Latest News :

அம்பேத்கர் அறிமுகமாகும் ‘6 அறிவு’ திரைப்படத்தை தொல்.திருமாவளவன் துவக்கி வைத்தார்
Tuesday February-15 2022

நமச்சிவாய மூவிஸ் சார்பில் அம்மா விஜய் தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘6 அறிவு’. புரட்சி நாயகனாக அறிமுக நாயகன் அம்பேத்கர் நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக மோனிகா மற்றும் மீரா ராஜ் நடிக்கிறார்கள். வேலன் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். பூ முத்துகுமார் பாடல்கள் எழுத, கே.தங்கராஜ் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றுகிறார். பி.ஆர்.ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துக்கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி படத்தை துவக்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய தொல்.திருமாவளவன், “அம்மா விஜய் அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பில் ’6 அறிவு’ என்கிற திரைப்படம் உருவாக இருக்கிறது. அதனுடைய தொடக்க விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றியதற்கு பெருமை படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அம்மா விஜய் அவர்களுக்கு நன்றி. இந்த விழாவில் சமூக சேவகர் முருகன், கொடுங்குளம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திருப்பவர் சாமி தோப்பு அடிகளார். அவர்களுடைய சார்பாக வந்திருக்கும் டாக்டர்.ஜெய்லானிக்கும் வாழ்த்துகள். அடிகளாரின் உறவு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் தம்பி அம்பேத்கர். அடிகளாரின் உறவினர் சகோதரர் தனபால், அவருடைய அன்பு மகன் தான் தம்பி அம்பேத்கர். இந்த பெயரை கேட்டால் பலரும் அதிர்ச்சியாகவும், அதே நேரத்தில் வித்தியாசமாக பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஏன் என்றால், அம்பேத்கர் என்று பெயர் சூட்டிய இந்த இளைஞர் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இந்த பெயர் சூட்டியதே ஒரு புரட்சிகரமான நிகழ்வு. அடிகளார் அன்பு தேசம் என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தொடக்க விழாவின் போது நாகர்கோவிலில் நான் பேசினேன். அப்போது, அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர், அவர் அனைத்து சமூகத்திற்கான முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்தவர். அப்படி இருக்கையில் தலித் அல்லாத சமூகத்தினர் தங்களது குழந்தைகளுக்கு ஏன் அம்பேத்கர் பெயரை சூட்டுவதில்லை? என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது அடிகளார், நாடார் சமூகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவோம் என்று அறிவித்தார். அதன்படி, சகோதர் தனபால் தனது குழந்தைக்கு சிசுவிலேயே அம்பேத்கர் என்று பெயர் சூட்டினார். அதே பெயரில் அந்த தம்பி கல்லூரி படிப்பை முடித்தார். இப்போது சினிமாவில் அதே பெயரில் புரட்சி நாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அவருடன் இணைந்து நடிக்கும் நாயகிகள் மோனிகா மற்றும் மீரா ராஜ் ஆகியோருக்கும் வாழ்த்துகள். இந்த படத்தை இயக்கி தயாரிக்கும் அம்மா விஜய், சிறப்பான படமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. அதற்கு என் வாழ்த்துகள். அவருக்கு துணையாக நிற்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

 

திரைத்துறையில் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில திரைப்படங்களில் முகம் காட்டியிருக்கிறேன். திரைப்படத்துறை தமிழக அரசியல் மற்றும் பண்பாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சினிமாவில் இருப்பவர்கள் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே திரைப்படங்களுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும், தமிழநாட்டு கலாச்சாரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் திரைப்படங்களை பொழுதுபோக்காக கருதினால், தமிழ்நாட்டில் திரைப்படங்கள் வாழ்வியலாகவே மாறியிருக்கிறது. அரசியல் களத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, என்பதை நாம் அறிவோம். அத்தகைய களத்தில் தம்பி புரட்சி நாயகன் அம்பேத்கர் சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு வந்திருக்கிறார். அவருடைய அந்த உணர்வை மதிக்கும் வகையில், ஊக்கப்படுத்தும் வகையில் இந்த படத்தை இயக்கி தயாரிக்கும் அம்ம விஜயின் முயற்சி பாராட்டத்தக்கது. அவருடைய இந்த ‘6 அறிவு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் சமூகத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான அம்மா விஜய் கூறுகையில், “ஒரு புரட்சிகரமான கருத்தை தரமான திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காக சிறப்பான கதையாகவும், இதுவரை சொல்லப்படாத களமாகவும் உருவாக உள்ள ‘6 அறிவு’ திரைப்படத்தின் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். சமுதாய சிந்தனையோடு, அனைத்து இளைஞர்களும் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக எப்படி இருக்க வேண்டும், என்ற கருத்தை சொல்வது தான் ‘6 அறிவு’. இந்த படத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று பாசத்தோடும், பணிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Related News

8038

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...