக்குழுவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...