Latest News :

’கள்ளன்’ மற்றும் ‘காஷ்மீர் ஃபைல்ஸ் ’ விவகாரம் - அரசுக்கு கோரிக்கை வைத்த தமுஎகச
Sunday March-20 2022

அறிமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி வெளியான ‘கள்ளன்’ திரைப்படத்திற்கு சில ஜாதி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை மிரட்டியும் வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து படம் வெளியான பிறகும், தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார்கள்.

 

அதேபோல், கடந்த வாரம் வெளியான இந்தி திரைப்படமான ‘காஷ்மீர் ஃபைல்ஸ் ’ திரைப்படத்தை ஆளும் பா.ஜ.க-வினர் ஆதரித்து அப்படத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதோடு, மக்களை அப்படம் பார்ப்பதற்கு தூண்டுவதோடு, அதற்கானபிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய செயலால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பை உண்டாக்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 

இப்படி இந்த இரண்டு திரைப்படங்களின் வெளியீட்டிலும் பிரச்சைனைகள் இருப்பதால், இதில் அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும், என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

இது தொடர்பாக தமுஎகச  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

சந்திரா தங்கராஜ் இயக்கிய “கள்ளன்” என்ற படம் தணிக்கை முடிந்து வெளியாகவிருந்த நிலையில், அப்படம் அதே தலைப்பில் வெளியாவதற்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கு  நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2022 மார்ச் 18 அன்று படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில், தீர்ப்புக்கு விரோதமாக சாதியமைப்புகளைச் சேர்ந்த சிலர் இயக்குநரை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். இயக்குநரை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க சொற்களால் ஏசி மனவுளச்சலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், கள்ளன் படத்தைத் திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திரையரங்கங்களை அச்சுறுத்தி ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரையரங்குகள் பலவற்றை படத்தைத் திரையிடாமல் பின்வாங்கச் செய்துள்ளனர். இவர்களது மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிட்டுள்ள திரையரங்குகள் சிலவற்றில் வன்முறையிலும் ஈடுபட்டுவருகின்றனர். தணிக்கை வாரியத்திற்கும் நீதிமன்றத்திற்கும் மேலான அதிகாரமுடையவர்களாக தம்மை நிறுவிக்கொள்ளும் இவர்களை விமர்சித்து சந்திரா தங்கராஜியின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஆதரிக்கிற ஆளுமைகளையும் மிரட்டிவருகின்றனர்.  இந்த அத்துமீறல்கள் குறித்து இயக்குநர் சந்திரா தங்கராஜ் இணையவழியில் புகார் செய்தும் காவல்துறை எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்ளாதிருக்கிறது. தமிழ்நாடு அரசு இனியும் தாமதிகாமல் கள்ளன் படத்தை திரையிடுவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இப்படத்தை அச்சமின்றி வெளியிடுவதற்கான பாதுகாப்பை வழங்குமாறும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 

 

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம், இஸ்லாமிய வெறுப்பினால் காஷ்மீரின் தனித்தன்மையை அழித்து, ராணுவ வல்லாதிக்கத்தின் முனையில் காஷ்மீரிகளின் வாழ்வுரிமையை அழித்துவருகிற ஒன்றிய ஆட்சியாளர்களின் அரசியல் பிழைகளுக்கு ஆதரவானது. நடப்புண்மைகளுக்கு சற்றும் பொருந்தாவகையில் அப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் பண்பாட்டு ஊழியர்களும் தேர்ந்த திரைக்கலைஞர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களான பாரதிய ஜனதா கட்சியினரும், அரசின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் அப்படத்தை விதந்தோதுகின்றனர். அதை எப்படியாவது பார்க்கவைத்துவிட்டால்  தமது கருத்தியல் செல்வாக்கு மண்டலத்தை பரவலாக்க முடியும் எனக் கருதி அப்படத்தை நாட்டின் பல இடங்களிலும் இலவசமாக காட்டி வருகின்றனர். திருப்பூர் போன்ற இடங்களில், இஸ்லாமிய மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில் உள்ள திரையரங்கில் வெளியிடச் செய்துள்ளனர். படம் முடிந்து வெளியேறப் போகும் பார்வையாளர்களை தடுத்து நிறுத்தி, தேசப்பற்று உறுதிமொழி என்கிற பெயரில் இஸ்லாமியர் மீதான வெறுப்பை உறுதிமொழியாக ஏற்கும்படி வற்புறுத்தி நிறுத்தி வைக்கின்றனர். திரைப்பட ஒளிபரப்பு விதிகளுக்கு மாறான இச்செய்கையின் மூலம் தமிழ்நாட்டில் மதமோதல்களையும் பதற்றத்தையும் உருவாக்க பாரதிய ஜனதா கட்சியினரும் அதையொத்த சங் அமைப்பினரும் வழிவகுப்பதாக தமுஎகச குற்றம்சாட்டுகிறது. காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமது அரசியல்  நிகழ்ச்சிநிரலின் பகுதியாக்கிக்கொண்டு  மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

 

இப்படிக்கு,

 

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ)   

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

8104

Watch Despicable Me 4 in theatres in English, Tamil, Hindi and Telugu on 5th July 2024!
Thursday July-04 2024

Ex-Supervillan, Gru is all set to create mayhem with Lucy, his adorable children, Margo, Edith and Agnes along with the newest addition, Gru Junior...

40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ‘இந்தியன் 2’ விளம்பர பேனர்!
Thursday July-04 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும்  ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

டெட்பூல் & வால்வரின் புதிய அதிரடியான புரோமோ வெளியானது!
Thursday July-04 2024

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...