Latest News :

’விசித்திரன்’ மூலம் நம்பிக்கை அளித்த ஆர்.கே.சுரேஷ்! - அறிவுரை கூறிய இயக்குநர் பாலா
Tuesday February-22 2022

இயக்குநர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘விசித்திரன். மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, பல்வேறு மொழிகளில் வெளியாகி பாராட்டு பெற்ற ‘ஜோசப்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்க, பூர்ணா, மது ஷாலினி, மாரிமுத்து, இளவரசு, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

’ஜோசப்’ மலையாளப்படத்தை இயக்கிய எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில், ‘விசித்திரன்’ படக்குழுவினரோடு, ஏராளமான திரையுலக பிரபலங்கள், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் என ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பாலா, “இந்தப்படத்த ரீமேக் பண்ணலாம் என்ற போது சுரேஷ் ”நான் பண்றேன் அண்ணா” என்றான். அப்ப அதே டைரக்டரை அழைப்போம் என அவரை கூப்பிட்டு நீங்கள் அங்கே செய்ய முடியாததை, பணம் பற்றி கவலை இல்லாமல் பண்ணுங்கள் என்றேன். அவரும் மலையாள படத்தை விட இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார். இந்தப்படம் மூலம் சுரேஷுக்கு நல்ல மரியாதை கிடைக்கும், அதை அவன் காப்பாற்றி கொள்ள வேண்டும். இனி தான் அவர் ஜாக்கிரதையாக சினிமாவில் பயணிக்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நான் தயாரிக்கும் படங்களை பார்த்த பிறகு அந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என்றால், என் பெயரை போட வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். ஆனால், இந்த படத்தை பார்த்துவிட்டு என் பெயரை போடுங்கள் என்றேன். படம் ரொம்ப நல்லாவே இருக்கிறது. ரசிகர்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “என் தந்தை, என் அம்மா, என் தந்தைக்கு அடுத்து என்னை கை தூக்கி அழைத்து செல்லும் பாலா அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. 13 வருசமா நான் திரைத்துறையில் இருக்கிறேன். பத்திரிக்கைகள் எனக்கு நிறைய ஆதரவு தந்துள்ளார்கள். இப்போது திரையரங்குகள் முழுக்க திறந்த பின் என் பட விழா நடப்பது மகிழ்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முன்னால் நான் நடிகனாக மாறி வந்துள்ளேன். ஜோசப் படம் பார்த்துவிட்டு, அது என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது, பாலா அண்ணனிடம் போய் சொன்னேன், இது நல்ல படம் ஆனால் இந்தப்படத்திற்கு நிறைய முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். இந்தப்படத்திற்காக உடல் எடை ஏற்றினேன். நிறைய உழைத்தேன். உழைத்தால் தான் சினிமா அங்கீகாரம் தரும். பாலா அண்ணன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார்களை இயக்கிய பத்மகுமார் சார் இயக்கத்தில் நடிப்பது வரம். என் படகுழுவினருக்கு நன்றி. ஜீவியின் ரசிகன். அவரது இசைக்கு நன்றி எல்லோருக்கும் நன்றி.” என்றார்.

 

 

ஜீவி பிரகாஷ் பேசுகையில், “பாலா சாரின் பி ஸ்டுடியோஸ் உடன், வேலை பார்க்கும் மூனாவது படம். என்னை கமிட் பண்ணும் போது ஜோசப் பற்றி எனக்கு தெரியாது. அதன் பிறகு தான் பார்த்தேன் பத்மகுமாரின் இயக்கம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரது காட்சிகளை பார்த்துதான் இசையமைத்தேன். சுரேஷ், பூர்ணா எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள், இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “ஆர்.கே.சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன். ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரிய வந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரை பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை கேட்க அற்புதமாக இருக்கிறது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகை பூர்ணா பேசுகையில், “ஒரு இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தில் வருவது மிக சந்தோஷமாக இருக்கிறது. பாலா சார் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி ஆனால் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும், பாலா சார் வாய்ப்பு தாருங்கள். ஜோசப் மலையாளத்தில் ஒரு மைல்கல் படம் பத்மகுமார் அட்டகாசமாக இயக்கியிருந்தார். அவர் எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சுரேஷ் இந்தப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார், அவர் நடிப்பால் நானும் நன்றாக நடித்திருக்கிறேன். ஜீவி இசையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை இந்தப்படத்தில் இரண்டு பாடலில் நடித்துள்ளேன், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசுகையில், “மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச்ச படம், இத்தனை அவார்டு வாங்கின படத்த ரீமேக் பண்ண யாரும் யோசிப்பாங்க, அதிலும் பெஸ்ட் ஹீரோ அவார்ட் வாங்கின படம், அப்படி ஒரு படத்த தைரியாமா நல்ல படத்த கொடுக்கனுமுனு எடுத்துட்டு வந்திருக்காங்க. இந்த படத்தில் நடிக்க நிறைய தைரியம் இருக்கனும், சுரேஷ் எதையும் துணிந்து செய்வார். அவர் முதலில் நடிக்க போகிறேன் என்று என்னிடம் சொன்ன போது, ஏதோ ஒரு படம் ஆசைக்கு செய்வார் என நினைத்தேன், ஆனால் அவர் இன்று அடைந்திருக்கும் இடம், அவர் தேர்ந்தெடுத்த பாதை பெரியது. பாலா அண்ணனின் படத்தில் அறிமுகமாகி, இன்று ஜோசப்பில் நடித்திருக்கிறார். இயக்குநர் பத்மகுமார் அவர்களே இங்கும் இயக்கியிருப்பது படத்திற்கு பலம். ஜீவி உற்சாகமான இசையை தருபவர். அவரது இசை இந்தப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Visithiran Audio Launch

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “ஜோசப் படத்தோட ரீமேக் என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் இது அப்படியில்லை. அதை அப்படியே ரீமேக் மாதிரி செய்யாமல், நிறைய காட்சிகளை இதில் சேர்த்து ஒரு புதுப்படம் போல அருமையான நடிகர்களோடு கொண்டு வந்துள்ளார்கள். முதலில் இந்தப்படம் பாத்தவுடனே நானும் ரீமெக் பண்ண ஆசைப்பட்டேன். ஆனால் சுரேஷ் நான் பண்றேன் அண்ணா என்றார். வில்லனாக நடிக்கும் அவர் எப்படி இந்த பாத்திரம் செய்வார் என நினைத்தேன், ஆனால் அவர் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள். பாலா அண்ணன் இந்த நல்ல படத்தை தமிழுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

Related News

8053

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery