Latest News :

சூர்யாவின் வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை - மனம் திறந்த நடிகர் சிவகுமார்
Saturday April-16 2022

அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஓ மை டாக்’. நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் இப்படத்தில் அருண் விஜய் அவருடைய தந்தை நடிகர் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக இப்படம் வெளியாக உள்ளது.

 

இதைத் தொடர்ன்ந்து இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் சிவகுமார், படம் குறித்து பேசியதோடு, நடிகர் சூர்யா, சினிமாவில் இப்படி ஒரு வளர்ச்சியை பெற்றது, என்னால் நம்பவே முடியவில்லை, என்று கூறினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. நானும் கிருஷ்ணன் பஞ்சு போன்ற ஏராளமான இயக்குநர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

 

எனக்கும், என்னுடைய நண்பர் விஜயகுமாருக்கும் இடையே 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருக்கிறது. 1967 ஆம் ஆண்டில் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக வேடமிட்டேன். விஜயகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் பேபி முருகனாக வேடமிட்டிருக்கிறார். அப்போதே அவருக்கு சிவகுமார் என்று பெயர். நான் சிவக்குமார் என்பதால், அவர் தன் பெயரை விஜயகுமார் என மாற்றிக் கொண்டார். அதன்பிறகு ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தில் நாங்கள் இருவரும் கதாநாயகர்களாக நடித்தோம். அதன்பிறகு அவரும் நானும் தனித்தனி நாயகனாக நடித்து அவரவர் பாதையில் பயணித்தோம். பின்னர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘சொர்க்கம் நரகம்’ படத்தில் அவரும் நானும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.

 

1964ஆம் ஆண்டிலேயே நாங்கள் நண்பர்களாக இருந்தோம். இந்தப்படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா =மகன்= பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விசயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனை போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான்.  இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான்.

 

எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் ( சூர்யா) என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம் தான்.

 

ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.

 

அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980-88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறான். இறுதியாக  பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம் என்றார்.

 

அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். எங்க அப்பாவை சாலையில் நிற்க வைத்து விட்டார்கள் என கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன்பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

 

Oh My Dog

 

அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக லயோலா கல்லூரிக்கு சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், என் பையனுக்கு காலேஜ் சீட் வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள் என்று சொன்னார்.  நான் ஏன்? என்று கேட்டேன். நடிகர் பாலாஜி பையன், சிவாஜி பையன், கொட்டாரக்கரா பையன்... என திரையுலகினர் யாரும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை என சொன்னார். ஆனால் என் பையன் நிறைவு செய்வான் என உறுதி கூறினேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார். ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம் டிகிரியை முடிக்கவேண்டும் இல்லையென்றால்.. என கோபமாக சொன்னேன் அதன்பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு அவரிடம் எம் காம் என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

 

அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார். என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர், ‘அவர் சிவகுமாரின் பையன் சரவணன்’ என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னை தொடர்புகொண்டு சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா? என கேட்டார். அப்போது அவரிடம் அவனுக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாட தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான் என சொன்னேன். எனக்கும் இதுபோன்ற  குணமான பையன் தான் வேண்டும் என்றார்.

 

டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக அழைத்துக் கொண்டு சென்றார். இப்போதும் கூட அவரிடம் அவன் வாழ்க்கையே நாசம் செய்துவிடாதீர்கள் என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் படம் நடைபெற்றது. அந்த படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார் தான் சென்று வந்தார். அந்தப் படம் வெளியானது. நான் அப்போது படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தார். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி ‘சூப்பராக சொதப்பி விட்டீர்கள்’ என விமர்சனம் செய்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

 

ஆறு மணி காட்சி, அதன்பிறகு இரவு காட்சி என அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் படத்தைப் பார்க்கிறான். அதன்பிறகு எனக்கு போன் செய்து, ‘அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். டொரன்ட்டோவிலிருந்தும்..., வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். பார்த்தேன் பல காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கவில்லை.

 

திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார்.

 

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்த படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார். 

Related News

8166

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery