தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நானியின் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது ‘ஷியாம் சிங்கா ராய்’. சன்கிரித்யன் இயக்கியுள்ள இப்படத்தை நிகாரிஹா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ளார்.
மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி, “எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பல தடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாக சொன்னார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி பேசுகையில் ”டிசம்பர் 24 தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஷியாம் சிங்கா ராய் வெளியாகிறது. எங்கள் குழு சிறந்த படத்தை தந்துள்ளது. அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள், உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.
சமுத்திரக்கனி பேசுகையில், “நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகர் நானி பேசுகையில், “நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷீட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன். தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை. எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம், படமாக்கும் போது சிறந்த அனுபவமாக இருந்தது. கதை பெங்காலில் நடக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு முழுதாக புரியும். நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன். உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான். நான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம், நல்ல கதை கிடைக்கும் போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம். கமல் சார் படங்கள் பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம் அதனால் அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும்.” என்றார்.
மைக்கே ஜே.மேயர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...