டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், ரெபா மோனிகா ஜான் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான ‘ஃபாரென்சிக்’ (Forensic) ’கடைசி நொடிகள்’ என்ற தலைப்பில் தமிழில் உருவாகியுள்ளது.
விஸ்வாசாந்தி பிக்சர்ஸ் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை எஸ்.சந்திரசேகர் நாயுடு கவனிக்கிறார். தமிழ் உருவாக்கம் மற்றும் வசனத்தை ஏ.ஆர்.கே.ராஜராஜா கவனிக்கிறார். அகில் பால் - அனாஸ் கான் இயக்கியுள்ள இப்படத்திற்கு அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.
யூகிக்க முடியாத காட்சிகளும், சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்த விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ’கடைசி நொடிகள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள லீ மேஜிக் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, தயாரிப்பாளர் லிஸ்டன், நடிகை மீனா ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, “கோபிநாத் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளர். அவர் பல வெற்றி தெலுங்குப் படங்களை தயாரித்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு வருவதாக அவர் என்னிடம் சொன்ன போது, நான் வேண்டாம் என்று கூறினேன். தெலுங்கில் படம் சுமாராக இருந்தாலே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தமிழில் மிக நல்ல படங்களை மட்டுமே ரசிகர்கள் ஏற்பார்கள், அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அவர் அதை கேட்காமல் தமிழில் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், சில காரணங்களால் அந்த வேலை சற்று தாமதமாகியிருக்கிறது.
இந்த நிலையில், தான் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஃபாரென்சிக்’ படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருப்பதாக கூறினார். உடனே நான் அப்படம் குறித்து லிஸ்டினிடம் விசாரித்தேன். அவர் படம் குறித்து நல்லபடியாக சொன்னதோடு, மலையாளத்தில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றும் கூறினார். நான் படம் பார்க்கவில்லை. ஆனால், இன்று டிரைலரை பார்த்த போது தான் தெரிந்தது, படம் மிக சிறப்பாக இருக்கும் என்று. எனவே, மலையாளத்தில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் ‘கடைசி நொடிகள்’ மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நயன் தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ போல இந்த ‘கடைசி நொடிகள்’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். கோபிநாத்தும் தெலுங்கு சினிமாவில் எப்படி பெரிய தயாரிப்பாளராக வலம் வருகிறாரோ அதுபோல் தமிழ் சினிமாவிலும் பெரிய தயாரிப்பாளராக வலம் வர வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி பேசுகையில், “ஆர்.பி.செளத்ரி சார் போன்ற ஜாம்பவான்கள் இங்கு வாழ்த்தியது பெருமையாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்கள் தயாரிப்பது சுலபம். ஆனால், அதை வியாபாரம் செய்வது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதே சமயம், இன்று வியாபர தளங்கள் பெருகிவிட்டது. ஒடிடி, டிஜிட்டல், சாட்டிலைட், வெளிநாட்டு உரிமம் என்று பல தளங்களில் ஒரு திரைப்படத்தை தனி தனியாக வியாபாரம் செய்யலாம். ஆனால், அது குறித்து பல தயாரிப்பாளர்களுக்கு தெரிவதில்லை. ஒட்டுமொத்தமாக கையெழுத்து போட்டுக்கொடுத்து விடுகிறார்கள். எனவே, விஷயம் தெரியாதவர்கள் ஆர்.பி.செளத்ரி சார், தாணு, தேனாண்டாள் முரளி போன்ற அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு வியாபாரத்தில் ஈடுட வேண்டும். அதேபோல், ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பட்ஜெட்டை விட அப்படத்தை விளம்பரம் செய்ய ஏகப்பட்ட செலவாகிறது. இதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘கடைசி நொடிகள்’ படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. டிரைலரை பார்க்கும் போது படம் பார்க்க தூண்டுகிறது. அதனால், படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
ஏ.ஆர்.கே.ராஜராஜா பேசுகையில், “நான் பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களை தமிழாக்கம் செய்திருந்தாலும் தற்போது அந்த பணிகளை நிறுத்திவிட்டு நேரடி தமிழ்ப் படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு படத்தை இயக்கியும் வருகிறேன். அதனால் தான் ‘புஷ்பா’ படத்திற்கு என்னால் வசனம் எழுத முடியவில்லை. ஆனால், இந்த படத்திற்கு நான் தான் வசனம் எழுத வேண்டும் என்று கோபிநாத் சார் கேட்டுக்கொண்டார். அவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை தயாரித்தவர். அவர் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறேன். இது தான் எனது கடைசி டப்பிங் படமாகவும் இருக்கலாம். ஆனால், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். காரணம், படம் அந்த அளவுக்கு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும்.” என்றார்.
முன்னதாக பேசிய தயாரிப்பாளர் கோபிநாத், ”’கடைசி நொடிகள்’ திரைப்படம் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படம். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படம் போல பிரமாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதால் தான் இந்த தலைப்பை நான் தேர்வு செய்தேன். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்று கூறினார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...