Latest News :

5 வருட கடின உழைப்பால் உருவான ‘ஓ மை டாக்’! - ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ்
Saturday April-16 2022

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் கருவை தயார் செய்துவிட்டு இதை யார் தயாரித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிறகு 2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை சந்தித்தேன். கதையை கேட்டு உடனே சம்மதம் சொன்ன அந்த தருணம் மறக்க முடியாதது. அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்ததே ஆசீர்வாதமாக நினைக்கிறேன். அவரிடம் கதையை சொன்னபோது, அவர்தான் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்.

 

இரண்டு நாள் கழித்து சமூக வலைதளப் பக்கமொன்றில் அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய்யுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த சூர்யா சார் . 'ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யை சந்தித்து கதையைச் சொல்லுங்கள். அவர்கள் நடிக்க சம்மதம் என்றால் இந்த படத்தை தயாரிக்கலாம்' என்றார். அருண் விஜய்யை சந்தித்து கதை சொன்னவுடன் அவரும் ஆர்ணவ்வை அறிமுகப்படுத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு அவரிடமே கெஞ்சி கூத்தாடி இந்த படத்தில் நீங்களும் உங்கள் அப்பாவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒப்புதல் கொடுத்ததால் தான் இந்தப் படம் ஒவ்வளவு பிரமாண்டமாகவும், தரமாகவும் உருவானது. இதனை ஒரு சர்வதேச தரத்திலான குழந்தைகளுக்கான படைப்பாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆர்ணவ்விற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

 

படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் வருகை தந்து படப்பிடிப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், சண்டைப்பயிற்சி இயக்குநர் செல்வா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா என ஒவ்வொருவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்கி, இந்த படைப்பை செதுக்கியிருக்கிறார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள். ” என்றார்.

 

அறிமுக குழந்தை நட்சத்திரம் ஆர்ணவ் விஜய் பேசுகையில். “இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் சூர்யா அங்கிளும், ஜோதிகா ஆன்ட்டியும் தேர்வு செய்தார்கள். ராஜா அங்கிள், சிவக்குமார் தாத்தா, சரோவ் அங்கிள் அனைவருக்கும் நன்றி. தாத்தா, அப்பா என இரண்டு பேருடன் என்னுடைய முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதற்காக 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கூட நடித்தவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தை பாருங்கள். அனைவரும் ஆசி வழங்குங்கள் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், ”இந்தப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குநர் ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைத்திருக்கிறார். படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் மட்டும் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. படத்தில் நடித்த 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான நாய் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்காக இந்தியாவில் யாரும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை. இதற்காக படத்தில் நடித்த சிம்பா என்ற நாய் குட்டியை, குட்டியாகவே வாங்கி இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்தோம். நிறைய கடின உழைப்பும் தேவைப்பட்டது.

 

இந்த கதையை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்த அருண் விஜய். இந்த படத்தில் ஆர்ணவ் விஜய்யை அறிமுகப்படுத்தியதற்கும், அவருடைய அப்பா விஜயகுமாரை நடிக்க சம்மதிக்க வைத்ததற்கும் நன்றி. மூன்று பேரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று சொன்னதும் சரி என்று சம்மதம் தெரிவித்தார்கள். இவர்கள் ஒப்புக்கொண்டதால் தான் படம் இந்த அளவிற்கு சிறப்பாக உருவாகி இருக்கிறது.

 

ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் இந்தப் படம் வெளியாகிறது. டிசம்பர் மாதமே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும். படத்தில் நாங்கள் 100 நாய்களுக்கு மேல் நடிக்க வைத்திருக்கிறோம். ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச நாய் கண்காட்சியில் படப்பிடிப்பு நடத்தினோம். இதையெல்லாம் திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அத்துடன் ஒவ்வொரு நாய்க்கும் பிரத்யேக அனுமதி கடிதம் வேண்டும் என கூறிவிட்டனர். இதற்கு மூன்று மாத காலம் அவகாசம்  தேவைப்பட்டது. இருப்பினும் ஏப்ரலில் கோடைவிடுமுறையில் வெளியாவதால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.

 

இந்த படத்திற்காக கடினமாக உழைத்த ஒளிப்பதிவாளர் கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஊட்டி படப்பிடிப்பு தளத்தில் அதிகாலையில் முதல் ஆளாக வருகைதந்து படபிடிப்பை நிறைவு செய்ததற்காக ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு இந்த தருணத்தில் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் ஒரு விசுவல் ட்ரீட்டாக தயாராகியிருக்கிறது.

 

இது குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் டிஸ்னியின் தரத்துடன் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து மூன்று பாடல்களையும், பின்னணி இசையை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார். இதற்காக இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு பிரத்தியேக நன்றி. சர்வதேச தரத்தில் இந்த படத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். இதில் வெற்றி பெற்றிருக்கிறோமா..! என்பதை ரசிகர்கள்தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

 

இதன் இயக்குநர் ஏற்கனவே இரண்டு சிங்கள திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஆனால் மிகுந்த அனுபவசாலி போல் பொறுமையாக இருந்து இந்த படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

 

இந்த படத்தின் கதையை கேட்டு, நன்றாக இருக்கிறது படமாக உருவாக்கலாம் என முதலில் சம்மதம் தெரிவித்த சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கும் ஆர் பி டாக்கீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ் ஆர் ரமேஷ்பாபு எங்களது குடும்ப உறுப்பினர். இவர் தற்போது இரண்டு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்காக ஊட்டியில் முகாமிட்டு படப்பிடிப்பை நிறைவு செய்வதில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். '' என்றார்.

 

நடிகர் விஜயகுமார் பேசுகையில், ” 2டி என்ற நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு அண்ணன் சிவக்குமார் தான் மூல காரணம். அவர் விதைத்த விதைதான் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தின் தொடக்க விழாவின் போது,‘ இது போன்ற அபூர்வமான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது’ என சிவக்குமார் குறிப்பிட்டார். அவரிடம்,‘ இது குழந்தைகளுக்கான படம். இதில் நான் எப்படி சிறப்பாக நடிப்பது? என கேட்டேன். இந்த படத்தில் எனக்கு அளிக்கப்பட்ட கண்டிப்பான மிடில் கிளாஸ் தாத்தா கேரக்டரை ஏற்று நடித்து இருக்கிறேன். ‘தாத்தா மகன் பேரன் என்ற மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்து இதற்கு முன் தெலுங்கில் ஒரு படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் இந்தப் படம் தான் தயாராகிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார். உண்மையிலேயே இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அருண் விஜய் கடினமாக உழைத்து இன்று தமிழ் திரை உலகில் நல்லதொரு இடத்தில் இருக்கிறார். அவர் மென்மேலும் வளர்ந்து இன்னும் உயரத்திற்குச் செல்ல வேண்டுமென வாழ்த்துகிறேன்.

 

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய பேரன் ஆர்ணவ் விஜய் யாரோ சிலரிடம், ‘இந்தப்படத்தில் நான்தான் மெயின். என்னுடைய அப்பாவும், தாத்தாவும் சைடு தான்’ என சொல்லிக் கொண்டிருந்தானாம். அதாவது சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதுதான் சைடு என சொல்லி இருக்கிறான். எதிர்காலத்தில் நன்றாக படித்து, பதவிகள் கிடைத்த பிறகு, கலைத்துறையில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நீங்கள் அனைவரும் வாழ்த்துங்கள்.

 

சிவகுமாரும் நானும் 1964 முதல் நண்பர்கள். கிட்டத்தட்ட  55 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருக்கிறோம். சினிமாவுக்கு நல்ல முன்னுதாரணமான குடும்பம் சிவக்குமாரின் குடும்பம். அவர் காபி, டீ அருந்துவதில்லை அந்த காலத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றால், ஒரு பானை நிறைய எலுமிச்சை பழ ஜூஸ் இருக்கும். வருகை தரும் விருந்தினர்களுக்கு ஜூஸ் தான் தருவார். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை பின்பற்றுவார். அந்த ஒழுக்கம் தான் அவருடைய பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். '' என்றார்.

 

படத்தின் நாயகன் அருண் விஜய் பேசுகையில், “என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா-ஜோதிகா ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் அவன் எளிதாக நடித்து விடுவான் என்று நம்பினேன். அவன் செய்யும் சுட்டித்தனங்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் . ஆர்ணவிற்கு நாய்க்குட்டி என்றால் உயிர். நாய்க்குட்டி மட்டுமல்ல அனைத்து விலங்குகளிடமும் அன்பு செலுத்துவான். இதன் காரணமாகவே இந்த கதாபாத்திரத்தை அவன் எளிதாக நடிப்பான் என நினைத்தேன். ஆர்ணவ் விஜய்யுடன் நடித்த சுட்டி குழந்தைகள் அனைவருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பல விசயங்கள் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதொரு நிலையும் இருந்தது.

 

குழந்தைகளையும், நாய்க்குட்டிகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொறுமை வேண்டும். இதற்காக கடுமையாக உழைத்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இயக்குநர் சரோவ் மற்றும் படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தருணத்தில் எதையும் திட்டமிட்டு படமாக்க முடியாது. குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டிகள் அவர்களுக்கான மனநிலையுடன் நடிக்கும் போது அதனை படமாக்கி கொள்ள வேண்டும். அதனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் தான் தூணாக இருந்து செயல்பட்டார் என சொல்லலாம். படப்பிடிப்பு குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பும் இதில் இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். டிஸ்னி படைப்பு போல் ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அதுவும் உலகம் முழுவதும் ‘ஓ மை டாக்’ வெளியாகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி” என்றார்.

Related News

8167

அரசியல் ஆன்மீகம் சினிமா! - கவனம் ஈர்க்கும் நடிகர் மை. பா. நாராயணன்
Tuesday January-21 2025

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...

’நிறம் மாறும் உலகில்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Tuesday January-21 2025

இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ' நிறம் மாறும் உலகில் ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்...

’மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இளைஞர்களுக்குப் பிடித்த ஜாலியான படமாக இருக்கும் - இயக்குநர் பி.வாசு உறுதி
Tuesday January-21 2025

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘மிஸ்டர்...

Recent Gallery